தற்போது டிஜிட்டல் காலம். மின்னஞ்சல் தொடங்கி, வங்கிக் கணக்கு, சமூக ஊடகக் கணக்குகள் வரை எல்லாவற்றையுமே ஒரே செல்போனில் பராமரிக்க முடிகிறது. ஆனால், இவை அனைத்தையுமே சிக்கல் இல்லாமல் பராமரிக்க வேண்டுமென்றால் மிகவும் முக்கியம் கடவுச்சொல் எனப்படும் பாஸ்வேர்டுகள். இல்லாவிட்டால், நம்முடைய கணக்கை யாராவது திருடிவிடுவார்கள். அதற்காகத்தான் பாஸ்வேர்டுகளை வலுவாக அமைக்க வேண்டும் என்பது சைபர் நிபுணர்களின் வழிகாட்டல். ஆனால், நம் நாட்டில் பாஸ்வேர்டுகள் படாதபாடுபடுகின்றன. அதை ஓர் ஆய்வு புட்டுப்புட்டு வைத்திருக்கிறது.
இந்தியாவில் பொதுவாகவும் பிரபலமாகவும் வைக்கப்படும் பாஸ்வேர்டுகள் பற்றி ‘நோர்ட்பாஸ்’ என்கிற நிறுவனம் ஆய்வு நடத்திச் சொல்லியிருக்கிறது. இந்தியாவில் ஏராளமானோர் ‘password’ என்பதைத்தான் தங்கள் பாஸ்வேர்டாக வைத்திருப்பதாகச் சுவாரசியமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘iloveyou’, ‘12345’, ‘india123’ போன்றவற்றையும் அதிக அளவில் பாஸ்வேர்டுகளாகப் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. இதேபோல ‘krishna’, ‘sairam’ என கடவுள் பெயர்களில் வைக்கப்படும் பாஸ்வேர்டுகள் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன. இனியாவது ஊகிக்கக்கூடிய கடவுச்சொல்லை நீக்கிவிட்டு, வலுவான கடவுச்சொல்லை வையுங்கள். பாஸ்வேர்டு பத்திரம்!
தண்ணீர் பருகச் சொல்லும் செயலி!
கோடைக்காலம் என்றால், ‘மடக்கு மடக்கு’ என அடிக்கடி தண்ணீரைப் பருகிக்கொண்டே இருப்போம். ஆனால், மழைக்காலம், குளிர்காலம் என்றால் தண்ணீர் பருகவே மறந்துவிடுவோம். மழை, குளிர் காலங்களில் நாக்கு வறட்சி அடையாமல் இருப்பதால், தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற எண்ணமே வராமல் போய்விடுகிறது. ஆனால், நம் உடலுக்குத் தண்ணீர் மிகவும் அவசியம். தினமும் நம் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீரைப் பருகியே ஆக வேண்டும்.
அப்படிக் குறித்த நேரத்தில் தண்ணீர் பருக ஞாபகப்படுத்தும் செயலி ஒன்று செயல்பாட்டில் உள்ளது. ‘Water Reminder’ என்ற அந்தச் செயலி, யார் யார், எப்போது, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைவூட்டுகிறது. செயலியில் கேட்கப் படும் அடிப்படை கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். அதை முடித்துவிட்டால், உடல் எடைக்கேற்ப ஒரு நாளில் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைச் செயலியே கணித்துச் சொல்லிவிடுகிறது.
நாம் குடிக்கும் கோப்பையின் அளவைக் கூறினால் மட்டும் போதும். அதன்பிறகு செயலி செயல்படத் தொடங்கிவிடும். கடைசியாக எப்போது தண்ணீர் குடித்தோம், எவ்வளவு குடித்தோம், அடுத்து எப்போது எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களைச் சொல்லிவிடுகிறது. வேலை மும்முரத்தில் தண்ணீர் குடிக்க மறந்துவிட்டால்கூட நினைவூட்டியும் விடுகிறது இச்செயலி.