இளமை புதுமை

அப்படிப் போடு!

செய்திப்பிரிவு

பிடிவாதம் பிடித்து ஸ்கூட்டர் வாங்கிவிட்டான் என் பிள்ளை. காலேஜ் போக இதுதான் உசிதம் என்று.

ஓட்டுபவன் முதல் மாடியிலும் பின்னால் உட்காருபவனோ / உட்காருபவளோ இரண்டாம் மாடியிலும் அமர்ந்து பயணிக்கும் 'யமஹா' போன்ற அதிநவீன ராட்சத வேக பைக்குகள் என் தரப்பிலிருந்து நிராகரிக்கப்பட்டு, சிறிய அழகிய பதவிசான ஆபத்திலாத டாட்டா நானோ என்கிற வாகனம் ‘கிழ போல்ட்டு’ கார் என்று அவன் தரப்பிலிருந்து நிராகரிக்கப்பட்டு சமரசம் ஏற்பட்டது அவ்வளவாய் ஆக்ரோஷம் இல்லாத 'ஹோண்டா ஆக்டிவா'க்கு.

ஷோரூமிலிருந்து டெலிவரி எடுக்க நானும் போய்ப் பின்னால் உட்கார்ந்து கொண்டுவந்தேன், எப்படி ஓட்டுகிறான் என்று பார்க்க. நம் நகரச் சாலைகள் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, எவ்வளவு அபாயகரமானது! சாலையே குண்டும் குழியுமாய் வேகமாய்ப் போக முடியாதபடிக்கு இருக்கப் பத்தடிக்கு ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் என்ற பிரத்யேக பெங்களூர் அவஸ்தை வேற.

வீட்டுக்கு வரும் ஐந்து கிலோமீட்டர் நெடுக ஐம்பது தவறுகள் கண்டுபிடித்து உபதேசம் செய்துகொண்டே வந்தேன்.

‘அவ்வளவு நெருக்கமா போகாத. அவன் சடன் ப்ரேக் அடிச்சா நீ போய் முட்டிப்ப’

‘லேன் மாத்தாத. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணா ஒண்ணும் ஆயிடாது'.

‘லாரியை ஓவர் டேக் பண்ணாத. சின்ன ரோடு. எதிர்த்த வர்ற காரு எவ்வளோ க்ளோசா வருது பாரு'.

‘ஆட்டோகூடப் போட்டி போடாத. அவன் தட்டினா நீதான் விழுவே'.

‘சைக்கிள் பாத்தா ஸ்லோ பண்ணு. சட்டுன்னு திரும்புவான்'

‘செல்போன் அடிச்சா அடிக்கட்டும். இப்ப பேசலன்னா ஒண்ணும் குடி முழுகிடாது'.

‘வண்டி ஓட்டும்போது பொண்ணுங்களை சைட் அடிக்காத. நேரா பார்த்துப் போ'.

அப்பாவுடனான அந்த ஐந்து கிலோமீட்டர் பிரயாணத்தில் எல்லாத்தையும் விட ஒரு முக்கியமான விதியை அவன் கற்றுக்கொண்டுவிட்டான். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் அதைத்தான் சொன்னான்.

‘சத்தியமா இனிமே உன்னை வண்டியில ஏத்த மாட்டேன்ப்பா!’

(எழுத்தாளர் ஆனந்த் ராகவ் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு இது)

SCROLL FOR NEXT