அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் வசித்து வரும் இளம் காதல் தம்பதி கர்டிஸ் மற்றும் ஜார்டின். இவர்கள் இருவருக்குமே போட்டோகிராஃபிதான் பேஷன் மற்றும் புரொஃபஷன்!
தங்களை அணுகும் காதலர்கள், திருமணம் நிச்சயமானவர்கள், புதிதாகத் திருமணம் செய்துகொண்டவர்கள் ஆகியோரை காதல் கொஞ்சல்கள், கெஞ்சல்கள் ததும்பத் ததும்ப போட்டோ எடுத்துத் தரும் தொழிலைச் செய்துவருகிறார்கள். இந்த ஒளிப்படங்களால் இவர்களுக்கு உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், ஜார்டின் ‘போட்டோ 365' எனும் புராஜெக்ட்டை ஆரம்பித்தார். அவருக்குக் கம்பெனி கொடுக்கும் விதமாக ‘டிராயிங் 365' எனும் புராஜெக்ட்டைத் தொடங்கினார் கர்டிஸ். தீம்: தங்கள் காதல் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு ஓவியமாக வரைவது!
2011, மார்ச் 4-ம் தேதி தொடங்கிய இந்த ‘காதல் ஓவிய' பயணம் 2012-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி நிறைவுற்றது. புராஜெக்ட் கம்ப்ளீட்டட்! ஆனால் காதலுக்கு எப்போதும் புல்ஸ்டாப் இல்லையே. அதனால் தொடர்ந்து தங்கள் காதல் வாழ்க்கையின் அத்தியாயங்களை தினம் ஒரு படமாகத் தன் வலைதளத்தில் பதிவேற்றிவருகிறார் கர்டிஸ்.
“நானும் ஜார்டினும் ஒரே கலை உயிர்கள். அவள் இதயத்துடிப்பாக இருக்கிறாள். நான் ஓவியம் வரையும் கரங்களாக இருக்கிறேன். இந்த ஓவியங்களை ‘நான்' வரைந்தேன் என்று நீங்கள் நினைத்தால் மன்னியுங்கள். ‘நாங்கள்' வரைந்தோம்” என்று 'ஸ்டேட்டஸ்' தட்டுகிறார் கர்டிஸ்.
இந்த ஓவியங்களைக் கொண்ட ‘காஃபி டேபிள்' புத்தகமாகவும் விரைவில் வரவிருக்கிறது. என்ன இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது, உங்களுக்கும் காதல் பூக்கிறதுதானே! அப்போ மேலதிக ஓவியங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்: >http://drawings365.com/page/4