இளைஞர்களுக்கு வாழ்க்கைக் கனவுகளையும், லட்சியங்களையும் அடையாளம் காட்டும் ஒரு தளமாக மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது ‘தி கிளைம்பர்’ (The Climber) நிறுவனம். இந்நிறுவனம் 2015-ல் தொடங்கிய ‘மைகேப்டன்’ (Mycaptain.in) என்ற இணையதளம் இளைஞர்கள் வாழ்க்கைக் கனவை எப்படித் தேர்ந்தெடுப்பது, அதை எப்படி நனவாக்குவது என்பதற்கான ஆலோசனைகளை ஆன்லைனில் வழங்கிவருகிறது.
செப்டம்பர் 25-ம்தேதி, இந்நிறுவனம் இந்திய இளைஞர்கள் மாநாடு (Indian Youth Conclave) என்ற ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை ‘சின்மயா ஹெரிட்டேஜ் சென்டரில்’ நடைபெற்ற இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர். ஒரு நாள் கருத்தரங்கமாக நடந்த இந்த மாநாட்டில் பல துறைகளில் சாதித்த நிபுணர்களும் இளைஞர்களும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். “இந்திய இளைஞர்கள் மாநாடு மூன்றாவது ஆண்டாக சென்னையில் நடக்கிறது. இன்றைய இளைஞர்களுக்குப் பெரிய பிரச்சினை, தங்களுக்குப் பேரார்வமுள்ள துறையை அடையாளம் கண்டுகொள்வதுதான்.
அப்படியே தங்களுக்குப் பேரார்வமுள்ள துறையை அடையாளம் கண்டுகொண்டாலும் அதில் எப்படி சாதிப்பது என்ற சரியான வழிகாட்டல் இல்லாமல் தவிக்கிறார்கள். பெரும்பாலான இளைஞர்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்கும் நோக்கத்தில்தான் ‘மைகேப்டன்’ தளத்தை உருவாக்கினோம். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த மாநாட்டையும் ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்கிறார் ‘தி கிளைம்பரின்’ இணை நிறுவனர் ருஹான் நகாஷ்.
சென்னையைத் தொடர்ந்து இந்த இளைஞர்கள் மாநாடு வேலூர், திருச்சி, பெங்களூரு, நாக்பூர், டெல்லி, புவனேஷ்வர், விசாகப்பட்டினம், மணிப்பால் போன்ற நகரங்களிலும் நடக்கவிருக்கிறது. “இன்றைய இளைஞர்கள் புதுமையான துறைகளில் சாதிக்க நினைக்கிறார்கள். அதனால்தான், அவர்களுக்கு உதவும் வகையில் கலை, இசை, இலக்கியம், அறிவியல், நாடகம், நடனம், விளையாட்டு, தொழில்நுட்பம் போன்ற துறைகளிலிருந்து இளம்சாதனையாளர்களை அழைத்து இந்த மாநாட்டில் பேசவைத்திருக்கிறோம்” என்று சொல்கிறார் ருஹான்.
இந்த மாநாட்டில் முதல் கட்டமாக நடந்த கருத்தரங்கில், மாற்றத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு செயல்படும் ஃபேஷன் உலகில் நிலைத்து நிற்பதற்கான வழிகளை ஃபேஷன் டிசைனர் விவேக் கருணாகரன் பகிர்ந்துகொண்டார்.
அறிவியல் துறையில் பணி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் இருக்கும் சவால்கள், அதை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் எனத் தன்னுடைய அனுபவங்களைப் பேசினார் இளம் விஞ்ஞானி சஹானா நிவாசன். “ஒரு விஞ்ஞானியாவதற்கு மனஉறுதியும் பொறுமையும் முக்கியமான தகுதிகள். இந்த இரண்டு விஷயங்களும் இல்லாமல் அறிவியல் துறையில் சாதிப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை” என்று சொல்கிறார் அவர்.
இந்தியாவில் முதல் ‘கிளிக் ஆர்ட் மியூசியம்’ தொடங்கிய ஓவியர் ஏ.பி. தர், சமையல் கலையில் சாதித்த ‘செஃப்’ வில்லி போன்ற துறை சார்ந்த நிபுணர்களும் இந்த மாநாட்டில் தாங்கள் கடந்து வந்த பாதையைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற கருத்தரங்கம் கூடுதல் சுவாரசியத்துடன் அமைந்திருந்தது. சென்னையின் ‘அகாடமி ஆஃப் மாடர்ன் டான்ஸ்’ கோகிலா ஹரிராமின் நடனம், இளம் கவிஞர் ஹரிநித் கவுரின் கவிதை எழுதுவதற்கான ஆலோசனைகள், ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்துவதற்கான ஹர்ஷ் சோங்கராவின் உத்திகள், ‘ஸ்ட்ரே ஃபாக்ட்ரி’ புகழ் ஷ்யாம் ரெங்கநாதனின் நகைச்சுவை போன்றவை மாநாட்டை மேலும் உற்சாகமானதாக மாற்றின.
இதுதவிர, இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுடைய ஒளிப்படங்களைக் கண்காட்சியாக வைக்கவும், கதைகள் எழுதவும், ஓவியம் வரையவும், நிபுணர்களுடன் பேசவும் தனித்தனியாக அரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
‘தி கிளைம்பர்’ பற்றி மேலும் தெரிந்துகொள்ள >https://www.facebook.com/theclimberorg/