எவ்வளவுதான் போதைப் பொருட்களை ஒழிக்க முயற்சி எடுத்தாலும், ஏதோ ஒரு வழியில் அதன் பயன்பாடு இருப்பதும், அதனால் இளைய தலைமுறையினர் பாதிக்கப்படுவதும் தொடரவே செய்கிறது. இந்தச் சமூக ஊடகக் காலத்தில் போதைப் பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தமிழக காவல் துறையினர் மீம்களைக் கையில் எடுத்துள்ளனர். இதற்காகக் காவல் துறையினர் ‘Drive Against Drugs’ என்கிற பெயரில் ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளர். அதில் மீம்கள் மூலம் போதைப் பொருள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்கள். முன்னணி நடிகர்கள் பேசிய வசனத்தின் வழியாக இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் பொதுமக்களைக் கவரும் நிலையில், அதன் இலக்கு நிறைவேற வேண்டும் என்று வாழ்த்துவோம்.
ஒரு புதிய முயற்சி
அந்தரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்களின் மூளை எப்படி வேலை செய்யும்? அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஆசை இஸ்ரேலைச் சேர்ந்த ப்ரெய்ன் ஸ்பேஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டது. விளைவு, அதற்கென பிரத்யேகத் தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளது இந்நிறுவனம். ஆக்சியாம் ஸ்பேஸ் என்கிற தனியார் நிறுவனமும் நாசாவும் இணைந்து நடத்தும் இந்த ஆய்வில் நான்கு பேர் தலைக்கவசத்தை அணிந்து விண்வெளிக்குச் செல்கின்றனர். இந்தத் தலைக்கவசத்தில் மூளை மின் அலை வரைவைப் பரிசோதிக்கும் கருவியும் பொறுத்தப்பட்டிருக்கிறது. அதன் மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்து விண்வெளியில் உள்ளவர்களின் மூளைத் திறன் எப்படி இருக்கும் என்பதைப் பூமியில் இருந்தபடி விஞ்ஞானிகள் கணிக்க உள்ளனர்.
டோக்கியோ வளர்ந்துட்டானே!
ஒலிம்பிக்கில் முதன் முறையாகதுப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவுக்காகத் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் அபினவ் பிந்த்ரா. இவர், கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டி தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ‘டோக்கியோ’ என்று பெயரிடப்பட்ட நாய்க்குட்டியைப் பரிசாக அளித்தார். நாய்க்குட்டியைப் பெற்று ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நீரஜ் சோப்ரா அந்த நாய்க்குட்டியுடன் இருக்கும் ஒளிப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதற்குப் பதிலளித்துள்ள பிந்த்ரா, ‘டோக்கியோ பெரிய ஆளா வளர்ந்துட்டான்’ என்று தெரிவித்திருந்தார். இந்தப் படம் இணையத்தில் வைரலானது.