இளமை புதுமை

2022: சமூக ஊடகங்களின் பங்கு எப்படி இருக்கும்?

டி. கார்த்திக்

இந்தியாவில் சமூக ஊடகங்கள், செல்வாக்குமிக்க ஊடகங்களாக மாறிவருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அதன் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில் 44.8 கோடிப் பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவருகிறார்கள். நாள்தோறும் சராசரியாக இரண்டரை மணி நேரத்தைச் சமூக ஊடகங்களில் இந்திய மக்கள் செலவழிக்கிறார்கள். இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களின் போக்கு எப்படி இருக்கும்?

தற்போது நேரடியாக விவாதங்களுக்கும் அரட்டைகளுக்கும் குரல்வழி சமூக ஊடகங்கள் களம் அமைத்துக்கொடுத்திருக்கின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டு ‘ட்விட்டர் ஸ்பேசஸ்’, ‘கிளப் ஹவுஸ்’ போன்ற செயலிகள் மக்களை அதிகம் ஈர்த்தன. குரல்வழி செயலியாக ‘ஹூட்’ இந்தியாவில் அறிமுகம் ஆனது. அந்த வகையில் ஃபேஸ்புக்கின் குரல்வழி சமூக ஊடகமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதற்கான பணிகளில் ஃபேஸ்புக் ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே வங்கிக்கே செல்லாமல் பரிவர்த்தனைகளை மொபைலில் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் செய்ய வைக்கும் கூகுள் பே, பேடிஎம், போன்பே எனச் செயலிகள் வரிசைகட்டுகின்றன. தற்போது சமூக ஊடகங்களும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பல தளங்களில் இருந்து நேரடியாகப் பொருட்களை வாங்க அனுமதிக்கின்றன. உதாரணமாக வாட்ஸ் அப்பில் யுபிஐ வசதி உள்ளது. அதுபோன்ற வசதி பிற சமூக ஊடகங்களிலும் இந்த ஆண்டு அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் சமூக ஊடக வர்த்தகத்தில் ஈடுபடும் நுகர்வோரின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 22.8 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021இல் இது 15.7 கோடியாக இருந்தது.

‘மெட்டாவர்ஸ்’ எனப்படும் ‘ஆக்மென்டட்’ மற்றும் ‘வெர்சுவல் ரியாலிட்டி’ அடிப்படையில் சமூக வலைப்பின்னலாக மாற்றும் முயற்சியில் ஃபேஸ்புக் இறங்கியுள்ளது. வெகுஜன பயன்பாட்டுக்கு வர இது தாமதமாகலாம் என்றாலும், ஏற்கெனவே பல இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பிரபலங்களுக்காக ‘மெட்டாவர்ஸ்’ பணியைச் செய்து வருகின்றன. இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களோடு நெருக்கமாகியிருக்கும் சமூக ஊடகங்களில் ஆபத்துகளும் அணிவகுக்கின்றன. போலிச் செய்தி, வெறுப்புப் பேச்சுகளைப் பரப்ப பல சமூக ஊடகங்கள் தளங்களாக இருப்பதால், அவற்றின் மீதான நம்பகத்தன்மை நாளடைவில் குறையவும் செய்யலாம். ஃபேஸ்புக் தொடர்பான தகவல் கசிவுகள் இதை உறுதி செய்திருக்கின்றன. இந்தியாவில் வெறுப்புப் பேச்சுகளும், போலிச் செய்திகளும் அதிக அளவில் பகிரப்படுவதாகப் புகார்கள் நீள்கின்றன. எனவே, அதைத் தடுக்கும் அம்சங்களைச் சமூக ஊடக நிறுவனங்கள் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெரும் சவாலை இந்த ஆண்டும் சந்திக்க நேரிடலாம்.

SCROLL FOR NEXT