‘இந்த' பணவீக்கம்'னு போடறாங்களே, அப்படின்னா என்னாங்க?'
பல விஷயங்களை நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் அதன் உண்மையான பொருள் என்ன என்று தெரிந்துகொள்ள முயற்சிப்பது இல்லை. அதிலும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது என்றால், பலருக்கும் ஆர்வம் இருப்பது இல்லை.
இதனால் பலரும் தங்களுக்கு உள்ள அரைகுறை அறிவை வைத்துத் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறார்கள். தவறான தகவல்களைத் தந்துகொண்டிருக்கின்றனர்.
பணவீக்கம் என்றால்?
மருத்துவத் துறையில் புற்றுநோய் எப்படியோ, அப்படித்தான் பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பதும். உலகம் எங்கும் உள்ள பொருளாதார நிபுணர்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருப்பது இதுதான்.
பணவீக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதற்கு விடை காணும் முன், பணவீக்கம் என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம்.
ஒருவருக்கு ஏதோ பூச்சி கடித்து இரு கைகளும் வீங்கியிருக்கிறது என்று கொள்வோம். அதைப் பார்த்து, ‘ஆகா, மகா பலசாலி ஆகிவிட்டார். பாருங்கள், கைகள் இரண்டும் எவ்வளவு வலுவாக இருக்கின்றன!' என்று சொல்வோமா? இல்லை.
ஏன்? நமக்குத் தெரியும், அது வளர்ச்சி அல்ல, வீக்கம் என்று. வலிமை அன்று. வலி. இயல்புக்கு மேலாக, ஆரோக்கியம் இல்லாமல் பருமனாக இருந்தால் வீக்கம்.
இதேபோலத்தான், இயல்பான அளவைக் காட்டிலும், மிக அதிகமாகப் பணம் புழக்கத்தில் இருந்தால் பொருட்களின் அளவு குறைந்து பண வரத்து கூடிக்கொண்டே போனால், அதுவே பண வீக்கம்.
பணம் தன்னளவில் தான் மட்டுமே எந்த விதத்திலும் பலன் தர வல்லது அல்ல. மண்ணாகவோ பொன்னாகவோ பொருளாகவோ மாற்றும் போதுதான், பணம் நமக்குப் பயனுள்ளதாகிறது. அப்படி மாற்றி அடைய வேண்டிய பொருள் அரிதாகி, அரிதாகிக் கிடைக்காமலே போனால், பணம் எவ்வளவு இருந்தால்தான் என்ன?
வேண்டியதை வாங்குவதற்குப் பணத்துக்கு மதிப்பு இல்லை என்றால் பணம், வீங்கிக் கிடக்கிறது என்று பொருள். பணவீக்கத்தைப் பொருளாதாரம் எப்படி விவரிக்கிறது?
‘மிக அதிக அளவிலான பணம், மிகக் குறைவான பொருட்களை விரட்டும் நிலைமையே பணவீக்கம்'.
இந்த விளக்கத்தை, அவசியம் நாம் தெரிந்திருக்க வேண்டும். தவறாமல் அப்படியே பதிய வைத்துக்கொள்ள வேண்டும். எழுத்து, நேர்முகத் தேர்வுகளில் மிகவும் பயன்படும்.
கையில் பணம்... பையில் பொருள்!
பணம் மிகுந்து இருக்கிறது. வேண்டிய பொருட்கள் மிகக் குறைந்த அளவே உள்ளன. இந்தச் சமன்பாடுதான் பணவீக்கம்.
பணம் என்றால் கைக்கு அடக்கமாக, சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு போகலாம். பத்து ரூபாயாக இருந்தாலும், ஆயிரம் ரூபாயாகவே இருந்தாலும் அப்படித்தான்.
அதே சமயம், எதாவது வாங்கி வரணும்னா, குறைந்த பட்சம் ஒரு பாலிதீன் பையாவது கொண்டு போகிறோம் இல்லையா?
இதை, இப்படிச் சொல்லலாமா பாருங்க: 'கையில பணத்தைக் கொண்டு போயி, பையில பொருளை வாங்கி வரலாம்'.
சரிதானே, ஆனால் ‘பை நிறைய பணத்தைக் கொண்டு போனாத்தான், ஒரே ஒரு ரொட்டியேனும் கையில வாங்கி வரலாம்'. கதை மாதிரி இருக்கா? நிஜத்தில் நடந்தது.
கடுமையான பணவீக்கத்தின் படு மோசமான விளைவுகள் எப்படி இருக்கும்?
இதனைப் படித்தே ஆக வேண்டும்.
அறிவியலில், தொழில் வளர்ச்சியில், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் ஜெர்மனியில் சென்ற நூற்றாண்டில் நடந்த உண்மை வரலாறு இது.
ஜெர்மனியில் நடந்தது என்ன?
முதல் உலகப் போர். ஜூலை 1914 - நவம்பர் 1918. ‘எப்படியும் நாம்தானே வெற்றி பெறப் போகிறோம்?' என்கிற நம்பிக்கையில், மனம் போன படி கடன் வாங்கிப் போரிட்டது ஜெர்மனி. தன் சக்திக்கு மீறி, பல நூறு மடங்கு, கடன்களைத் தன் மேல் சுமத்திக் கொண்டது.
போரில் எதிரிகளை வென்று, அவர்களின் வளங்களை அபகரித்து, கடன்களைத் திருப்பித் தந்துவிடலாம் என்பது திட்டம். ஆனால், அந்தப் போரில் படு தோல்வியைச் சந்தித்தது ஜெர்மனி.
கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி. என்ன செய்யலாம்?
ஒரு அதிமேதாவி அற்புதமான யோசனையை முன்வைத்தார்.
‘எவ்வளவு வேண்டியிருக்கோ அந்த அளவுக்கு, கரன்சியை அடிச்சுத் தள்ளுவோம்'.
‘அதுதான் சரி' என்று முட்டாள்தனமாகத் தீர்மானித்து, செயலில் இறங்கியது அப்போதைய அரசு. நூற்றுக் கணக்கான ஆலைகள் இரவும் பகலுமாக அச்சடித்து அச்சடித்துக் குவியல் குவியலாகப் பணக் கட்டுகளை வெளியேற்றிய வண்ணம் இருந்தன. எங்கு பார்த்தாலும் பணக் குவியல்கள். விளைவு?
1923. கட்டுக்கடங்காத பணவீக்கம். தத்தளித்தது ஜெர்மனி. எல்லார் கையிலும் ஏராளமாகப் பணம். வீட்டில் அடுப்பு எரிக்க, சுவரில் அழகுக்கு ஒட்டி வைக்க, குழந்தைகள் கப்பல் விட, கை துடைக்க, தரை சுத்தம் செய்ய என இன்னும் எது எதற்கோ பயன்பட்ட பணம், ஏதேனும் பொருள் வாங்க மட்டும் பயன்படவில்லை!
பொருட்களின் விலை தாறுமாறாய் ஏறிப் போனது. ஹோட்டலில் ஒரு இட்லி ஆயிரம் மார்க்கு (ஜெர்மனியின் கரன்ஸி) என்று சாப்பிடக் கேட்டால், சாப்பிட்டு முடிக்கும் போது அதன் விலை இரண்டாயிரம் மார்க்கு!
ஏதோ கற்பனைக் கதை என்று எண்ணி விட வேண்டாம். அத்தனையும் நூறு சதவீதம் உண்மை.
டெம்போவில் பணத்தை ஏற்றிக் கொண்டு சென்று, கையில் மளிகைப் பொருட்களை வாங்கி வந்த கதைகள் எல்லாம் சாதாரணம்.
ஏன் விலை ஏறுது?
ஆமாம், பணம் மிகுந்து இருந்தால், விலைவாசி ஏன் ஏற வேண்டும்? ஒருவன் நூறு ரூபாய் கொடுத்து வாங்க நினைக்கிற பொருளுக்கு வேறு ஒருவன் ஆயிரம் ரூபாய் தருவதற்கு முன் வந்தால், நாமாகவே இருந்தாலும் என்ன செய்வோம்? இதுவே மற்றொருவன் இரண்டாயிரம் தந்தால்? அதிகத் தொகைக்கு ஏலம் விடுவது போலத்தான்.
ஒரு ஹோட்டல். இரண்டு இட்லி, நூறு ரூபாய். ஒருவன் சாப்பிட ஆர்டர் தந்து விட்டான். வேறு ஒருவன் வருகிறான். ‘இட்லி தீர்ந்து விட்டது' என்கிறோம்.
‘அப்படிச் சொல்லாதீர்கள். நூறு ரூபாய்க் கட்டையே தருகிறேன். எனக்கே அந்த இரண்டு இட்லியையும் கொடுங்கள்' என்கிறான். என்ன ஆகிறது? விலைவாசி எகிறுகிறது.
சாமானியர்களைத்தான் பணவீக்கம் மிகவும் கோரமாகத் தாக்குகிறது. உணவுப் பொருள் தட்டுப்பாடு, வேலையின்மை, வறுமை எல்லாம் பணவீக்கத்தின் வெகுமதிகள்.
ஆக, பணவீக்கம் மிகக் கொடுமையான அரக்கன். புரிகிறதுதானே? இதன் கோரக் கைகளில் நமது பொருளாதாரம் சிக்கிக்கொண்டுவிடுமா?
அச்சம் வேண்டாம். இந்தப் பேராபத்திலிருந்து காப்பாற்ற, தகுந்த ஆயுதங்கள் தாங்கி, நம்மிடம் ஒரு வீரன் இருக்கிறான்.
யார் அவன்? என்ன ஆயுதங்கள்?
(வளரும்)