நமது மரபணுவில் உள்ள வளைந்த கோடுகள் மனிதனின் பலங்கள் மற்றும் பலவீனங்களை மட்டுமல்லாமல், வேறு கதைகளையும் சொல்பவையாக உள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நேஷனல் பயோ மெடிக்கல் ஜெனோமிக்ஸ் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வேறு வேறு சாதிகளைச் சேர்ந்த மனிதர்களின் மரபணுவைப் பரிசோதித்ததில் சாதி அமைப்பின் வரலாற்றையும் சொல்பவையாக மரபணுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பெரும்பாலான உயர் சாதிகளில், அகமண முறை 70 தலைமுறைகளுக்கு முன்னர் தொடங்கியிருக்க வேண்டும் என்று அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் குப்தர்கள் காலத்தில் சாதிய அமைப்பு வலுப்பெற்றிருக்க வேண்டும் என்று அமெரிக்க ஆய்விதழ் பி.என்.ஏ.எஸ். இந்த ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது.
“குப்தர்கள் காலத்தில் நிறைய சமூக மாற்றங்கள் நடந்துள்ளன. சாதி தாண்டி நடக்கும் திருமணங்களுக்கு எதிராக பல சமூகக் கட்டுமானங்கள் தர்மசாஸ்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இதுதொடர்பான சில சமூக முறைமைகள் மரபணுவில் சுவடுகளைப் பதித்துள்ளன. கவனமிக்க மரபணு ஆய்வின் வழியாக இவற்றைக் காணமுடியும்” என்கிறார் நேஷனல் பயோ மெடிக்கல் ஜெனோமிக்ஸ் இன்ஸ்டிட்யூட் இயக்குனரான பார்த்தா பி.மஜூம்தார். இந்த ஆய்வை இவருடன் சேர்ந்து அனலாபா பாசு மற்றும் நீத்து சர்க்கார் ராய் போன்றவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மூதாதையரின் மரபணுகளில் உள்ள வரிகளின் நீளத்தைப் பார்க்கும் போது, சாதிகளுக்கிடையிலான கலப்பு மணமுறை முடிவுக்கு வந்த காலகட்டத்தை இந்த ஆய்வாளர்கள் தெரிந்துகொண்டனர். மேற்கு வங்க பிராமணர்கள், எட்டாம் நூற்றாண்டு பாலப் பேரரசுக் காலகட்டம்வரை வடகிழக்குப் பகுதி சமூகத்தினருடன் திருமண உறவு முறைகளைக் கொண்டிருந்தனர் என்பதையும் மரபணு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மராத்தியர்களைப் பொறுத்தவரை சாளுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்களின் காலத்தில், கிட்டத்தட்ட ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண்மைக் குலத்திலிருந்து க்ஷத்திரியர்கள் வந்தபோதுதான் பழங்குடிகள் மற்றும் திராவிடச் சமூகத்தினரிடையே திருமண உறவு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
இருப்பினும் ஒரே இடத்தைச் சேர்ந்த மக்கள் தொகுதியினருக்குள் நிகழ்ந்த கலப்பு என்பது சீர்மையில்லாமல் சிதறலாகவே நிகழ்ந்துள்ளது என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மரபணுக்களின் மீது தாக்கம் செலுத்தியுள்ளனர். ஆனால் பரஸ்பரம் நடைபெறவேயில்லை.
சாதி இந்துக்களின் மேலாண்மை மற்றும் தந்தைவழிச் சமூக இயல்பை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
“சாதி இந்து ஆண் உறுப்பினர்கள் மற்ற சாதியினருடன் சேர்ந்து குழந்தைகள் பெற்றுள்ளனர். ஆனால் தாழ்த்தப்பட்ட ஆண்களின் விஷயத்தில் அப்போக்கு இல்லை. இதுவே சாதி இந்துக்களின் ஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது” என்கிறார் பார்த்தா பி.மஜூம்தார்.
20 இன அடையாளங்களைச் சேர்ந்த ‘உயர்தரமான’ மரபணுவைக் கொண்ட 367 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சாதி, மொழி, புவியியல் ரீதியாக வேறுபட்ட அடையாளங்களைச் சேர்ந்த பிரிவினரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அந்தமான் நிகோபார் தீவுகளிலிருந்து ஜராவா மற்றும் ஓங் பழங்குடிகளின் மரபணுக்களும் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவர்களின் மரபணுக்களைப் பரிசோதித்ததில் பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள்தான் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று தெரிகிறது. இந்தியாவுடன் இவர்களது மரபணுவுக்கு ஒரு தொடர்பும் இல்லை.
இந்திய மக்களின் வரலாற்று இணைப்புகளைத் தாண்டி, மரபணு ஆய்வில் இந்திய மக்களின் மூதாதையர் வழி பல சிக்கலான விவரங்களைத் தெரிவிக்கின்றன.
2009-ம் ஆண்டில் ஹார்வர்ட் மரபணு ஆய்வாளர் டேவிட் ரீச் மற்றும் அவர் குழுவினர், 'நேச்சர்' ஆய்விதழில் எழுதிய கட்டுரையில், பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் மூதாதையரை வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களின் மரபணுக்களிலும் தேடமுடியும். வடகிழக்குப் பகுதி சமூகத்தினரின் மரபணுக்களில் திபெத்திய-பர்மிய மரபணுத் தொடர்ச்சி இருப்பதோடு, ஆஸ்திரேலிய-ஆசிய மூதாதைத் தொடர்ச்சி கிழக்கு மற்றும் மத்திய இந்திய மக்களிடம் உள்ளது என்பதையும் அக்கட்டுரை தெரிவித்திருந்தது.
© ‘தி இந்து’ ஆங்கிலம்,
தமிழில் சுருக்கமாக: ஷங்கர்