இளமை புதுமை

நினைவுகளை மீட்டெடுத்த பழைய பாடல்கள்

வா.ரவிக்குமார்

இனிமையான இசை, உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் மெட்டுகள், மிகவும் நுட்பமான இசைச் சங்கதிகள் இத்தனையையும் ஒருங்கே கொண்டவை 1950 முதல் 1960களில் வெளிவந்த தமிழ்த் திரைப்படப் பாடல்கள். காற்றில் கலந்திருக்கும் அந்தப் பாடல்களை உருவாக்கிய இசையமைப்பாளர்கள் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், ஆர். சுதர்சனம், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா, வி.குமார் ஆகியோருக்கு புகழ் சேர்க்கும் விதமாக, அவர்கள் இசையமைத்த பாடல்களைக் கொண்டே `கோல்டன் தமிழ் கிரேட்ஸ்' என்னும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றனர் ராமகிருஷ்ணன் மற்றும் அவருடைய நண்பர்கள். இவர்களின் இசை நிகழ்ச்சி அண்மையில் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.


கீதா ஜெயராமன், பார்கவ், ப்ரியா ஜெயராமன், ஹரிஷ், சீதா அனந்தகிருஷ்ணன் ஆகியோர் சுசிலா, எல்.ஆர். ஈஸ்வரி, ஏ.எம். ராஜா, பி.பி.எஸ். ஆகியோர் பாடிய பாடல்களை, உணர்வுபூர்வமாக தங்களின் குரலில் எதிரொலித்தனர். குழுவில் இருக்கும் பலரும் பல துறைகளில் உயர்ந்த பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். குழுவில் இளைஞர்கள் சிலரும் இருந்தனர்.

பழைய பாடல்களில் நிறைந்திருக்கும் இலக்கியச் சுவை, நயம், பாடகர்களின் பெருமை, இசை நுணுக்கம் போன்றவற்றைப் பற்றிய சுவாரஸ்யமான குறிப்புகளையும் அறிவித்தபடி, நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வாத்தியக் கலைஞராகவும் நிகழ்ச்சியில் ஜொலித்தார் ராம் என். ராமகிருஷ்ணன்.

நிகழ்ச்சியின் இடையே ராமகிருஷ்ணன், "ஏ.எம்.ராஜா, கிஷோர்குமார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று பேரையும் இணைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. அது என்ன? உங்களால் ஊகிக்க முடிகிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.
அரங்கத்தில் இருந்தவர்கள், "மூன்று பேருமே இசையமைப்பாளர்கள்" என்றனர்.


"அது சரியான பதில் இல்லை" என்றவர், அதற்கான பதிலையும் கூறினார்.


"ஏ.எம்.ராஜா, கிஷோர்குமார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மூன்று பேருக்கும் இருக்கும் ஓர் ஒற்றுமை - ஏ.எம்.ராஜா 1953ல் `பக்க இண்டி அம்மாயி' என்னும் தெலுங்குப் படத்தில் பாடகராக நடித்தார். அந்தப் படம் தமிழில் எடுக்கப்பட்டு, 1968இல் இந்திக்குப் போனது. இந்தியில் `படோசன்' என்னும் அந்தப் படத்தில் ஏ.எம்.ராஜா நடித்த அதே பாடகர் வேடத்தில் நடித்தவர் கிஷோர்குமார். 1981ல் `பக்கிண்டி அம்மாயி' தெலுங்கிலேயே மீண்டும் எடுக்கப்பட்டது. இதில் அந்தப் பாடகர் பாத்திரத்தில் நடித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இதுதான் இந்த மூவருக்கும் இருக்கும் ஒற்றுமை.


‘பராசக்தி’ படத்திலிருந்து ஆர்.சுதர்சனம் இசையமைத்த `ஓ ரசிக்கும் சீமானே' தொடங்கி விண்ணோடும் முகிலோடும், நான் நன்றி சொல்வேன், அத்தானின் முத்தங்கள், ஞாயிறு என்பது கண்ணாக, மாடி மேல.. போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைப் பாடி நம்மை அந்தக் காலகட்டத்தில் சில மணி நேரம் சஞ்சரிக்க வைத்தனர். பழைய பாடல்களிலும் அதைப் பாடியவர்களிடமும் பார்ப்பவர்களிடமும் இளமை ஊஞ்சலாடியது!


யூடியூபில் நிகழ்ச்சியைக் காண:
https://www.youtube.com/watch?v=i0ES9kpGrjs

SCROLL FOR NEXT