இளமை புதுமை

பொருள்தனை போற்று!- 17: ஒரு கை... ஒரு கயிறு!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

‘எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். வட்டிக்குப் பணம் கொடுக்கிறது சரியா தப்பா? அது பாவம்னு சொல்றாங்களே அப்படியா?'

‘பொருளாதாரத்தைப் பொறுத்த வரைக்கும் பாவம் புண்ணியம்லாம் இல்லை.

சில மதங்கள், இது பாவம்னு சொல்லுது. அதுக்குக் காரணம், பொருளாதாரம் இல்லை. அதுக்கும் மேல, மனிதாபிமானம்'.

‘பணம் தராதே' என்று தடுக்கவில்லை. மாறாக ‘வட்டி வாங்காதே' என்று அறிவுறுத்துகிறது.

ஒரு சமன்பாடு

வட்டிக்குப் பணம் வேணும்னு கேட்கறவங்க யாரு? இல்லாதவங்க, அவசரத் தேவை இருக்கிறவங்க. பணம் கொடுக்கிறவங்க யாரு? மிகையா பணம் வச்சிருக்கிறவங்க.

ஒருவரின் பாதகமான சூழலை, நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பது இரக்கமற்ற செயல். இருப்பதும், இல்லாததும் சமனற்ற சமுதாயத்தின் வெளிப்பாடுகள். இது ஒரு சமன்பாடு.

இந்தச் சமன்பாட்டைச் சரிசெய்கிற முயற்சிதான், சமயங்கள் கூறும் பாவ புண்ணிய கோணம். சரி. இப்போது ஏன் நாம் வட்டி பற்றிப் பேச வேண்டும்?

யார் பொறுப்பு?

பணவீக்கம் கட்டுக்குள் இருக்க, பொருளாதாரம் நம் கைமீறிப் போகாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பவர் யார் அல்லது எது? ரிசர்வ் வங்கி.

அவ்வப்போது தேவையான நடவடிக்கைகள் எடுத்து, பணவீக்கம் நம்மை அதிகம் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறது இந்த வங்கி. இதற்கு அது, சில வழிமுறைகளைத் தன் வசம் கொண்டுள்ளது.

வங்கி விகிதம் (Bank Rate), சட்டம் கட்டாயப்படுத்துகிற ‘பணமாக்குகிற வல்லமை' விகிதம் (Statutory Liquidity Ratio - SLR), ரொக்கக் கையிருப்பு விகிதம் (Cash Reserve ratio), திறந்தவெளிச் சந்தை நடவடிக்கை (Open Market Operation) ஆகியவைதான் அவை.

கடன்... கடமை...

வட்டி பற்றிப் பேசினோம் அல்லவா? ‘குறைந்த வட்டியில பணம் வேணும். யாரு கொடுப்பாங்க?' வேறு யார், வங்கிதான். வட்டிக்குப் பணம் தருவது வங்கிகளின் முக்கியப் பணி. இதை எப்படித் தருகிறது?

தன்னிடம் வருகிற வைப்புத் தொகையை வட்டிக்குக் கொடுத்து, அதில் இருந்து எடுத்து, வைப்புத் தொகைக்கு வட்டி தருகிறது.

எளிமையாகச் சொல்ல வேண்டு மென்றால், குறைந்த வட்டியில் பணம் வாங்கி, அதைவிடக் கொஞ்சம் கூடுதலான வட்டிக்குப் பணம் கடனாகத் தருகிறது.

கடன் வழங்கல், வங்கியின் பிரதான பணி. தான் வழங்கும் கடன் மூலம் வருகிற வட்டியை வைத்துத்தான் வங்கிகளுக்கு வருமானமும் வியாபாரமும். எனில், என்ன அர்த்தம்?

வங்கிகள் நமக்குக் கடன் வழங்குவதை, நமக்குச் செய்கிற உதவியாக மட்டுமே நாம் பார்க்கிறோம். உண்மைதான். காலத்தினாற் செய்த உதவிதான். மறுக்கவில்லை.

பொருளாதாரப் பார்வையில், கடன் வழங்குதல், வங்கிகளின் அடிப்படைப் பணிகளில் ஒன்று. ஒரு வங்கி உயிருடன் இருப்பதே, கடன்களின் மீது கிடைக்கும் வட்டி மூலமாகத்தான். ஆக, ஒரு வங்கியின் கடன்காரர்தான் அந்த வங்கிக்கு உயிர் கொடுப்பவர்.

மேலே வாங்கு, கீழே கொடு

ஒரு வங்கி, தன் சொந்த நிதியில் இருந்து கடன் தருகிறது. இதுபோக, ரிசர்வ் வங்கியிடம் வட்டிக்குப் பிணை இல்லா, நீண்ட காலக் கடன் பெற்று அதில் இருந்தும் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கலாம்.

இதுவே, அரசு வெளியீட்டுப் பத்திரங்களைப் பிணையாக வைத்து, ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்றால் அதன் மீதான வட்டி, ‘REPO' வட்டி.

பொருளாதார நிலைக்கு ஏற்ப, இந்த வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துக் கொள்ளலாம். வங்கி விகிதத்தைக் காட்டிலும், பிற வழிகள் மூலம்தான் பணவீக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

கையில் காசு

மூதாதையர்கள் மூலம் வந்த சொத்துகளை வைத்திருப்போருக்கு இந்த நிலை நன்கு புரியும். நிலம், கட்டிடம் என்று அசையா சொத்துகள் இருக்கின்றன. ரொக்கம் என்று பார்த்தால், அதிகம் இல்லை.

வங்கிகளுக்கும் இந்த நிலை வரலாம். தன்னிடம் உள்ள வைப்பு நிதி மொத்தத்தையும் சொத்துகளாக வாங்கிப் போட்டுவிட்டால்? தன் கணக்கிலிருந்து பணம் எடுக்க வாடிக்கையாளர் வந்தால் என்ன செய்வது?

‘நிகர தேவை, காலக் கடப்பாடுகள்' எவ்வளவு இருக்கிறதோ, (Net Demand and Time Liabilities - NDTL) அதில் 21.5 சதவீதம், எளிதில் பணமாக்க வல்லதாக வங்கிகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி, கட்டுப்படுத்துகிறது.

ஒரு வங்கியில் 100 கோடி ரூபாய் அளவுக்கு என்.டி.டி.எல்., இருந்தால், 78.5 கோடி அளவுக்குத்தான் அசையா சொத்துகளில் முதலீடு செய்யலாம். மீதம் உள்ள 21.5 கோடி ‘பணமாக்க வல்லதாக'ப் புழக்கத்தில் இருக்கும்.

இந்த 21.5 சதவீதத்தை, ரிசர்வ் வங்கி ஒருவேளை, 20 சதவீதம் என்று குறைத்தால்? 20 கோடிதான் உடனடிப் பணமாக (ரொக்கம், தங்கம், அரசுப் பத்திரங்கள் போன்றவை) இருக்கும். பணப் புழக்கம் குறையும்.

இதுவே, இவ்விகிதத்தை 30 சதவீதம் என்று அதிகரித்தால்? அதற்கேற்ப 30 கோடி ரூபாய் வரை, வங்கியில் இருப்பு கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

இதே கோட்பாடுதான், ரொக்கக் கையிருப்பு விகிதம். ஒவ்வொரு வங்கியும், தனது என்.டி.டி.எல்.லின் 4 சதவீதத் தொகையை, ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டும். இந்த விகிதம் ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி மாறும்.

மிகச் சரி. இந்த விகிதம் கூடும்போது, வங்கிகள் கூடுதலாக ரிசர்வ் வங்கியில் செலுத்த வேண்டிவரும். வங்கிகளின் பணப் புழக்கம் குறையும்.

கட்டாயமாக, ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய கையிருப்புத் தொகை குறைக்கப்பட்டால், வங்கியில் ரொக்கம் கூடும். அந்த அளவுக்குப் பணப் புழக்கமும் அதிகரிக்கும்.

இவ்வாறு, நாட்டில் உள்ள பல நூறு வங்கிகளின் செயல்பாடுகளை வரையறுக்கும் தலைமை இடத்தில் ரிசர்வ் வங்கி உள்ளது. இதுபோலவே, அரசுப் பங்குகள், பத்திரங்களை விற்பது, வாங்குவது என்று தானே நேரடியாகச் சந்தையில் இறங்கிச் செயல்படுவதன் மூலமும் பணப் புழக்கத்தைக் கூட்ட, குறைக்கவும் செய்கிறது.

நினைவில் கொள்க. இப்போது நாம், ‘மேக்ரோ' பொருளாதாரத்தின், சில ‘மைக்ரோ' அம்சங்களை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதையே முழுமையான விளக்கமாக எடுத்துக் கொண்டுவிட வேண்டாம்.

மேற்கொண்டு இது தொடர்பான பாடங்கள், புத்தகங்கள், கட்டுரைகள், செய்திகளைப் படிக்கப் படிக்க இது விரி வடைந்துகொண்டே சொல்லும். இங்கே நாம் தந்துள்ளது ஓர் அறிமுகம் மட்டுமே.

கடன் வேணுமா?

‘குட் மார்னிங் சார். பேங்க்ல இருந்து பேசறோம். உங்களுக்கு பெர்சனல் லோன் எதாவது தேவைப்படுமா சார்? வேணும்னா சொல்லுங்க. எங்க எக்சிக்யூடிவ் வந்து பேசுவாங்க'.

அநேகமாக நாம் அனைவருமே இத்தகைய தொலைபேசி அழைப்புகளை அனுபவித்திருப்போம்.

இது, ரிசர்வ் வங்கியின் கை ஜாலம். அதன் கையில் உள்ள கயிறு இறுகுகிற போது, வங்கிக் கடன்கள் கிடைப்பதற்கு அரிதாகின்றன. கயிறு தளர்த்தப்படுகிற போது, வங்கிக் கடன் உதவி வழங்கும் அழைப்புகள் குவிகின்றன. இதுதான் உள்ளே ஒளிந்து கிடக்கும் சூட்சுமம்.

நம் பொருளாதாரத்துக்கு எது நல்லது, எது ஆரோக்கியமானது என்று பார்த்துப் பார்த்து நிதானத்துடன் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுகிற ரிசர்வ் வங்கி நமது வரம், வலிமை.

இன்னொரு கேள்வி எழுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்தச் செயல்பாடுகளால், பணவீக்கம் மறைந்துவிடுமா? சுழற்சியில் உள்ள பணத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஓரளவுக்கே பணவீக்கத்தைக் குறைக்க முடியும். அரசுதான் இதற்கு மேல், பல்வேறு பொருளாதாரக் கட்டுப்பாடுகள், திட்டங்கள் மூலம் பணவீக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியும்.

ஏறத்தாழ, ஒரு நோயாளிக்கான உணவுக் கட்டுப்பாடு போன்றது ரிசர்வ் வங்கியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். ரிசர்வ் வங்கியைப் பற்றி இந்த அளவு தெரிந்துகொண்டால் போதும். இனி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்.

அங்கே நம்மை வரவேற்பது ‘அந்நியன்!'

(வளரும்)

SCROLL FOR NEXT