பரிசுப் பொருட்கள் என்றாலே நேரில் சென்றுதான் வாங்க வேண்டும் என்றில்லை. இணைய வழியிலேயே வாங்கிவிடலாம். ரசனைமிக்க பரிசுப் பொருட்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் சில...
டைம்ஸ் அட்டைப்படக் கண்ணாடி
புகழை விரும்பாதவர் யார்? அதுவும் உலகப் புகழ்பெற்ற ‘டைம்’ அட்டைப் படத்தில் உங்கள் முகம் வெளிவருவதென்றால் சும்மாவா? அதற்கு நாம் விஐபியாகவோ, விவிஐபியாகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. கண்ணாடியால் செய்யப்பட்ட ‘டைம்’ அட்டைப் படத்தைப் போன்ற ஒரு ஃபிரேம் இணையத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதைச் சுவரில் மாட்டி வைத்து அவ்வப்போது ‘டைம்’ அட்டைப்படக் கண்ணாடியில் நம் முகத்தைப் பார்த்துப் புளகாங்கிதம் அடையலாம். தற்பெருமை பேசும் நண்பர்களுக்கும் இதைப் பரிசளித்து அவர்களையும் பெருமைகொள்ளச் செய்யலாம்.
கையெறிகுண்டு தேநீர்க் கோப்பை
காபி, தேநீர் கோப்பைகள் பல வடிவங்களில் சந்தையில் கிடைக்கின்றன. அதில் ஒன்று, கையெறிகுண்டு வடிவத்தில் இருக்கும் காபி கப். பார்ப்பதற்கு அச்சு அசல் கையெறி குண்டைப் போலவே இருக்கும் இது உங்களிடம் அடித்துப் பிடித்துப் பழகும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசாகக் கொடுப்பதற்கு நல்ல சாய்ஸ். இதில் காபி, டீ மட்டும்தான் குடிக்க வேண்டும் என்றில்லை, பென்சில், பேனாக்களை வைப்பதற்கான ஸ்டாண்டாகவும் பயன்படுத்தலாம். பீங்கானில் செய்யப்படுகிற இந்தக் கோப்பைகள் பல வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
கமாண்டோ பேக் கேஸ்
‘கமாண்டோ’ படத்தில் இந்த வகை ‘bazooka’ இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டு அர்னால்டு எதிரிகளைத் தாக்குவதை எல்லோரும் பார்த்திருப்போம். இப்போது இந்தக் காட்சியையே ஐபோனின் பின்புற கவராக (Back case) மாற்றி விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஐபோன் 11 pro மாடலிலிருந்து 12, 13 pro மாடல்களை வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பின்புற கவர் பொருத்தமாக இருக்கும். என்ன ஒன்று, ஐபோனை போலவே இதன் விலையும் கொஞ்சம் அதிகம். 2,722 ரூபாய்க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.
மினியேச்சர் புல்லட்
பைக் ஓடுவதற்கு நட்டு, போல்ட் உள்ளிட்டவை தேவை. ஆனால், வெறும் நட்டு, போல்ட், பேரிங், ஸ்பிரிங்குகளை மட்டுமே பயன்படுத்தி கையால் வடிவமைக்கப்பட்ட மினியேச்சர் புல்லட் விற்பனைக்குக் கிடைக்கிறது. 5 இன்ச் அகலம், 3 இன்ச் உயரம், 350 கிராம் எடையும் கொண்ட இந்த புல்லட் பரிசளிப்பதற்கும் அலங்காரப் பொருளாகக் காட்சிப்படுத்துவதற்கும் ஏற்றது. ரூ. 299 விலையில் அமேசானில் விற்பனையாகிறது.