சூழலியல் என்கிற பதத்தை இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். காற்று, தண்ணீர் போன்றவற்றின் மாசுபாடு, புவிவெப்பம், எதிர்பாராத காட்டுத்தீ போன்ற நிகழ்வுகளைச் சூழலியல் சிக்கல்களாக வர்ணிக்கிறார்கள். அறிவியல் வரையறைப்படி சூழலியல் என்றால் என்ன?
உயிரினங்களுக்கும் அவை இருக்கும் இடங்களுக்கும் இடையேயான தொடர்பு, உறவு, சார்புத்தன்மை போன்றவற்றை அறியும் உயிரியலின் பிரிவைச் சூழலியல் எனலாம். சூழலியல் நிகழ்வுகளை மிகப்பெரிய நிலப்பரப்பிலோ அல்லது மிகக் குறுகிய இடத்திலோ ஆராய்ந்து புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, கடலில் மிதந்து, விரைந்தபடி இருக்கும் வணிகக் கப்பல்களின் போக்குவரத்தால் நிகழும் சூழலியல் விளைவுகளைச் சொல்லலாம். அதே நேரத்தில், மண்புழுக்கள், எறும்புகள், நத்தைகள் போன்றவை எங்கிருந்து உணவைப் பெற்றுக் கொள்கின்றன; அவற்றுக்கிடையே இருக்கும் உறவு என்ன என்பதையும் பூதக்கண்ணாடி மூலம் பார்த்துப் படித்து அறிய முற்படலாம். ஆக, நிலப்பரப்பையும் உயிரினத்தின் அளவையும் பொருட்படுத்தாமல், சூழலியல் நிகழ்வுகள் தொடர்ந்து சிறியதும் பெரியதுமாக நடப்பது புலப்படும்.
முதலில் சில அடிப்படைகள்
உயிரினங்களுக்கிடையேயான சார்பு உறவுகளை பல வகைகளாகப் பிரிக்கிறார்கள் சூழலியல் அறிஞர்கள்.
வேட்டையாடுதல்: ஓர் உயிரினம் மற்றொரு உயிரினத்திற்கு உணவாவது. உதாரணம், புலிகளுக்கு மான்கள்.
போட்டி போடுதல்: கிடைக்கும் உணவு அல்லது உறைவிடத்துக்காக இரண்டுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் போட்டியிட்டு, பெறுவது அல்லது பகிர்ந்துகொள்வது. உதாரணம், மரங்கொத்திப் பறவையும் அணில்களும் ஒரே மரத்தில் கூடுகட்டுவது.
ஒருசார்பு உறவு: ஒன்றைச் சார்ந்து உயிரினம் இருப்பது. இதனால், அந்த உயிரினத்துக்குப் பலனோ, பாதிப்போ இருக்காது. உதாரணம், ரொமோரா மீன் வகை. இவற்றால் நீந்த முடியும். ஆனால், மற்ற பெரிய மீன்களின் உடலில் ஒட்டிக்கொண்டு பயணம் செய்வதன் மூலம் தாங்கள் வேட்டையாடப்படுவதில் இருந்து தற்காத்துக் கொள்கின்றன. சுறா, திமிங்கிலம் போன்ற உயிரினங்கள் ரொமோராவைத் தாங்கள் அறியாமலேயே தூக்கிச் சென்றாலும், அவற்றுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால் அதைப் பொருட்படுத்துவதில்லை.
பரஸ்பர உறவு: உயிரினங்கள் இரண்டு ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலை. உதாரணம், பூவும் தேனீயும். தேனீக்குப் பூவில் இருக்கும் தேன் தேவை. மகரந்தத்தைக் கடத்த பூவுக்குத் தேனீ தேவை.
ஒட்டுண்ணி: ஓர் உயிரினம் மற்றொரு உயிரினத்தைச் சார்ந்து வாழும். ஆனால், இந்த வாழ்க்கை முறையால் மற்றொரு உயிரினத்துக்குக் கேடு விளையும். உதாரணம், நம் ரத்தத்தை உறிஞ்சி வாழும் கொசுக்கள்.
ஆக, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலை உருவாக்க நிலக்கரி போன்ற கரிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நம்மைச் சுற்றியிருக்கும் கார்பனின் அளவை அதிகமாக்கிச் சூழலியல் சிக்கலை உருவாக்குகிறோம் என்பது உண்மைதான். ஆனால், நம்மை அறியாமலேயே இன்னொரு சூழலியல் சிக்கலை நாம் தொடர்ந்து செய்துவருவதைப் பற்றி அதிகம் விவாதிப்பதில்லை. அது, அயல் உயிரினங்களை (Invasive Species) உருவாக்கிவிடும் ஆபத்து.
இதற்கு யூகலிப்டஸ் மரங்கள் நல்ல உதாரணம். இந்த மரங்களில் இருந்து பெறப்படும் நறுமணத் தைலம், எரிபொருளாகப் பயன்படும் கிளைகள் போன்ற காரணங்களால் கடந்த பல நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலியாவிலிருந்து உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வளர்க்கப்படுகின்றன. எல்லா தாவர உயிரினங்களிலும் ‘அல்லேலோடாக்சின்’ என்கிற நச்சுப் பொருள் உண்டு. தன்னைத் தவிர்த்த மற்ற தாவரங்களை வளரவிடாமல் தடுக்கும் வேதிப்பொருள் இது. யூக்கலிப்டஸில் இது சற்றுத் தூக்கலாக இருக்கிறது. இந்த மரம் தனக்கு அருகில் வேறு எந்த மரத்தையும் வளரவிடாமல் தடுத்துவிடும்.
விலங்கினங்களும் அப்படியே. உதாரணமாக, அழகுக்காக வளர்க்கப்படும் மீன்களை நதிகளில் கொண்டு போய்விட்டால், இயற்கையாக வாழும் மீன்களின் உணவு வளங்களை அழித்தும், அவற்றைக் கொன்றும் தீர்த்துவிடும். இதேபோல ஆஸ்திரேலியாவின் கொசுமீன் எனப்படும் ஒரு மீன் வகை ஏரி, குளங்களில் பெரும் நாசத்தை உண்டாக்குவது கண்டறியப்பட்டிருக்கிறது.
கடைசியாக, மனித இனமே ஆக்கிரமிக்கும் உயிரினம்தானே என்கிற கேள்வி மனத்தில் நெருடலாம். “அப்படியெல்லாம் இல்லை” என்கிறார்கள் மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள். அதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, அண்டார்க்டிகா தவிர்த்து அனைத்துக் கண்டங்களிலும் மனிதர்கள் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டனர். இரண்டு, ஆக்கிரமிப்பு செய்யும் விலங்கினங்கள் தாமாக, தங்கள் இடத்தை விட்டு நகர்வதில்லை. மனிதர்கள் தாமாகவே இடப்பெயர்ச்சி செய்யும் தன்மையும் திறனும் கொண்டவர்கள்.
https://www.facebook.com/LetsTalkSTEM என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர் பற்றியும் எதை அலசலாம் என்பதையும் பதிவிடலாம். 1 (628) 240-4194 என்கிற வாட்ஸ் அப் எண்ணிலும் அனுப்பலாம்.