இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தபோது ‘தென் அமெரிக்காவில் உள்ள எல் சால்வடோர் நாடு தன்னுடைய தேசிய பணமாக பிட்காயினுக்கு மாறிவிடும் திட்டத்தில் இருக்கிறது’ என்ற செய்தி கண்ணில்பட்டது. ‘கிரிப்டோ கரன்சிகளை வாங்கி, விற்பதில் 30 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை அமல்படுத்தப் போகிறோம்’ என இந்தியாவில் நிதியமைச்சர் அறிவித்தது என் நினைவுக்கு வந்தது. இன்றுவரை யாருக்கும் தெரியாத நபர் 2008-ஆம் ஆண்டில் தயாரித்த மென்பொருளான பிட்காயினின் அடிப்படை கனவு, வங்கிகள் போன்ற இடைத்தரகர் யாருமில்லாமல் இரண்டு நபர்களுக்கிடையே பணப்பரிவர்த்தனை நடக்க வேண்டும் என்பது. அது நடந்துவிட்டதா? அதற்கு முன்பு ஒரு ‘டெக் ஃப்ளாஷ்பேக்’.
தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி எந்தத் துறையில் இருந்தாலும், அது பணப் பரிமாற்றம் நடக்க உதவியாக இருக்குமா என்ற பரிசோதனைகள் நடக்கும். அப்படி நடக்கும்போது அதை உடைத்து எப்படித் திருடுவது என்ற முயற்சிகளும் நடைபெறும். உதாரணமாக, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட பணம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ரயில்களில் கொண்டு செல்லப்பட்டது.உடனே அதை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் தொடங்கின. தபால், தந்தி, அலைபேசி, இணையம் எனத் தொடர்பு தொழில்நுட்பங்கள் அனைத்திலும் பணம் அனுப்பும் வசதிகள் வந்தாலும், திருடும் முயற்சிகளும் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
பிட்காயின் போன்ற கிரிப்டோ பணத் தொழில்நுட்பத்தில் இந்த முயற்சிகள் பல மடங்கு அதிகம். கிரிப்டோ பணத் திருட்டு சற்றே வித்தியாசமானதும்கூட. அதை கைது சம்பவம் ஒன்றின் பிண்ணனியைக் கொண்டு அறியலாம். நியூயார்க்கில் இலியா லிட்ச்டென்ஸ்டைன்-ஹெதர் மார்கன் என்ற தம்பதி சென்ற வாரம் கைதானார்கள். அதற்கு முன்பு கிரிப்டோ உலகில் என்ன நடக்கிறது என்பதை ஆழ்ந்து அலசுபவர்களுக்கு 2016-இல் ‘Bitfinex’ என்ற கிரிப்டோ பரிவர்த்தனை தளத்தில் நடந்த திருட்டு பரிச்சயம். அதன் பாதுகாப்பு வடிவமைப்பை தகர்த்து 1,11,000 பிட்காயின்கள் சுமார் இரண்டாயிரம் வாலட்களுக்கு மாற்றப்பட்டன.
அதென்ன வாலட்? கிரிப்டோ தொழில்நுட்பத்தில் வாலட் என்பதை வங்கி கணக்கு எண்ணுக்கு இணையாகச் சொல்லலாம். ஆனால், வங்கிக் கணக்கு என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த பிரத்யேகமானது. அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது உங்களுக்கும் வங்கிக்கும் மட்டுமே தெரியும். கிரிப்டோ தொழில்நுட்பத்தில் யார் வேண்டுமானாலும், வாலட் எண்ணை தயாரித்து வைத்துக்கொள்ளலாம். அதைத் தயாரிக்கையில் அனைவருக்கும் தெரிந்த எண் பொதுச்சாவி (Public Key) என்றும், நீங்கள் மட்டுமே வைத்திருக்கும் எண் பிரத்யேகச் சாவி (Private Key) என்றும் அறியப்படுகிறது.
உங்கள் வாலட்டின் பொதுச்சாவி எண் எனக்கு தெரிந்திருந்தால், நான் உங்களுக்கு கிரிப்டோவை அனுப்ப முடியும். ஆனால், அதை அனுப்ப எனது வாலட்டின் பிரத்யேக சாவி வேண்டும். வாலட்டின் பொதுச்சாவி எண் தெரிந்திருந்தால், அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். பணம் இருக்கும் வாலட்டின் பிரத்யேக சாவியை நான் கவனக் குறைவாக எங்கேயாவது எழுதி வைத்திருந்தால், அதைப் பயன்படுத்தி உங்களது வாலட்டில் இருக்கும் பணத்தைத் திருடிவிட முடியும். இப்படித்தான் அந்த ‘Bitfinex’ தளத்தின் பிட்காயின் திருட்டு நடந்தது. அன்றைய மதிப்பில் அது ஏழரை கோடி டாலர்கள். ஆனால், பிட்காயின் விலை அதன்பின்னர் கிடுகிடுவென உயர, இந்த ஆண்டில் திருடப்பட்ட பிட்காயின்களின் மதிப்பு சுமார் 450 கோடி டாலர்களைத் தாண்டியது.
திருடப்பட்டு சேகரிக்கப்பட்ட வாலட்டுகளில் இருந்து அவ்வப்போது சிறிய அளவில் பணம் பல நூறு வாலட்டுகளுக்குச் செல்வதைக் கர்மசிரத்தையாக தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள் நிதி சட்டங்களை அமலாக்கும் காவல் துறையினர். கிரிப்டோ பிரபலம் ஆகியிருப்பது உண்மைதான். ஆனால், சாதாரணமாகத் தினமும் தேவைப்படும் பரிவர்த்தனை களுக்கு கிரிப்டோ பணத்தைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை.
எனவே, கிரிப்டோ வைத்திருப்பவர்கள் தேவைகேற்ப தங்கள் நாட்டுப் பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும். பல நாடுகளில் சட்டபூர்வமாக இயங்கும் பரிவர்த்தனை சேவைகளைப் பயன்படுத்தி மாற்றும்போது பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நபரின் உண்மையான விபரங்கள் இருக்க வேண்டும் என்ற விதி உலகின் பல நாடுகளிலும் உண்டு. மாற்றப்பட்ட பிட்காயின்களை உலகின் பல பரிவர்த்தனை சேவைகளிலும் பிட்காயின் ஏடிஎம் இயந்திரங்களிலும், அனாமதேயமாக மாற்ற முயற்சி செய்திருப்பது வாலட்டிலிருந்து வாலட்டுக்கு மாற்றும் முயற்சிகளில் இருந்து தெரிய வந்தது. ஆனாலும், யார் இதைச் செய்கிறார்கள் என்பதை தெளிவாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிட்காயினைத் திருடியவர்களுக்கு இது பெரும் சங்கடம். கோடிக்கணக்கான மதிப்பில் பணம் கையில் இருந்தாலும் அதை செலவழிக்க முடியாத நிலை. பிட்காயினில் இருந்து ஈதர் போன்ற மற்றொரு கிரிப்டோ என மாற்றி அதை செல்வழிக்க முயன்றதும் தோல்வியில்தான் முடிந்தது. இறுதியாக, பிட்காயினைப் பயன்படுத்தி பரிசு அட்டைகளை (Gift Cards) வாங்கி, அந்த அட்டைகளை விலை குறைவாக விற்று பணமாக மாற்றும் தளங்களில் பரிவர்த்தனை செய்ய முயல மாட்டிக்கொண்டவர்கள்தாம் மேற்பட்ட தம்பதியினர். அவர்களிடம் இருந்த பிட்காயின் வாலட்டுகளில் பிரத்யேக சாவி கைப்பற்றப்பட்டு, அமெரிக்க அரசின் கையில் இருக்கும் வாலட்டுக்கு ஒரு நாளுக்குள் மாற்றப்பட்டு விட்டது.
வருமான வரி சோதனை, அமலாக்க பிரிவு நடவடிக்கை போன்ற செய்தி வரும்போது அவர்கள் கைப்பற்றிய பணம், நகை இன்ன பிறவற்றைப் பற்றி அந்தத் துறையோ அல்லது நபரோ தெரிவிப்பதை மட்டுமே நாம் நம்பியாக வேண்டும். ஆனால், கிரிப்டோவில் அனைத்தும் பகிரங்கமாகவே இருக்கும். நாம் இதை நேரடியாகப் பார்க்கலாம். உண்மையில் திருடப்பட்ட பல நூறு கோடி டாலர்கள் மதிப்பிலான பிட்காயின்கள் மீட்டெடுக்கப்பட்டனவா என்பதை bc1qazcm763858nkj2dj986etajv6wquslv8uxwczt என்ற பிட்காயின் பொதுச்சாவியைப் பார்த்தால் போதும். அதை எப்படிப் பார்ப்பது என்பது தெரியவில்லை என்றால் இந்த முகவரியைப் பயன்படுத்தலாம்.
லிங்க்: https://bit.ly/3gX1skN