இளமை புதுமை

அடுத்த தலைமுறையின் அதிரடி டென்னிஸ்!

மிது கார்த்தி

டென்னிஸ் விளையாட்டில் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பதின்ம வயதில் சிறந்த வீராங்கனைகள் உருவாவது வாடிக்கை. 2020ஆம் ஆண்டு முடியும் தறுவாயில் பிரெஞ்சு ஓபனில் போலந்தைச் சேர்ந்த 19 வயதான இகாஷ்வான்டெக் பட்டம் வென்று ஆச்சரியமூட்டினார். இதோ, இப்போது அமெரிக்க ஓபனில் பட்டம் வென்று டென்னிஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் 18 வயதான எம்மா ரதுகானு.

இந்த முறை நடந்த அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி மிகவும் சுவாரசியமானது. இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இரு வீராங்கனைகளுமே பதின்ம வயதினர். பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ரதுகானுவுக்கு 18 வயது என்றால், அவரை எதிர்த்துக் களமிறங்கிய கனடாவின் லேலா அனி ஃபெர்னாண்டஸுக்கு 19 வயது. இருவருமே டென்னிஸ் தரவரிசையில் எங்கோ இருக்கிறார்கள். எம்மா 150-ஆவது இடம். லேலா 73-ஆவது இடம்.

எம்மாவின் அதிரடி

இந்த இருவருமே அமெரிக்க ஓபனில் ஜாம்பவான் வீராங்கனைகளை அடித்து நொறுக்கித் தள்ளிவிட்டுத்தான் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்கள். இந்த இரு வீராங்கனைகளும் இந்த அளவுக்கு முன்னேறி வருவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தரவரிசையில் முன்னணியில் இருந்த வீராங்கனைகள் எல்லாம் சுற்றுப் போட்டி, நாக் அவுட் சுற்றுகளோடு மூட்டையைக் கட்டினர். இரு இளம் புயல்கள் மோதிய இறுதிப்போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் சுற்று தொடங்கி அரையிறுதிச் சுற்று வரை ஒரு செட்டைக்கூட இழக்காமல் எம்மா இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். ஆனால், லேலா நான்கு செட்களை இழந்து, போராடித்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அந்த வித்தியாசம் இறுதிப் போட்டியிலும் அப்பட்டமாகத் தெரிந்தது. இறுதிப் போட்டியில் எம்மா 6-4, 6-3 என்கிற நேர் செட்டுகளில் எளிதாக பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

காலச்சக்கரம் புதிய தலைமுறைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கும். மகளிர் டென்னிஸில் அடுத்த தலைமுறை தங்கள் வரவை அதிரடியாக அறிவித்திருக்கிறது, நாங்க வந்துட்டோம்!

SCROLL FOR NEXT