இளமை புதுமை

இளமைக் களம்: பேசவைத்த வெற்றி!

மிது கார்த்தி

கடந்த ஆண்டு திருவனந்தபுரம் மேயர் தேர்தலில் 21 வயதேயான ஆர்யா ராஜேந்திரன் என்கிற இளம் பெண் வெற்றி பெற்றது நாடு முழுவதும் பேசுபொருளானது. அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்திலேயே இளம் வயது ஊராட்சி மன்றத் தலைவர் என்கிற சிறப்பைப் பெற்றிருக்கிறார் தென்காசியைச் சேர்ந்த சாருகலா என்கிற 22 வயது கல்லூரி மாணவி.

இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களில்தான் இருக்கிறது என்று சொன்னார் காந்தி. அந்தக் கிராமங்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொள்வதற்கு உதவுபவை கிராம ஊராட்சி மன்றங்கள். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் போன்ற பதவிகள் மூலம் ஒரு கிராமத்தின் தேவைகளை நிறைவேற்றமுடிகிறது. கட்சி சின்னங்களுக்கு வேலை இல்லாத இந்தத் தேர்தலில் கிராமத்தில் பொதுச்சேவை செய்யும் யாரும், மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுவிடலாம். அந்த வகையில் கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும் ஊராட்சி மன்றத் தேர்தலில் விரும்பி போட்டியிட்டனர்.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கவனம் ஈர்த்திருக்கிறது தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 22 வயதான சாருகலா, 796 வாக்குகள் அதிகமாகப் பெற்று ஊராட்சி மன்றத் தலைவராகியிருக்கிறார். இதன்மூலம் தமிழகத்தின் இளம் ஊராட்சி மன்றத் தலைவர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார். தற்போது கோவையில் பொறியியல் படித்துவரும் நிலையில், இந்த வெற்றி அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்த வெற்றியின் பின்னணியில் சாருகலாவின் குடும்பம் இருந்தாலும், “என்னைப் பொறுத்துவரை தலைவராக, சுதந்திரமாகத் தனித்துத்தான் செயல்படுவேன். மக்களோடு மட்டுமே ஆலோசனை செய்வேன்” என்று கூறியிருக்கிறார். “படித்த இளைஞர், இளம் பெண்கள் உள்ளூர் அளவில் அரசியலுக்கு அதிகமாக வர வேண்டும். ஏனென்றால், மற்றவர்களைவிடப் படித்த இளைஞர்கள்தாம் மக்களுக்கு அதிகம் செய்ய முடியும். எங்கள் கிராமத்தைப் பசுமையாக்கி சிறந்த ஊராட்சிக்காகக் குடியரசுத் தலைவர் கையால் விருது வாங்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்றும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் சாருகலா.

சாருகலாவைப் போலவே நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுஹட்டி ஊராட்சியில் நதியா என்கிற 22 வயது இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்த ஆண்டுதான் கல்லூரிப் படிப்பை முடித்தவர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்தில் வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட 21 வயதாகும் தீபிகா என்பவர் வெற்றி பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலபுத்தநேரி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 22 வயதான இளைஞர் மனோஜ்குமார் என்பவர் வாகை சூடியுள்ளார். இவர்களில் கட்சி ஆதரவோடு வெற்றி பெற்றவர்களும் உண்டு.

அரசியல், தேர்தல் என்றாலே இந்தத் தலைமுறை இளைஞர்கள் பலருக்கும் பிடிக்காத வார்த்தையாகிவிட்டது. அரசியல், அரசியல்வாதி என்றாலே ஒதுங்கிச் செல்லும் இளைஞர்களும் அதிகரித்துவிட்டார்கள். இதுபோன்ற சூழலில் தேர்தலில் வெற்றிபெற்ற இந்த இளைஞர்கள் மற்ற இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள்தானே நாளைய தலைவர்கள்!

SCROLL FOR NEXT