உலகமே உலகக் கோப்பை கால்பந்து காய்ச்சலில் உற்சாகமாக இருக்கிறது. தன் பங்குக்கு அந்தக் காய்ச்சலை வித்தியாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கோயம்புத்தூர், வெள்ளலுரைச் சேர்ந்த வெங்கடேஷ்.
130 மில்லிகிராமில் உலகக் கோப்பையின் மாதிரியைத் தங்கத்தில் வடிவமைத்திருக்கிறார் இவர். கோப்பையின் அடியில் பொறிக்கப்பட்டிருக்கும் ‘பிரேசில்’ என்ற வார்த்தை பளிச்சிடுகிற அளவுக்குத் தத்ரூபமாக இருக்கிறது உலகக் கோப்பையின் அந்த மினியேச்சர்.
16 ஆண்டுகளாக நகை வடிவமைப்பாளராக வேலை செய்துவருகிற அனுபவம் வெங்கடேஷுக்குக் கைகொடுத்திருக்கிறது.
கால்பந்து, கால்பந்தாட்டக் குழு அனைத்தையும் 390 மில்லிகிராமுக்குள் வடிவமைத்திருக்கிறார். இவை தவிர 40 மில்லிகிராமில் மூன்று மதங்களின் சின்னங்களையும், மூக்குக் கண்ணாடியையும் வடிவமைத்திருக்கிறார். 150 மில்லிகிராமில் சைக்கிளையும், 170 கிராமில் பழைய மாடல் துப்பாக்கியையும் செய்திருக்கிறார். சைக்கிளின் சக்கரங்கள் சுழலுகின்றன. ஹேண்டில் பாரை அழுத்த முடிகிறது. தோட்டா போடுவதற்கு ஏதுவாகத் துப்பாக்கியைத் திறக்கமுடிகிறது. எல்லாப் பொருளையுமே அச்சுப் பிசகாமல் செய்திருப்பதில்தான் வெங்கடேஷின் திறமை பளிச்சிடுகிறது.
2009-ம் ஆண்டில் இருந்து இப்படி மினியேச்சர்களைச் செய்து வருகிறார் இவர். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் வெங்கடேஷ், முயற்சியும், திறமையும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்கிறார்.
“எனக்கு படிப்பு வரலை. அதனால ஏழாவதோட நின்னுட்டேன். என் அண்ணன்தான் என்னை நகைக்கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். படிச்சவங்க எல்லாரும் அவங்க படிப்புக்கு ஏத்த மாதிரி திறமையை வெளிப்படுத்தறாங்க. எனக்குதான் படிப்பு ஏறலையே? அதனால நான் கத்துக்கிட்ட தொழில்ல எதையாவது வித்தியாசமா செய்யணும்னு நினைச்சு இந்த மாதிரி மினியேச்சர்களை உருவாக்கினேன். இதைப் பார்த்துட்டு நிறையப் பேர் பாராட்டறாங்க. அது போதும் எனக்கு” என்கிறார் வெங்கடேஷ்.