பெருந்தொற்று பொதுமுடக்கக் காலங்களில் தனது வருவாயைக் கிடுகிடுவென பெருக்கிக் கொண்டுபோன முகநூல் நிறுவனத்திற்கு சமீபத்தில் சறுக்கல் ஏற்பட்டிருப்பதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பொழுதுபோக்குக்காகத் தொடங்கப்பட வலைத்தளம் 2004 -ல் நிறுவனமாக்கப்பட்டு பெருவளர்ச்சி கண்டது. சந்தைக் கணக்கீட்டின்படி வணிக உலகில் ஆறாவது இடத்தில் நிற்கிறது.
சறுக்கல் என்றதும் சென்ற வாரத்தில் முகநூல், அதன் இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் சேவைகள் பல மணிநேரங்கள் இயங்காமல் போனதைத்தான் சொல்லவருகிறேன் என நினைத்திருப்பீர்கள். ஆனால், அதைவிடப் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது முகநூல் நிறுவனம்.
நடப்பது இதுதான். சென்ற சில வாரங்களாகவே, நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற முன்னணி நாளிதழ்களில் அரசல் புரசலாக முகநூலைப் பற்றிய செய்திக் கசிவுகள் வந்தபடி இருந்தன.
உதாரணத்துக்கு, “பதின்ம வயதில் இருக்கும் பெண்களின் மனநலத்திற்கு இன்ஸ்டகிராம் நச்சாக இருப்பது முகநூலுக்குத் தெரியும்" என்ற தலைப்பில் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழ் கட்டுரை ஒன்றை ‘முகநூல் கோப்புகள்’ என்ற தொடராக ஆரம்பித்து, பல கட்டுரைகளை வெளியிட்டது. தொழில்நுட்ப உலகை உற்று நோக்கும் என் போன்ற ஆர்வலர்களுக்கு அது என்ன கோப்புகள், அது ஊடகங்களுக்கு எப்படிக் கிடைத்திருக்கும் என்ற கேள்விகள் இயல்பாகவே எழுந்தன.
அந்த கேள்விகளுக்கு சென்ற வாரத்தில் விடை கிடைத்திருக்கிறது. விடையின் பெயர் - பிரான்சஸ் ஹாகன்.
முகநூல் நிறுவனத்தின் குடிமைப் பொறுப்புக் குழுவில் சில வருடங்கள் பணியாற்றிய பிரான்சஸ், அடிப்படையில் தொழில்நுட்ப வல்லுநர். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து கூகுள், பிண்ட்ரஸ்ட் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றியவரின் சிறப்புத் திறன் - வழிமுறை சார்ந்த தயாரிப்பு மேலாண்மை (Algorithmic Product Management). அதென்ன குழப்பமான பெயர் என மூளையைக் கசக்க வேண்டாம்.
பயனாளர்களிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர்களைப் பற்றி பெற்றுக் கொள்ளப்படும் தகவல் புள்ளிகளை, எப்படி ஒருங்கிணைத்து தங்கள் வலைத்தள அல்லது அலைபேசி சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த வைக்கலாம் என்பதை வடிவமைக்கும் திறன் அது.
கிட்டத்தட்ட 200 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களைக் கொண்டிருக்கும் முகநூல் அறம் சார்ந்த வழிகளில் இயங்குகிறதா என்பதை சோதித்தறிவதுதான் பிரான்சஸ் இணைந்திருந்த குடிமைப் பொறுப்பு குழுவின் முக்கியப் பணி. “ஆனால், குடிமைப் பொறுப்புடன் நடந்துகொள்வதற்கு பதிலாக முகநூல் தெரிந்தே வெறுப்பு, உளச்சிக்கல்களை உருவாக்கும் பதிவுகளை நிரலி வழிமுறைகள் மூலம் பிரபலமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன்” என்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் சென்ற வாரம் வெளிப்படுத்தினார் பிரான்சஸ்.
முகநூல் நிறுவனத்திலிருந்து விலகுவதற்கு முன்னதாக, பிரான்சஸ் அங்கிருக்கும் கோப்புகளைப் பிரதி எடுத்து வைத்திருக்கிறார். நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அதற்குச் சொந்தமான கோப்புகளை இப்படி எடுத்துச் செல்வது அறிவுசார் சொத்துத் திருட்டு, மற்ற நிறுவனத்துக்காக உளவு பார்த்தது என பல கிரிமினல் வழக்குகள் பாயும் ஆபத்து உண்டு. ஆனால், வேலை பார்த்த நிறுவனமே தவறான, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றால், அதை வெளிக்கொண்டு வர முயல்பவர்களுக்கு ஆதரவாக ‘விசில் ஊதுபவர் பாதுகாப்பு’ (Whistleblower Protection) என்ற சட்டப் பாதுகாப்பு இருக்கிறது.
ஊடங்கங்களுக்கு மட்டும் அல்லாமல், பங்குச் சந்தையை சட்ட மேலாண்மை செய்யும் SEC ( Securities Exchange Commission, இந்தியாவின் SEBI போன்றது இது) மற்றும் அமெரிக்க செனட் வரை தனது புகாரை அடுக்கடுக்காகக் கொண்டு சென்றிருக்கிறார் பிரான்சஸ்.
தனது நடவடிக்கைகளால், பதின்ம வயதினர்களுக்கு வரும் மன அழுத்தம் போன்றவை ஒரு புறமிருக்க, குழுகளாகப் பிரிந்து போர் செய்யும் ஆப்பிரிக்க நாடுகளில் முகநூல் மூலமாகக் கொலைத்திட்டங்கள் நடப்பதெல்லாம் தெரிந்தும் , முகநூல் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் கொடுத்துக் கொண்டிருக்கும் பகீர் தகவல்கள் கவலையூட்டுபவை. காரணம், இவை நிருபிக்கப்பட்டால், முகநூல் நிறுவனம் கடும் நெருக்கடியை, ஏன், அதை இரண்டாக, அல்லது மூன்றாகத் துண்டித்து நடத்த வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. “இன்னும் நிறைய இருக்கிறது; விரைவில் வெளிவரும்" என பிரான்சஸின் வழக்கறிஞர் சொல்லியிருப்பது இந்த வரி எழுதப்படும் முன்பாக வந்த லேட்டஸ்ட் செய்தி.
முகநூல் நிறுவனத்தின் மார்க் ஜக்கர்பர்க் இவை எல்லாவற்றையும் மறுத்திருக்கிறார். தன்னுடைய பதிவை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். “பொறுப்பில்லாமல் இருந்திருந்தால் நாங்கள் ஏன் குடிமை பொறுப்பு என்ற குழுவையே அமைத்திருக்க வேண்டும்? வெறுப்பு பதிவுகள்தான் விளம்பர வருவாயை அதிகமாக்குகிறது என்பதும் தவறு. காரணம், விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரங்களை வெறுப்புப் பதிவுடன் சேர்த்துப் வெளியிட விரும்புவதில்லை” என்ற கோணத்தில் செல்கிறது அவரது விவரணை. இதில் என்ன அடுத்தடுத்து நடக்கப் போகிறது என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.
வாட்ஸப் மூலம் பின்னூட்டங்கள் வரத்தொடங்கியிருக்கின்றன. “வானத்தில் இருந்து வரும் மின்னலில் இருக்கும் ஆற்றலைப் பெற்றுச் சேமிக்க முடிந்தால், அது மிகப்பெரிய புதுப்பிக்கும் ஆற்றல் வடிவாக (Renewable Energy) இருக்குமே. ஏன் செய்வதில்லை ?” என தூத்துக்குடியில் இருந்து பிரிவீன், “வைரஸ்களை கொண்டிருப்பதால், வவ்வால்களைப் பற்றிய மக்களிடம் பயம் அதிகரித்திருப்பதாக தெரிகிறது. ஆனால், சூழலியலுக்கு அவை முக்கியமா ?” என கோவையிலிருந்து வாணி என்ற வாசகர்களுடன் வேறு சில சில கேள்விகளும், பின்னூட்டங்களும் வந்திருக்கின்றன. அடுத்த வாரத்தில் இந்த கேள்விகளுக்கான பதில்களை அலசலாம்.
இக்கட்டுரையின் முழு வடிவத்தை ‘கதைப்போமா அறிவியல்?’ இணையப் பக்கத்தில் வாசிக்கலாம். இத்தொடருக்கான பிரத்தியேக முகநூல் பக்கம் - https://www.facebook.com/LetsTalkSTEM . அதில் தொடர் பற்றிய பின்னூட்டங்களையும், எந்த தலைப்புகளை அலசலாம் என்பதையும் சொல்லுங்கள். 1 (628) 240-4194 என்கிற வாட்ஸ் அப் எண்ணிலும் அனுப்பலாம்.