நுப்பும்நுரையுமாக அடித்துவந்த டிசம்பர் 2015 மழை வெள்ளப்பெருக்கில் எண்ணிலடங்கா மனிதாபிமானமும் கூடவே வந்துசேர்ந்து உதவிகள் பல செய்ததை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்திட முடியாது.
'தி இந்து' குழுமத்தின் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பொருட்டு ‘மீண்டு எழுகிறது சென்னை' எனும் பெயரில் நிவாரண முகாம் நடத்தப்பட்டது. அதில், தன்னார்வலர்களாகப் பணியாற்ற இளைஞர்கள் பலர் ஆர்வமாக முன்வந்தனர். அவர்களில் மூன்று சிறுவர்கள் ஆற்றிய பணி வார்த்தைகளில் விவரித்துவிட முடியாத அற்புத நிகழ்வு!
அந்தப் பிஞ்சு தன்னார்வலர்கள் அசோக், அர்ஜுன், ஆறுமுகம் மூவருக்கும் டெல்லியில் நடைபெற்ற விழாவில், 'இந்தியன் ஆஃப் தி இயர் 2015' விருது வழங்கி என்.டி.டி.வி. சேனல் கவுரவித்துள்ளது. தமிழக மழை வெள்ளத்தின்போது களத்தில் செயல்பட்டதற்காக, நாட்டுக்குச் சேவையாற்றியவர்கள் பிரிவில் இம்மூவரும் சிறப்பிக்கப்பட்டனர்.
இதே பிரிவில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, கஜலட்சுமி, ககன்தீப் சிங் பேடி மற்றும் நடிகர் சித்தார்த் ஆகியோருடன் மேடையேறிய இம்மூவரும் ஒருசேர உதிர்த்த வார்த்தைகள்: "நாங்க நல்லா படிச்சு இன்னும் நிறைய பேருக்கு உதவி பண்ணனும்". இவர்களது பின்னணி பற்றி அறிந்து கொண்டு, இந்தச் சொற்றொடரை மீண்டும் படித்துப் பார்த்தால் நிச்சயம் அசாதாரண அனுபவம் கிடைக்கும்.
எங்கிருந்து வந்தார்கள்? என்ன செய்தார்கள்?
வத்தலகுண்டுவிலிருந்து சென்னைக்குப் பிழைப்பு தேடி வந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவர்கள். அசோக் எட்டாம் வகுப்பு. அர்ஜுனும் ஆறுமுகமும் ஐந்தாவது படிக்கிறார்கள். இவர்களது குடிசைகள் சேப்பாக்கம் ரயில்வே பாலத்துக்குக் கீழே கூவம் கால்வாயையொட்டி அமைந்துள்ளது. அதுவும் மழைக்கு முன்புவரையிலும்தான். பெருகிவந்த மழை வெள்ளத்தில் சிறுவர்களின் மூன்று குடிசைகளும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
வீதிகளையே அன்றாட வாழ்க்கைக்கான களமாகக் கொண்ட இந்தச் சிறுவர்கள் தங்கள் குடிசைவீடுகள் அடித்துச் சென்றது பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் நகர்வலம் வந்தபோது, அவர்களின் பார்வையில் பட்டது, சுறுசுறுப்பாக இயங்கி வந்த நிவாரண முகாம். அங்கே காலில் சக்கரத்தைக் கட்டியதுபோல சுற்றிச்சுழன்றார்கள் இந்த மூவரும்.
“தம்பிங்களா நீங்க ஒண்ணும் செய்ய வேணாம். ஓரமா உட்காருங்க” என்று சொன்னாலும் கேட்பதாக இல்லை. “அண்ணே எங்களுக்காக எங்கிருந்தோ எல்லாம் வந்து வேலை செய்யறாங்க. நாங்களும் செய்யறோம்ண்ணே” என்றார்கள். நிவாரண முகாம் தொடங்கிய நாள் முதல் கடைசி நாள் வரை தங்களால் இயன்றதைச் செய்தார்கள், சக தன்னார்வலர்களால் ‘காக்கா முட்டை'கள் என்றழைக்கப்பட்ட இந்த வாண்டுகள். இவர்களின் சேவையும் ‘தி இந்து'வில் பதிவானது. இவர்களைப் போன்று வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்குக் கடந்த 1ம் தேதி 'தி இந்து' பாராட்டு விழா நடத்தியது. இந்த விழாவுக்கு 'ஓட்டோ' ஆடையகம், சாய்ராம் கல்விக் குழுமம் மற்றும் சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங் ஆகிய நிறுவனங்கள் உறுதுணையாக இருந்தன.
முதல் ப்ளேன் பயணம்!
என்.டி.டி.வி. விருது பற்றிய அறிவிப்பு கிடைத்ததும் ஓர் இளைஞர் ‘நான் இவர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்கிறேன்' என பொறுப்பேற்க முன்வந்தார். அவர் வசந்த். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனித வள அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர் இவர். நிவாரண முகாம் பணிகளில் வந்து தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து உதவிப் பணிகளை ஈடுபாட்டோடு செய்துவந்தவர்.
களப் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மேடையேறிய சிறுவர்களுக்குத் தேவையான உடனடி பொருட்களை வசந்த் வாங்கித் தந்தார். பெற்றோர்களிடம் பேசி, அன்றிரவு தன் வீட்டுக்கு அவர்களை அழைத்துச் சென்று தன் பிள்ளைகளோடு அவர்களையும் தங்கவைத்தார்.
தன்னுடைய பல்வேறு அலுவலகப் பணி நெருக்கடிகளுக்கு இடையில் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்ட வசந்த் விருதுபெறும் சிறுவர்களுக்குத் துணையாக மறுநாள் டெல்லிக்குச் சென்றார்.
கூவம் கால்வாய் அருகே ரயில்வே பாலத்தின்கீழே எந்தவிதப் பாதுகாப்பும் வசதியுமின்றி இருந்த இவர்களை அடிக்கடி அழைத்து தேவையானதை வழங்கி ஊக்குவித்து உறுதுணை புரிந்தவர், திருவல்லிக்கேணி சரக காவல் உதவி ஆணையாளர் பீர்முகம்மது. இவரிடம் வாழ்த்துகளைப் பெற்று மூவரும் டெல்லிக்குப் புறப்பட்டனர்.
இதுநாள் வரை வானில் விமானம் பறப்பதை மட்டுமே பார்த்து வந்த இந்தச் சிறுவர்களின் முதல் விமானப் பயணம் இது! விருது பெற்றுத் திரும்பிய சிறுவர்கள் 'தி இந்து' அலுவலகத்துக்கும் அழைத்து வரப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.
இளவரசர்கள் உதிர்த்த முத்துகள்
"டெல்லிக்கு ப்ளேன்ல போயிட்டு வந்தது நல்லா இருந்துச்சு. அந்த ஃபங்ஷன்ல யார் யாரோ பெரிய பெரிய வி.ஐ.பி.லாம் இருந்தாங்க. நாங்க ஜாலியா சித்தார்த் அண்ணா கூட அரட்டை அடிச்சோம். கேம்ப்ல ரொம்ப ஜாலியா வேலை செஞ்சோம். எங்களுக்கு இவ்ளோ பெரிய அவார்டு கிடைச்சுருக்கு. நல்லா படிக்கணும். இன்னும் நிறைய பேருக்கு உதவி செய்யணும்னு தோணுது" என்று அடுக்கியவர்களைப் பாராட்ட கைகுலுக்கியபோது அந்தப் பிஞ்சுக் கரங்களின் உள்ளங்கை வியர்வை ஈரம் இதமாக இருந்தது.
'நல்லாப் படிக்கணும்!' என்பதுதான் இப்போதைக்கு இவர்களின் ஒரே கனவு. அந்தக் கனவு நிறைவேறுமா?