இளமை புதுமை

உலகின் (அவ)லட்சணமான நாய்!

செய்திப்பிரிவு

அழகு என்பது அவரவர் பார்க்கும் பார்வையிலும் கண்ணோட்டத்திலும்தான் இருக்கிறது. இயற்கையின் படைப்பில் அழகற்ற பொருள் என்று ஒன்று இல்லவே இல்லை. பார்வைக்கு மென்மையாகத் தெரிபவர்கள், குணநலன்களிலும் அதற்கு நேர்மாறாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. கரடுமுரடாகத் தெரிபவர்கள் அதற்கு மாறான குணத்தோடும் இருக்கலாம். எதையும் நம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், மனிதர்கள் தங்களுக்குள் நிறத்தாலும் இனத்தாலும் பிரிவினையை ஏற்படுத்துவது போதாதென்று தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளையும் அவ்வாறே தரம் பிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ‘உலகின் அவலட்சணமான நாய்’க்கான போட்டி ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் 2022ஆம் ஆண்டின் அவலட்சணமான நாயாக (17 வயது) ‘மிஸ்டர் ஹேப்பி ஃபேஸ்’ என்கிற நாய் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. ‘சிஹூஹூவாமிக்ஸ்’ என்கிற இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் உடலில் சிறுசிறு கட்டிகளும் தழும்புகளும் காணப்படுகின்றன. மேலும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையும் இந்த நாய்க்கு இருக்கிறது. நடக்கவும் நேராக நிற்கவும் இதன் உடல்நிலை ஒத்துழைக்காதது மட்டுமின்றி தலையும் கோணலாக இருக்கிறது. (இத்தனை பிரச்சினைகள் இருக்கிற இந்த நாய்க்கு வைத்திருக்கிற பெயர் மிஸ்டர் ஹேப்பி ஃபேஸ்!) இந்த நாய் குரைக்கும் சத்தமும் டிரக் வண்டியின் இன்ஜினிலிருந்து எழும் சத்தத்தைப் போல் இருக்குமாம்.

இந்த நாயை ஜெனிடா பெனெல்லி என்பவர் 2021லிருந்து வளர்த்து வருகிறார். தீவிர உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நாயால் இன்னும் சில வாரங்களோ மாதங்களோதான் உயிர் பிழைத்திருக்க முடியுமாம். கடந்த 2018ஆம் ஆண்டில் விருதுபெற்ற நாயும் ஒரு சில மாதங்களில் உயிரிழந்திருக்கிறது. நம் ஊரில் நலிவுற்ற பிறகுதான் கலைஞர்களுக்கு விருது அறிவிப்பார்கள் அல்லவா, அதுபோன்றதுதான் இதுவும் போல.

மிஸ்டர் ஹேப்பி ஃபேஸ் வெற்றி பெற்றதன் மூலம் ஜெனிடா பெனெல்லிக்கு இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 18 ஆயிரம் பரிசுத்தொகை கிடைக்கவிருக்கிறது. இந்தப் பரிசுப் பணத்தை எடுத்துக்கொண்டு மிஸ்டர் ஹேப்பி ஃபேஸுடன் நியூயார்க்கைச் சுற்றி வரத் திட்டம் போட்டிருக்கிறாராம். கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாய்களுக்கான இந்த அவலட்சணப் போட்டி நடைபெறாமல் இருந்துவந்த நிலையில், இந்த ஆண்டு முதல் மீண்டும் நடைபெறத் தொடங்கியிருக்கிறது.

அவலட்சணமான நாய்கள் என்று கருதப்பட்டாலும் இந்த நாய்களின் ஒளிப்படங்ளைப் பார்க்கும்போது ஆணவம், கோபம், பேராசை, வன்மம் போன்ற மனிதர்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்துபவையாக தோற்றம் அளிப்பது ஆச்சரியம்தான்.

SCROLL FOR NEXT