கலைகளின் மூலமாக கரோனா பேரிடரிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் விழிப்புணர்வுக் கருத்துகளைப் பரப்பிவருகிறது சென்னை யு.சி.சி.என். அமைப்பு.
உலகின் பாரம்பரியமான 246 நகரங்களின் பட்டியலில் ஒன்றாகச் சென்னையை 2017-ல் யுனெஸ்கோ அறிவித்தது. ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க் (யு.சி.சி.என்.) கீழ் நகரத்தின் அதிகாரபூர்வக் கிளையான சென்னை யு.சி.சி.என். சார்பாகக் கலைகளின் வழியாக கரோனாவை எதிர்க்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிராமியப் பாடகர் சின்னபொண்ணு, கானா முத்து, கானா பாடகி இசைவாணி ஆகியோர் ‘கரோனாவை ஜெயிப்போம்’ என்னும் தலைப்பில் கரோனா விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடியிருக்கின்றனர். மேலும் நடனக் கலைஞர் சிம்ரன் சிவக்குமார், வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் பயன்படும் வகையில் உடல் சோர்வைப் போக்குவதோடு, இயல்பான மூச்சுப் பயிற்சியாகவும் அமையும் எளிமையான நடன அசைவுகளைக் காணொலி வாயிலாக வெளியிட்டுள்ளார்.
அதோடு சமூக வலைதளங்களில் ‘ஸ்டாண்ட்-அப்’ நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தும் அபிஷேக் குமார் (திருமதி ஜானகி ஷோ மூலம் பிரபலமானவர்) ஆகியோரின் பங்களிப்பும் இந்தக் காணொலிகளில் உள்ளன.
இந்த முயற்சி குறித்து சென்னை யு.சி.சி.என். குழுவினரிடம் பேசியதற்கு, “கலைகள் சமூகத்தை ஊக்குவிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தச் சவாலான நேரத்தில் பாடல் மற்றும் நடனம் மூலம் மக்களுக்குத் தேவையான சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை வழங்குவதற்காக ‘கரோனாவை ஜெயிப்போம்’ என்னும் தலைப்பில் பல கலைகளின் வழியாக இந்தக் காணொலிகளை உருவாக்கினோம். இவை ஒரே நேரத்தில் மேம்பட்ட தகவல்களை அளிக்கும். அதனால், பார்வையாளர்கள் பாரம்பரியமான கலைகளை ரசிப்பதோடு கரோனா குறித்த விழிப்புணர்வையும் பெறுவார்கள்” என்று யு.சி.சி.என். அமைப்பினர் தெரிவித்தனர்.
*
சின்னபொண்ணு கிராமியப் பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=PTpL34226fE
கானா முத்து கானா இசைவாணி பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=5U7krZSwJ6g
சிம்ரன் சிவக்குமாரின் நடனப் பயிற்சியைக் காண: https://www.youtube.com/watch?v=CiW9PgmU5QQ