"ஒரு மனிதனின் பிறப்பு சம்பவமாக இருக்கலாம். ஆனால், அவரின் இறப்பு சரித்திரமாக அமைய வேண்டும்" என்ற தனது வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து காட்டினார் முனைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். அவர் மறைந்தாலும், அவரின் கனவுகளும், எண்ணங்களும் நம்முடன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றன.
அவரின் கனவுப்படி அவர் மட்டுமே இவ்வாறான சரித்திர வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போக வேண்டும் என்று விரும்பவில்லை. ஒவ்வொரு இந்தியனும் அத்தகைய உயர்ந்த, லட்சிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பினார், வலியுறுத்தினார். இந்திய மக்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என ஒட்டுமொத்த நாட்டிற்குமான அவரது கனவு ஒரு பெருங்கனவு. இதுவே அவரின் நாட்டுப்பற்றையும் வெளிக்காட்டுகிறது.
அப்துல் கலாம் சொல்வது ஒரு சிறந்த மனோதத்துவம். கனவு காணும்போது கனவுகள் எண்ணங்களாக மாறும், எண்ணங்கள் செயலில் பிரதிபலிக்கும். எண்ணங்களில் நேர்மை இருந்தால், அதுவே உயர்வான வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.
அவரின் கனவு மிகப்பெரியது. நாட்டில் உள்ள 30 வயதுக்குட்பட்ட 54 கோடி பேரையும் ஊக்கப்படுத்தி அவர்களைச் சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும். அவர்களுக்குச் சிறந்த கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களுடைய ஆளுமைத் திறன் மேம்பட வேண்டும் என்றார்.
இளைஞர்களின் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் வளர்ந்த நாடாக மாறிவிடுவோம் என்று உறுதிபடச் சொன்னவர் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
இந்தியா அறிவார்ந்த பண்புகளைக் கொண்ட நாடு என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என கலாம் வலியுறுத்தினார். இந்தியாவை உலகில் வாழச் சிறந்த நாடுகளில் ஒன்றாகவும், அனைத்து இந்தியர்களின் முகங்களிலும் புன்னகை மலரவேண்டும் என்பதே கலாம் கண்ட கனவு. கலாமின் கனவுகளை நனவாக்கும் பெரும் பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது.
அவரின் கனவு ஆண்டான 2020ஆம் ஆண்டிலிருந்து அவரின் கனவுகளும் நிறைவேறி வருகின்றன. உலக அளவில் கரோனா பெருந்தொற்றினால் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் இயற்கை சிறிதளவு மீண்டுள்ளது. கிராமப்புற மக்களின் கைகளிலும் நகர்ப்புற மக்களுக்கு நிகராக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இது அவரின் இன்னொரு கனவாகும்.
அரசின் கொள்கை முடிவுகளால் மாற்று வழியில் மின்சாரமும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைப்பது அதிகரித்துள்ளது. இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து வரக்கூடும் என நினைத்த அவரின் கனவுத் திட்டமான இணையவழிக் கல்வி இன்றே வந்துவிட்டது. இந்திய இளம் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இணையவழிக் கல்விச் சேவைகள் உலக அளவில் வரவேற்கப்படுகின்றன. கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகளுக்கு ஏற்ற நாடாக இந்தியா உருவாகி வருகிறது.
உலகிலேயே சிறந்த மருத்துவ வசதிகள் கட்டமைப்பு மிகுந்த நாடாக இந்தியா வரவேண்டும் எனக் கனவு கண்டார். தடுப்பூசி உற்பத்தி, மருந்துகள் ஏற்றுமதி போன்ற செயல்களில் இந்தியா அபரிமிதமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அறவே இல்லாதிருக்க வெண்டும் என்ற அவரின் கனவு இன்னும் நிறைவேறவில்லை.
விவசாயிகளும், விவசாய விஞ்ஞானிகளும், தொழிற்சாலைகளும் இணைந்து சீரிய முறையில் உழைத்தால், நமது விவசாயப் பொருளாதார வளர்ச்சியை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரிக்க முடியும் என்றார் கலாம். விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போக அனுமதிக்கக் கூடாது.
கல்வி, தொழில் வளர்ச்சி, விவசாயம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் உலகத்திற்கு ஒரு முன்னுதாரணமான நாடாகவும் மாறிக்கொண்டு வருகிறது. இன்றைக்கு நம்மிடையே கலாம் இருந்திருந்தால், இன்னும் பல திட்டங்களை அவர் சொல்லி இருக்கக் கூடும்.
அவர் ஏற்கெனவே சொன்ன திட்டங்களை நனவாக்க இன்றைய இளைய தலைமுறையினர் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனின் முன்னேற்றம்தான் ஒட்டுமொத்த நாட்டின் முன்னற்றம். இந்தியாவின் இயற்கை வளத்தைப் பாதுகாத்து மேம்பட்ட நிர்வாகம் அனைவரும் வசிக்க ஆசைப்படும் அமைதியான, அழகிய நாடாக நமது இந்தியா மாறும்போது அவரின் கனவு உயிர்பெறும். அதுவே இந்தியர்கள் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
கட்டுரையாளர்: முனைவர் இரா. இராஜ்குமார்,
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகப் பேராசிரியர்.