இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா! ‘இது என்ன புதுத் தகவலா' என்று கேட்கிறீர்களா? இல்லைதான். ஆனால் இவர் மேற்கொண் டிருக்கும் முயற்சி நிச்சயமாகப் புதுசு. ஆம். தான் பைக் ரேஸர் ஆனது மட்டுமல்லாமல், தன்னைப் போல மற்ற பெண்களும் பைக் ரேஸராக வேண்டும், என்ற உயர்ந்த லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறார்.
அந்த முயற்சியின் முதல் கட்டமாக, தற்போது பெண்களுக்காக முதல் முறையாக தேசிய அளவில் பைக் ரேஸ் நடத்த இருக்கிறார். இதற்காக சென்னையில் 10 மகளிர் கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளார். இந்தக் கல்லூரிகளுக்குச் சென்று அங்கிருக்கும் மாணவிகளிடம் உரையாடி இந்த பைக் ரேஸ் நடத்துவதின் நோக்கம் மற்றும் சேஃப்டி டிப்ஸ் ஆகியவற்றைக் கூற உள்ளார்.
இந்த தேசிய அளவிலான பைக் ரேஸில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் அலிஷாவிடம் பதிவு செய்துக்கொள்ளலாம். பதிவு செய்வதற்கான இறுதி நாள் இந்த மாதம் 31-ம் தேதி.
அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு அலிஷா அப்துல்லா ரேஸிங் அகாடெமி மூலம் பயிற்சி கொடுக்கப்படும். பயிற்சி முடிந்த பின் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் 10 பெண்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஜூன் 3-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிகள் அக்டோபர் மாதம் வரை பல கட்டங்களாக நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் சுமார் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அலிஷாவிடம் பேசியபோது, “இந்தியாவுல இது மாதிரி பெண்களுக்கான பைக் ரேஸ் நடக்கிறது இதுதான் ஃபர்ஸ்ட் டைம். சென்னையில் பல பெண்கள் பைக் ரேஸராக வரணும்னு லட்சியத்தோடு இருக்காங்க. ஆனா எல்லோருக்கும் அதுக்கான சான்ஸோ, ட்ரெய்னிங்கோ கிடைக்கிறதில்லை. அதனால்தான் அவங்களுக்காகவே இப்படி ஒரு போட்டியை நான் நடத்துறேன்.
இந்தப் போட்டியில கலந்துக்க முதல்ல ரிஜிஸ்டர் பண்ணனும். ரிஜிஸ்ட் ரேஷன் இலவசம். இது மாதிரியான போட்டியை நடத்துறதுல எனக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு. இப்ப என்னோட நேரத்தை எல்லாம் இதுக்காகத்தான் ஸ்பெண்ட் பண்றேன்" என்றார்.
கூடுதல் விவரங்களுக்கு: ஸ்வப்னா 9884971159