உலக அளவில் பிப்ரவரி மாதம் காதலருக்கான மாதமாகக் கொண்டாடப்படுவதைப் போல மாற்றுப் பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களுடைய விடுதலை எண்ணங்களைப் பேசும் மாதமாகவே இந்த ஜூன் மாதத்தைப் பார்க்கின்றனர்.
“எதிர் பாலின ஈர்ப்பை நாங்கள் யாரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. எங்களின் பால் ஈர்ப்பை முடிவுசெய்யும் சுதந்திரம் எங்களுக்கு உண்டு. அதைத்தான் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு உறுதி செய்தது. இந்த அடிப்படை அங்கீகாரம், அடுத்து எங்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தொடக்கமாக இருக்க வேண்டும்” என்பதே மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பால்புதுமையரின் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறது.
தன்பாலின உறவை தண்டனைக்குரிய குற்றமாக வலியுறுத்திய இ.பி.கோ. 377-வது சட்டப்பிரிவை நீக்கக் கோரிய நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக, கடந்த 2019-ல் உச்ச நீதிமன்றம் “தன்பாலின உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல” என்னும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அதோடு, மாற்றுப் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்களைக் கனிவோடும் கண்ணியத்தோடும் நடத்த வேண்டும். அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் கூறியது. ஆனால், மாற்றுப் பாலினத்தவர் மற்றும் தன்பாலின உறவாளர்கள் குறித்த நேர்மறையான பிரச்சாரங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்கவில்லை.
அதன் விளைவாகவே மாற்றுப் பாலினத்தவர்களையும், தன்பாலின உறவாளர்களையும் சக மனிதர்களாகப் பார்ப்பதற்கு பதிலாக, ஒரு கண்காட்சியைப் பார்க்கும் மனோபாவத்திலேயே அவர்களை இந்தச் சமூகம் பார்ப்பதற்குப் பழகியிருக்கிறது.
’ஏக் லட்கி கோ தேகா தோ ஹைசா லகா’, ’கேர்ள் ஃபிரண்ட்’, ’ஐயாம்’, ’மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா’.. என பாலிவுட்டில் தன்பாலின உறவை மையப்படுத்திய படங்களின் பட்டியலையே போடலாம். அண்மையில் ஃபரஸ் அரிஃப் அன்சாரி இயக்கத்தில் ஷபனா ஆஸ்மி, ஸ்வரா பாஸ்கர், திவ்யா தத்தா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் ’ஷீர் கூர்மா’ திரைப்படம் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த ஃபிரேம்லைன் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. ஒருபக்கம் தன்பாலின உறவு குறித்த நேர்மறைச் சிந்தனைகளை வளர்ப்பதற்குத் திரைப்படங்கள் உதவினாலும், சம்பந்தப்பட்ட தன்பாலின உறவாளர்கள் நிஜத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அவை அமையாது.
“நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்கிறோம்” என்று கூறும் இளம் பெண்களுக்குக் குடியிருக்க வீடு கிடைப்பதில் தொடங்கி, ஒவ்வொரு அடுக்கிலும் பிரச்சினைகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
முன்னுதாரண நீதிபதி
அண்மையில் தன்பாலின உறவாளர்களான இரு பெண்கள் தங்களின் சொந்த ஊரில் பெற்றோர்களுக்கு பயந்து குடியேறாமல், ஒரு தன்னார்வ அமைப்பின் உதவியோடு சென்னையில் குடியேறுகின்றனர். அவர்களின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்துவிடுகிறது. அவர்கள் “தங்கள் மகள்களைக் காணவில்லை” என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
இது தொடர்பான வழக்கை ஆராய்ந்த நீதிபதி, வழக்கின் தன்மையை உணர்ந்து, தன்பாலின உறவாளர்களான இரு பெண்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் உளவியல் நிபுணரின் ஆலோசனைகளைப் பெறவைத்திருக்கிறார். குறிப்பிட்ட அந்தப் பெண்களின் பெற்றோர்கள் சார்பாக வாதாடும் வழக்கறிஞரையும் உளவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெற வைத்திருக்கிறார். தன்பாலின உறவைப் பற்றிய தெளிவை, மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பால் புதுமையரின் நலனுக்காகப் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் பேசித் தெரிந்து கொண்டிருக்கிறார்.
உளவியல் நிபுணரின் ஆலோசனைக்குத் தன்னையும் உட்படுத்திக் கொண்டபிறகே, “மாற்றுப் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்களின் மீது புகார்கள் வரும்போது, அவர்களின் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களைத் துன்புறுத்தக் கூடாது. மத்தியிலும் மாநிலத்திலும் இத்தகைய தன்பாலின உறவாளர்களின் பாதுகாப்புக்கு உதவும் தன்னார்வ அமைப்புகளின் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்னும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அறிவுறுத்தல்களை அளித்திருக்கிறார். அவர் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ். இந்த வழக்கில் தன்பாலின உறவு குறித்து சமூகத்தில் நிலவும் புரிதலின்மையே பிரச்சினைகளுக்குப் பெரும் காரணம் என்பது இதைப் படிக்கும் எவருக்கும் எளிமையாகப் புரியும்.
“சுயமரியாதை மாதத்தில் வெளிவந்திருக்கும் இந்த முன்னுதாரணத் தீர்ப்பு, சமூகத்தில் மாற்றுப் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள் குறித்த கவனத்தைக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் போன்ற நாட்டின் எல்லாத் துறைகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு வழங்கப்பட்டிருக்கிறது” என்கிறார் எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ. பிரிவினருக்கான `சாத்தி' தன்னார்வ அமைப்பில் பணிபுரியும் டாக்டர் எல்.ராமகிருஷ்ணன்.
மேலே குறிப்பிட்டிருக்கும் பாதிக்கப்பட்ட தன்பாலின உறவாளர்களான பெண்களின் சார்பாக வாதாடிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம் கூறும்போது, “உலகில் 29 நாடுகள் தன்பாலின உறவுத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கிவிட்டன. ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களைத் தவிர, ஏனைய பாலினங்களின் திருமணங்களுக்கும் சட்டபூர்வமான பாதுகாப்பை அளிப்பதற்கு இந்தியா முன்வருவதற்கான சரியான தருணம் இது” என்கிறார்.
முன்னோடி மாநிலமான உத்தராகண்ட்
உத்தராகண்ட் மாநிலத்தில், தன்பாலின உறவாளர்கள் சேர்ந்து வசிப்பதற்கு இருந்த தடையை அந்த மாநில அரசு நீக்கியுள்ளது. இந்தியாவின் வடக்கே கடைக்கோடியில் இருக்கும் ஒரு மாநில அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு, இந்த ஊரடங்கு காலத்தில் மிகப்பெரிய ஆசுவாசமான நம்பிக்கையை மாற்றுப் பாலினத்தவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் இணைந்து வாழ்வதில் இருக்கும் விழிப்புணர்வை வளர்ப்பதோடு, இதை இந்தியாவின் எல்லா மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும்.
வயது தடையல்ல
சமீபத்தில் 90 வயதில் இருக்கும் ஒரு முதியவர், தன்பாலின ஈர்ப்புள்ளவராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். “இது ஒன்றும் காலம் கடந்த செயலாக நான் நினைக்கவில்லை” என்றும் அவர் பேசியிருக்கிறார். இதையும் நம்பிக்கை அளிக்கும் விஷயமாகவே நாம் பார்க்க வேண்டும்.
எல்.ஜி.பி.டி.ஐ.க்யூ. பிரிவினர் என்றாலே ஏதோ தங்களின் திமிரால் பதினைந்து, இருபது வயதுகளில் இருப்பவர்கள் ஆர்வக் கோளாறில் தங்களின் பாலின அடையாளங்களையும் பாலின ஈர்ப்பையும் சொல்வதாகவே இந்த உலகம் இதுவரை நம்பியிருந்த நிலையில், 90 வயதில் இருக்கும் ஒருவர் தன்னுடைய பாலின ஈர்ப்பை வெளிப்படுத்தியிருப்பது, சமூகம் அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்னும் நிதர்சனத்தைப் புரியவைக்கிறது.
தொடர்புக்கு: ravikumar.cv@hindutamil.co.in