இளமை புதுமை

இணையதள வேகம்... இது இளைஞர்களின் விவேகம்!

டி.எல்.சஞ்சீவி குமார்

“அடிப்படையில் நண்பர்கள் நாங்கள் மென்பொருள் பொறியாளர்கள்” என்று அமைதியாக ஆரம்பிக்கிறார் ஆதித்யன். இவரை அறிமுகப்படுத்த வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்: வாக்குறுதிகளை வாரி இறைத்து மக்களிடம் அரசியல் கட்சிகள் வாக்குச் சேகரித்துவரும் வேளையில், தேர்தல் ஆணையத்துக்கே மாபெரும் சேவையைச் செய்திருக்கின்றனர் ஆதித்யன் அண்ட் கோ!

அது என்ன சேவை? அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்...

"சாஃப்ட்வேர் இன்ஜினியர்களாக இருந்த எங்களைச் சமூகம் நோக்கித் திருப்பியது சென்னை வெள்ளம். அப்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஊரை விட்டு ஓடினோம். ஆனால், சென்னையில் பலர் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதைப் பார்த்து நாங்கள் வெட்கப்பட்டோம். உடனே திரும்பி வந்தோம். நானும் என் நண்பர்களும் சேர்ந்து அப்போது முடிந்த வரையில் உதவிகள் செய்தோம். அந்த ‘ஸ்பிரிட்'டை அப்படியே விட்டுறக் கூடாதுன்னு முடிவு பண்ணி, இந்தச் சமூகத்துக்கு எங்களால் முடிஞ்ச அளவுக்கு உதவிகள் செஞ்சிக்கிட்டு வந்தோம்.

அப்போதான் தமிழகத் தேர்தல் அறிவிப்பு வந்தது. ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கினோம். சென்னையில் ஆறு இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் இணையதள வாக்காளர் சேவை முகாம்களை நடத்தினோம். தவிர, இதுபோன்ற பணிகளை இணையத்தில் எப்படிச் செய்வது என்று அரசு அலுவலர்களுக்கு ஒரு பயிற்சி முகாமை நடத்தினோம். அதில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார்.

இந்நிலையில், தமிழகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் செயல்படும் வேகம் மிகவும் குறைவாக இருப்பது தெரியவ‌ந்தது. ஒரு பதிவுக்கே குறைந்தது 15 முதல் 30 நிமிடங்கள் வரை கால தாமதம் ஆனது. தவிர, நிறைய தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தன. இதனால், எங்கள் முகாம்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை முற்றிலுமாகச் சீரமைத்தால்தான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நினைத்தோம். இதுகுறித்துத் தேர்தல் ஆணையருக்குத் தகவல் அளித்தோம். அடுத்த நிமிடமே அழைப்பு வந்தது. தேர்தல் ஆணைய இணையதளத்தின் தொழில்நுட்ப மேலாளரும் வரவழைக்கப்பட்டார். அவர்களின் இணையதளத்திலுள்ள தொழில்நுட்பச் சிக்கல்களை விவரித்து முழுமையான மென்பொருள் ஆய்வு செய்ய வேண்டும் என்றோம். தேர்தல் ஆணையரும் ஒப்புக்கொண்டார்.

மறுநாளிலிருந்து எங்கள் குழுவிலிருந்து நான்கைந்து பேர் பணி முடிந்த பின்பு இரவு 8 மணிக்குத் தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று பின்னிரவு 2 மணி வரை அதன் இணையதளத்தில் வேலை பார்த்தோம். சுமார் 15 நாட்கள் இப்படி வேலை செய்த பின்பு தேர்தல் ஆணையத்தின் இணையதளம் முழுமையாகச் சீரானது. நீங்கள் நம்பவில்லை எனில் இப்போது www.elections.tn.gov.in/eregistration என்கிற இணையதளத்துக்குச் சென்று பாருங்கள், புரியும்” என்றார் ஆதித்தியன்.

இவர்களின் அமைப்புக்கு ‘நாம் விரும்பும் தமிழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்போதைக்கு அரசியல் நகர்வு இல்லை என்றாலும் தங்களது லட்சியங்களாக ஊழல் இல்லாத அரசு, அரசாங்க ஊழியர்களின் கடமை தவறாமை, பொது மக்களின் கடமை தவறாமை, சுத்தமான, சுகாதாரமான தமிழகம், தனி மனித ஒழுக்கம், வெளிப்படையான நிர்வாகம், இயற்கை விவசாயம், இயற்கை வளத்தைக் காத்தல், அனைத்துத் துறைகளையும் கணினி மயமாக்கல் என்பது உள்ளிட்ட‌ மொத்தம் 14 செயல்திட்டங்களை வகுத்து வைத்துள்ளார்கள் இந்த இளைஞர்கள்.

விரைவில் இவர்கள் விரும்பும் தமிழகம் மலரும் என்று நம்புவோம்!

SCROLL FOR NEXT