கொக்கயின் போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களில் இருக்கும் ஓப்பியாய்ட், வலி நிவாரண மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. ஊதா நிற பூக்களைக் கொண்ட பாப்பி செடிகளில் இருந்து பெறப்படும் ஓப்பியத்தைக் கொண்டிருக்கும் மருந்துகளை அதிகம் உட்கொள்வதால் நடக்கும் ஓவர்டோஸ் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. வலி நிவாரணத்திற்காக ஓப்பியாட் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளால் அடிமைப்படும் எண்ணிக்கையை ஓப்பியாட் பெருந்தொற்று (Opioid Epidemic ) என வர்ணிக்கிறார்கள். இப்பிரச்சனையின் அடிப்படை வேர் - வலி. அதை மேலாண்மை செய்யும் நவீன மருத்துவ முறை என்ன?
முதலில், வலி என்பதன் அறிவியல் என்ன என்பதை பார்த்துவிடுவோம். கதவை மூடும்போது தெரியாமல் விரல் நசுங்கிவிடுகிறது. வாசனை, சுவை, கேட்டல் போல வலி என்பதும் ஓர் உணர்வே. அந்த உணர்வுகள் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்த்துகின்றன. வலி நம்மை நாம் காத்துக் கொள்ள உதவும் வலிமையான ஆயுதம். காய்கறிகள் வெட்டும்போது கைவிரல் வெட்டுப்பட்டு வலி இல்லாதிருந்தால் என்ன ஆகும்? ரத்த இழப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
நம் உடலின் பகுதிகளில் ஏதாவது காயம் ஏற்படுகையில், நரம்பு மண்டலம் விழுத்திக் கொண்டு, தண்டுவடம் மூலமாக மூளைக்கு சமிஞ்கையை அனுப்பி அந்த வலி உண்டாகும் காரணிகளை அப்புறப்படுத்தவும், வலியைக் கொண்டுவந்த நிகழ்வில் இருந்து மீள்வதற்குமான திட்டமிடல்களைச் செய்யத் தொடங்குகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்கும் இந்த வேகமான நரம்பியல் தொடர் பரிவர்த்தனைகள்தான் நம்மை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன.
எதிர்பாராத காயங்கள் மூலமாக வரும் வலி, அது சார்ந்த சிகிச்சைகள் ஒரு புறமிருக்கு, நிரந்தர வலி (Chronic Pain) என்பது பலருக்கும் இருக்கிறது. சிலருக்கு முதுகு வலி, கழுத்து வலி, வயிற்று வலி என இருக்கலாம். நீண்ட நாள்களாக அல்லது நிரந்தரமாக இருக்கும் வலிக்கான அடிப்படை காரணங்களை ஆராய்ந்து அது கண்டறியப்படவில்லை என்றால், அதை மட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை முயற்சிகளை மட்டுமே மருத்துவர்கள் எடுக்க முடியும். இந்த இடத்தில்தான் வலிக்கான மருந்துகளின் தவறான பயன்பாடு தொடங்குகிறது. வலியை மழுங்க வைக்கும் மருந்துகள் எப்படி வேலை பார்க்கின்றன என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பிட்ட இடத்தில் வலி இருக்கிறது என்பதை உடலின் செல்கள் மூளைக்கு தெரிவிக்க ‘பிராஸ்டக்ளாண்டின்’ (prostaglandins) எனும் வேதிப்பொருளை பயன்படுத்துகிறது. உடலின் ஏதாவதொரு பகுதியில் இந்த வேதிப்பொருள் அதிகம் இருந்தால், அந்த இடம் வலியால் பாதிக்கப்பட்டிருக்கிறது எனப் பொருள். வலி நிவாரணி மருந்துகளின் பணி இந்த வேதிப்பொருள் சுரப்பதைக் குறைப்பது அல்லது முழுக்க நிறுத்திவிடுவது. ஆக, வலிக்கான அடித்தளம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், வலி உணர்வை மழுங்கடிக்கும் வேலையை மட்டுமே நிவாரணிகள் செய்வது தெளிவாகிறது. இந்த நிவாரணிகள் இல்லையென்றால் வலி வந்துவிடும் என்பதால், இதன் மீதான சார்பு நிலை உருவாகி, ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகிவிடும் நிலை வந்துவிடுகிறது.
சரி, கையறு நிலைதான் நம் தலைவிதியா என்ற கேள்வி எழலாம். அதற்கு பதிலாக “இல்லை” என்ற குரல்கள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பலமாக எழத் தொடங்கியிருக்கின்றன. இந்தக் குரலுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் குரல், டாக்டர் ஜான் சர்னோ என்பவருக்கு சொந்தமானது. பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட அவரது நூலான - “குணமாகும் முதுகு வலி - மனம்/உடல் தொடர்பு” (Healing Back Pain : The Mind-Body Connection) - சக மருத்துவர்களால் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
டாக்டர் சர்னோ தனது கண்டுபிடிப்பை “பதற்ற தசைவீக்க நோய்க்குறி" (Tension Myositis Syndrome - TMS) என அழைக்கிறார். அதன் விளக்கம் மிக எளிமையானது - கோபம், கவலை, தாழ்வு மனப்பான்மை, விரக்தி போன்றவை ஏற்படும்போது, அதிலிருந்து பாதிக்கப்பட்டவரை திசை திருப்ப, மூளையானது சில குறிப்பிட்ட உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்துகிறது. இப்படி ரத்த ஓட்டம் குன்றிப்போனால், அந்த இடத்தில் வலி உணர்வு என்பது வரும் என்பது உடற்கூறு அறிவியலின் அடிப்படை. மனதளவில் இருக்கும் காயங்களைப் பற்றிய கவலைகளை விட்டு விட்டு, நாம் மேற்கண்ட வலியை எப்படி மேலாண்மை செய்வது என்பதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுகிறோம். ஆக, நம் மனப் பிரச்சனையைத் தீர்க்கிறேன் என உடல் எடுக்கும் முயற்சி, உடல்நலக்குறையில் கொண்டுவந்து விடுகிறது என்பது அவரது ஆராய்ச்சியின் முடிவு.
நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் நீள்வலியை எப்படி சரி செய்வது என்ற கேள்விக்கு அவரது எளிய பதில், இது மூளையால் உருவாக்கப்படுகிறது என்பதை மூளையாலேயே கற்றுத் தெளிந்துவிட்டால், அது வலியைக் கொண்டுவரும் ரத்தக் குறைப்பை நிறுத்திவிடும் என்பதை நூலில் விளக்கியதுடன், தனது மருத்துவ நடைமுறையில் பின்பற்றி பல்லாயிரக்கணக்கானவர்களை குணப்படுத்தியும் இருக்கிறார் சர்னோ. இப்படி ஒரு நூலைப் படிப்பதன் மூலமாக மட்டுமே வலியை அகற்ற முடியாதவர்களுக்கு, மனோநல சிகிச்சை மூலம் கற்பிக்கலாம்; வேதி மருந்து என்பது தேவையில்லை என்பது அவரது மருத்துவ கோட்பாடு.
அவரைப் பற்றி சமீபத்தில் வெளியான ஆவணப்படம் ஒன்றில் விளையாட்டு வீரர்கள் முதல் ஹாலிவுட் பிரபலங்கள் வரை அவரது சிகிச்சை முறைபற்றி சிலாகிக்கிறார்கள். அவர் தனது கண்டுபிடிப்பை நூலாக எழுதிய புதிதில் அதை எதிர்த்து வந்தவர்கள், இந்த அறிவியலில் உண்மை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அதிக விபரங்களுக்கு https://manzanomedicalgroup.com/tension-myositis-syndrome-tms/ என்ற பக்கத்திற்கு செல்லுங்கள்.
இத்தொடருக்கான பிரத்யேக முகநூல் பக்கம் - https://www.facebook.com/LetsTalkSTEM . அங்கு கமெண்ட் பகுதியில் தொடர் பற்றிய பின்னூட்டங்கள், எந்த டாப்பிக்குகளை அலசலாம் என்பதைத் தெரிவியுங்கள். +1 (628) 240-4194 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் அனுப்பலாம்.