இளமை புதுமை

ஹோலியின் நிறம் வெள்ளை!

செய்திப்பிரிவு

நமக்கு தீபாவளி போல, வடநாட்டவர்களுக்கு ஹோலி முக்கியமான‌ பண்டிகை. வர்ண ஜாலங்கள் நிறைந்த, மகிழ்வைப் பகிரச் செய்கிற‌ பண்டிகை. வண்ணங்கள் பூசி மகிழ்கிற இந்த விழாவை இழந்து, வெள்ளையை மட்டுமே வண்ணமாகக் கொண்ட கைம்பெண்கள் கொண்டாடினால் எப்படி இருக்கும்?

இந்த ஆசையை உண்மையாக்கி இருக்கிறது ‘சுலப்' எனும் தொண்டு நிறுவனம். கைம்பெண்கள் ஹோலி கொண்டாடக் கூடாது என்கிற 400 வருட சம்பிரதாயத்தையும் உடைத்தெறிந்திருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கிறது, இந்துக்களின் புனித இடமாக வழிபடப்படும் பிருந்தாவனம் நகரம். கிருஷ்ணன், தன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இது என்று குறிப்பிடுகிறது மகாபாரத இதிகாசம். ஆனால் இதே பிருந்தாவனத்தில்தான், ஆயிரக்கணக்கான கைம்பெண்கள் குடும்பத்தைப் பிரிந்து, வெண்ணிற ஆடையை உடுத்தி, சுகங்கள் துறந்து வாழ்கின்றனர்.

அங்கே வசிக்கும் 17 வயதில் இருந்து 100 வயது வரையிலான கைம்பெண்கள், பஜனைப் பாடல்களைப் பாடியும் பிச்சை எடுத்தும் தங்களின் எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கின்றனர். ‘சுலப்' நிறுவனம் அவர்களுக்குத் தையல் உள்ளிட்ட சுய தொழில்களைக் கற்றுக் கொடுத்துவருகிறது. அவர்களுக்காகவே, ‘கைம்பெண்கள் ஹோலி திருவிழா'வைக் கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

மார்ச் 21ம் தேதி நடைபெற்ற இந்த விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைம்பெண்கள் கலந்துகொண்டு தங்களின் பால்யத்துக்குத் திரும்பியிருக்கின்றனர். சுமார் 1,200 கிலோ அளவிலான வண்ணப் பொடிகள், 1500 கிலோ அளவுக்கு ரோஜா மற்றும் சாமந்தி மலர்கள் அவர்களின் முகங்களில் உயிரைக் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. ஹோலி இவர்களைக் கொண்டாடியது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

பேசும் இந்த ஒளிப்படங்களை எடுத்தவர் மாவீரன் சோமசுந்தரம். திருத்துறைப் பூண்டி கீழப்பெருமழையைச் சேர்ந்தவர். ‘எம்.பி.ஏ. முடித்து, ஐந்து வருடங்கள் ஐ.டி.யில் வேலை பார்த்துவந்தேன். ஒளிப்பட தாகத்தால் கேமராவைக் கையில் எடுத்தேன்'’ என்று கூறும் மாவீரன், இந்தியா முழுவதும் பயணித்துப் படமெடுத்துவருகிறார். தமிழ்நாட்டில் நடக்கும் திருவிழாக்களை ஆவணப்படுத்துவதில் அதிக ஈடுபாடு கொண்டவர் இவர்.

இந்த ஒளிப்படத் தொகுப்புக்கு அவர் வைத்துள்ள பெயர் ‘வெள்ளை வானவில்'. அந்த வானவில்லில் நிறங்கள் எப்போது சேரும்?

மாவீரன் சோமசுந்தரம்

SCROLL FOR NEXT