‘சிட்டில எல்லாம் பொண்ணுங்களுக்கு ரொம்ப ஃப்ரீடம் இருக்கு சார்' என்று சொல்பவரா நீங்கள்? அப்படியென்றால், நீங்களே ஒரு சின்ன ஆய்வில் இறங்கிப் பாருங்கள். பெரிதாக ஒன்றுமில்லை. சென்னை போன்ற ஒரு மாநகரத்தில், ஒரு இளம்பெண் அல்லது பெண்கள், ஆண் துணையில்லாமல் தனியாக ரோட்டோர டீக்கடையில் தேநீர் அருந்துவதையோ அல்லது கையேந்தி பவனில் சாப்பிடுவதையோ அல்லது சைக்கிளில் பானி பூரி விற்கும் இடத்தில் பானி பூரி சாப்பிடுவதையோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
கல்வியும் வேலையும் பெண் களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தைக் கொடுத்திருந்தாலும் இன்னமும் அவர்கள் கலாச்சாரக் காவலிலிருந்து விடுபடாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அதிலிருந்து வெளிவர பாகிஸ்தானில் ஒரு சின்ன முயற்சி தோன்றியுள்ளது. ஆம். பெண்கள் பொதுவெளிக்கு ஆண் துணையில்லாமல் வரக் கூடாது, பெண்கள் சைக்கிள் ஓட்டுவது கலாசாரத்துக்கு எதிரானது என்று பல கட்டுப்பெட்டித்தனங்கள் கொண்ட பாகிஸ்தானில் இப்போது, சில இளம்பெண்கள் அதையெல்லாம் உடைத்துக்கொண்டு வருகிறார்கள்!
இதற்கு முதற்புள்ளியாக இருப்பவர் சாதியா கத்ரி எனும் இளம்பெண். கராச்சியைச் சேர்ந்த இவர், ஒரு நாள் தன் சக தோழிகளுடன் தாபா ஒன்றில் தேநீர் அருந்தினார். அதனை செல்ஃபி எடுத்து உடனே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #girlsatdhabas என்ற ‘ஹேஷ்டேக்' உடன் பகிர்ந்துகொண்டார்.
அடுத்த சில நாட்களில் இது ‘வைரல்' ஆகி, லாகூர், இஸ்லாமபாத் என பாகிஸ்தானின் இதர பகுதிகளிலிருந்தும் சில இளம்பெண்கள் களத்தில் குதித்தனர். ஆண்கள் நிறைந்திருக்கும் ரோட்டோர தாபாவில் சாப்பிடுவது, பர்தா அணிந்துகொண்டு ரோட்டோரக் கடையில் சாய் குடிப்பது, சுவர்களில் வரைவது, புத்தகங்கள் பற்றி பூங்காக்களில் கலந்துரையாடுவது, அதே பூங்காக்களில் படுத்து உறங்குவது எனத் தங்களின் செயல்களைப் படமெடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள். ‘பொதுவெளிகளில் எங்களுக்கும் உரிமை உண்டு' என்று சொல்லி ஆண்களைக் கவனிக்க வைக்கிறார்கள்.
‘இப்படியெல்லாம் நீங்கள் முன் வருவதற்கு இன்ஸ்பிரேஷன் யார்?' என்று சாதியா கத்ரியிடம் கேட்டால், ‘இந்தியப் பெண்ணியவாதிகள்!' என்று பளிச்செனச் சொல்கிறார்.
இன்ஸ்பையர் இந்தியா இன்ஸ்பையர்!
மேலும் படங்களைக் காண இங்கே சொடுக்கவும்: >http://girlsatdhabas.tumblr.com/