இந்தியாவுக்கே உரிய விளையாட்டான ஹாக்கிக்கு இது பொற்காலம். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக ஆடவர், மகளிர் அணிகள் ஒருசேர அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பது பெரும் சாதனை.
1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றது. ஆனால், அப்போது நிலவிய சர்வதேச அரசியல் சூழலால் பல ஹாக்கி அணிகள் ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. ஆறு அணிகள் மட்டுமே பங்கேற்ற ஹாக்கிப் போட்டியில் காலிறுதி, அரையிறுதி என நாக் அவுட் சுற்றுகள் நடைபெறவில்லை. எனவே, முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியா-ஸ்பெயின் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. அதில், இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
எனவே, வழக்கமான ஒலிம்பிக் சுற்று அடிப்படையில் பார்த்தால், 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருப்பது இதுதான் முதல் முறை. ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கிப் போட்டி முதன் முதலாக 1980இல்தான் அறிமுகமானது. அப்போது ஒலிம்பிக்கில் விளையாடிய இந்திய மகளிர் அணி, மீண்டும் 2016 ரியோ ஒலிம்பிக்கில்தான் விளையாட தகுதி பெற்றது. அதில், எல்லாச் சுற்றுப் போட்டிகளிலும் மிக மோசமாகத் தோல்விடைந்தது மகளிர் அணி. ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் மூன்றுசுற்றுப் போட்டிகளில் தோல்வியடைந்தாலும், கடைசி இரண்டு போட்டிகளில் வென்று காலிறுதிக்குத் தகுதிபெற்று ஆச்சரியமூட்டியது மகளிர் அணி.
அதில், காலிறுதியில் ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு 1-0 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தி, முதன் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது, டேவிட்-கோலியத் கதையைத்தான் ஞாபகப்படுத்துகிறது. ஹாக்கியில் ஆடவர், மகளிர் என இரு அணிகளும் இந்தியாவுக்குப் பதக்கத்தை உறுதி செய்யத் தேவை இன்னும் ஒரு வெற்றிதான். வரலாறு திரும்புமா?