இளமை புதுமை

பளபளக்கிற ரசிகர் பட்டாளம்!

ஜெய்

திருவனந்தபுரம் ராஜாஜி நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சேர்ந்து விளையாட்டுத்தனமாகச் செய்த காரியம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியிருக்கிறது. நடிகர் சூர்யாவின் ரசிகர்களான அவர்கள், சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கத் திட்டமிட்டனர். போஸ்டர் ஒட்டுவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என வழக்கமான வாழ்த்தாக அது இருக்கக் கூடாது என்றும் அவர்கள் நினைத்தனர். அதில், அபி என்னும் இளைஞர் ‘அயன்’ படத்தை மறு ஆக்கம் செய்து அதைப் பதிவிட்டு வாழ்த்தலாம் எனத் தன் யோசனையை நண்பர்களிடம் பகிர்ந்தார். அது நண்பர்கள் எல்லோருக்கும் பிடித்துப்போனது.

செல்போனில் ஷுட்டிங்

சினிமா என்பது பெரும் பொருட்செலவில் எடுக்கும் ஒரு செயல். அதை எப்படி நாம் செய்ய முடியும் என அந்த இளைஞர்கள் தயங்கவில்லை. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல் தங்கள் கையில் இருந்த ஸ்மார்ட் போனை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். அந்தப் படத்தில் உபயோகித்த அதே கோணத்தில் படமாக்கத் தீர்மானித்தார்கள். ஆனால், படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதுபோல் அவர்களிடம் கிரேன், ஜிம்பல் போன்ற எந்த உபகரணமும் கையில் இல்லை. ஒரு கேமரா ஸ்டாண்ட்கூட இல்லை. ஆனால், அந்தக் காட்சியின் கோணத்தைப் பார்த்து அப்படியே பகிர்ந்திருக்கிறார்கள். இந்த மறு ஆக்கத்தின் இயக்குநர், படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லாம் அபிதான்.

கிரேன் ஷாட் தேவைப்படும் இடத்தில் ஒரு இளைஞனின் தோள் மீதி ஏறி நின்று எடுத்திருக்கிறார்கள். ஏரியல் காட்சிக்குத்தான் ரொம்பவும் திணறிப்போயிருக்கிறார்கள். பிறகு மொட்டை மாடியில் துணி காயப்போடும் கம்பியை உருவி அதன் முனையில் போனைக் கட்டி காட்சியை எடுத்திருக்கிறார்கள். “இம்மாதிரி எடுக்கும்போது காட்சி சரியாக வந்திருக்கிறதா, என மானிட்டரில் பார்க்கும் வசதி இல்லாததால் பல காட்சிகள் பல டேக் வாங்கின” எனச் சிரிக்கிறார் அபி.

எதிர்பாராத வாழ்த்து

இந்த இளைஞர்கள் மறு ஆக்கம் செய்த ‘பளபளக்கிற பகலா நீ’ பாடலுக்கு அவர்கள் வசிக்கும் ராஜாஜி நகரே பொருத்தமாக இருந்ததால், பெரும்பாலான காட்சிகளை அங்கேயே எடுத்திருக்கிறார்கள். சில காட்சிகளுக்காக மட்டும் மற்ற பகுதிகளுக்குச் சென்றிருக்கிறார்கள். இது மட்டுமல்லாது சண்டைக் காட்சிகளையும் தத்ரூபமாகப் படத்தைப் போலவே சிருஷ்டித் திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். அபி மட்டுமல்லாது சூர்யாவின் ரசிகர் பட்டாளமே இந்தக் கூட்டு முயற்சியில் இறங்கிச் சாதித்திருக்கிறது.

சூர்யாவுக்காகச் செய்யப்பட்ட இந்த வாழ்த்து அவரது காதுக்கும் எட்டிவிட்டது. அவர் அந்த இளைஞர்களுக்குக் குரல் செய்தியும் அனுப்பியிருக்கிறார். “எந்தவொரு உபகரணமும் நடன இயக்குநரும் இல்லாமல் இந்த இளைஞர்கள் செய்திருக்கும் காரியம் உண்மையில் வியப்பைத் தருகிறது. இயக்குநர் கே.வி.ஆனந்த் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்” என்று சூர்யா தெரிவித்துள்ளார். மேலும், “நாம் செய்யும் காரியத்தில் பேரன்பு இருந்தால் எதையும் சாதிக்க முடியும்” என அந்த ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்து மெய்ப்படட்டும்!

SCROLL FOR NEXT