சென்னை புறநகர்ப் பகுதியில், கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு அருகில், வானுயர வளர்ந்து நிற்கும் வணிகக் கட்டடங்களின் ஊடே ஒளிந்து நிற்கிறது கண்ணகி நகர். இந்தியாவின் மிகப் பெரிய மீள்குடியேற்றப் பகுதி இது.
நகரமயமாக்கலின் கொடூரப் பிடியில் அகப்பட்டு, வாழ்வாதாரப் பிரச்சினைகள், அவர்களை ஏற்க மறுக்கும் சமூகத்தின் பொதுப்புத்தி போன்ற காரணங்களால், அங்கே வசிக்கும் மக்களின் இருப்பே கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சூழலில்தான், கடந்த ஆண்டு பிப்ரவரியில், சென்னை மாநகராட்சியின் அழைப்பின் பேரில், கண்ணகி நகரைக் கலை நகரமாக மாற்றும் முயற்சியில் 'ஸ்டார்ட் ஆர்ட் இந்தியா பவுண்டேசன்' அமைப்பு ஈடுபட்டது.
உத்வேகம் அளித்த ஓவியங்கள்
சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் அந்த அமைப்பு குடியிருப்பின் 16 பிளாக்குளின் முகப்புப் பகுதியிலும் சுவர் ஓவியங்களை வரைந்தது. அங்கே வசிக்கும் எளிய மக்களின் அன்றாட வாழ்வியலைப் பிரதிபலிக்கும் அந்தச் சுவர் ஓவியங்கள், அவர்களின் வாழ்வுக்குப் புது அர்த்தம் சேர்த்தன; உத்வேகமும் அளித்தன.
தவறான புரிதலை அகற்றும் முயற்சி
ஏழை, எளிய மக்கள் ஒதுக்கப்பட்ட புறச் சூழலில் வசிப்பதாலோ என்னவோ, கண்ணகி நகர் என்றாலே போதைப்பொருள் பயன்பாடு, குற்றங்கள் பற்றிய கதைகளுடன் இணைத்துப் பார்ப்பதும் விவாதிப்பதுமே சமூகத்தின் பொதுப்புத்தியாக இருக்கிறது. ஆனால், களநிலவரம் இந்தப் பொதுப்புத்திக்குச் சற்றும் தொடர்பில்லாமல் இருக்கிறது. இந்தத் தவறான புரிதலை முற்றிலும் அகற்றும் நோக்கில், கண்ணகி நகரை, கலை நகராக மாற்றி, அந்த மக்களின் நல்லியல்புகளையும் உண்மை நிலையையும் வெளிக்கொண்டுவரும் முயற்சியில் 'ஸ்டார்ட் ஆர்ட் இந்தியா பவுண்டேசன்’ மீண்டும் இறங்கி உள்ளது. தற்போதைய திட்டமானது மார்ச், ஏப்ரல் 2022-க்கு இடையில் செயல்படுத்தப்படும். ஆறு சமகால கலைஞர்கள் தங்கள் தனித்துவமான படைப்புகளின் மூலம் பங்களித்துவருகிறார்கள்.
சமகால கலைப் பார்வையைமறுவரையறை செய்ய முடியும் என்பதை அங்கிருக்கும் ஓவியங்கள் உணர்த்துவதாக உள்ளன. முக்கியமாக, நமது நகர்ப்புறச் சூழல்களின் எதிர்காலத்தைச் சுற்றியுள்ள உரையாடல்களை அவை விரிவுபடுத்துகின்றன.