இளமை புதுமை

வைரல் உலா: தீ.. தீ.. தித்திக்கும் தீ!

செய்திப்பிரிவு

திருமணங்களை மிக வித்தியாசமாக நடத்த வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய இளைய சமுதாயம் மத்தியில் பெருகிவிட்டது. பாராசூட்டில் பறந்தபடி திருமணம், விமானத்தில் பயணம் செய்து திருமணம், தண்ணீருக்கடியில் திருமணம் என்று வித்தியாசம் காட்டிக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவில் அதற்கும் ஒரு படி மேலே சென்றுவிட்டது ஒரு புது மண ஜோடி.

தேவாலயத்தில் திருமணத்தை முடித்தவுடனே உடையில் நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு இந்த ஜோடி சாகசம் செய்திருக்கிறது. கேப் ஜெசோப் - ஆம்பயர் பாம்பயர் ஜோடியின் சாசகத் திருமண வீடியோ வைரலான நிலையில், இவர்களுடைய செயலும் பேசுபொருளாகியிருக்கிறது. தங்களுடைய திருமண நாள் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஜோடி இப்படி செய்திருக்கிறது. இவர்கள் இருவரும் ஹாலிவுட் சண்டைக் கலைஞர்கள் என்பதால், உடலுக்குச் சேதாரம் இல்லாமல் சாகச நிகழ்வு முடிந்திருக்கிறது. தங்கள் திருமணம் பேசப்பட வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதற்காக இப்படியெல்லாமா செய்வார்கள்?

பாம்பு சாக்லெட்!

படத்தில் உள்ள சமையல் கலைஞர் பாம்புடன் நெருக்கமாக போஸ் கொடுக்கிறார் என்று நினைத்துவிட வேண்டாம். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் அமெளரி குய்சோன், இனிப்பு வகைகள் செய்வதில் புகழ்பெற்றவர். அப்படி இனிப்புகள் செய்யும் காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதும் அவருடைய பழக்கம். நேர்த்தியாகச் செய்யும் இவருடைய சமையலை ரசிக்கவே இன்ஸ்டாகிராமில் 73 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரைப் பின்தொடர்கிறார்கள். அண்மையில் ராஜ நாகம் வடிவில் சாக்லேட்டைச் செய்து அசத்தினார் அமெளரி. இந்தப் பாம்பு சாக்லேட்டைச் செய்து இன்ஸ்டாவில் காணொளியை வெளியிட்ட அரை நாளிலேயே 45 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதனால், இந்தப் பாம்பு சாக்லேட் காணொளி வைரலாகிவிட்டது.

SCROLL FOR NEXT