ஒரு பாலைவனப் பயணத்தில் அரிதாகத் தென்படும் கானல் நீரைப் போன்றவையே கனவுகள். அவற்றால் அர்த்தமுள்ள பயன் எதுவும் நமக்குக் கிடைக்காது. ஆனால், கனவில் சாத்தியமான அந்த ஏக்கம் நனவில் நிகழாதா என்கிற நப்பாசை, நம்முன் வரிசைகட்டி நிற்கும் முடிவற்ற இன்னல்களையும் சலிப்பூட்டும் கடமைகளையும் சற்றே மறக்கச் செய்யும். எது கனவு, எது நனவு என்பதைப் பிரிக்கும் மெல்லிய கோட்டில் சஞ்சரிக்கும் மனம் குழந்தைகளுக்கு இயல்பிலேயே உண்டு என்பதால்தான்,அவர்களின் வாழ்வு இன்பத்தின் உறைவிடமாக, உற்சாகத்தின் ஊற்றாக எப்போதும் உள்ளது.
காலவோட்டத்தில் வயது ஏற ஏற, வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடங்களால், கனவுக்கும் நனவுக்கும் இடையே உள்ள இடைவெளி மட்டுமல்ல; குழந்தை மனமும் நமக்கு அந்நியமாகி விடுகிறது. அந்தக் குழந்தை மனம் நமக்கு மீண்டும் கிடைத்தால் என்ன நடக்கும் என்கிற கனவே, சந்தோஷ் நாராயணனின் உருவாக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘மாஸ்க்’ குறும்படம். இந்தக் குறும்படத்தை ஒரு விதத்தில் அவருடைய சுயசரிதை என்றுகூடச் சொல்லலாம்.
அசாத்திய ஆற்றல்
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளம் தம்பதி அவர்கள். கரோனா பொது முடக்கம் காரணமாகக் கணவருக்கு வீட்டிலேயே அலுவலக வேலை. மனைவிக்கு எப்போதும்போல வீட்டிலேயே வீட்டு வேலை. தூக்கம், விழிப்பு, காலைக்கடன், காபி, காலை உணவு, அலுவலக வேலை, மதிய உணவு, மேலாளரால் திணிக்கப்படும் கூடுதல் பணி அழுத்தம், வேலையிழப்பு பயம், மீண்டும் வேலை, மாலை காபி, மீண்டும் வேலை, இரவு உணவு, தூக்கம், மீண்டும் விழிப்பு எனத் தொடரும் முடிவற்ற வட்டத்தில் சிக்கித் தவிக்கும் அந்தத் தம்பதிக்கு ஓர் அசாத்திய ஆற்றல் கொண்ட மாஸ்க் கிடைக்கிறது.
எது சந்தோஷம்?
சில மணிநேரங்கள் மட்டுமே வேலை செய்யும் அந்த மாஸ்க்கினால், அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் குழந்தைத்தனம் மீண்டும் உயிர்ப்புற்றுப் பீறிட்டு வெளிவருகிறது. வாழ்க்கையில் தங்களைச் சுற்றியிருக்கும், தாங்கள் கவனிக்க மறந்த அத்தனை சந்தோஷத்தையும் மீண்டும் கவனிக்கத் தொடங்குகிறார்கள். வீட்டின் கதவைத் திறந்து ஓடுவதில் தொடங்கி, சிறிய, சிறிய விஷயங்கள்கூட அவர்களுக்கு ஆச்சரியமூட்டுகின்றன, மகிழ்ச்சியளிக்கின்றன. பல ஆயிரம் ரூபாய்க்குச் செருப்புகளையும் ஷூக்களையும் வாங்கி மகிழும் இன்றைய காலகட்டத்தில், அளவற்ற சந்தோஷம் அவர்களுக்கு மண்ணில் வெறுங்காலில் நடப்பதிலும் குதிப்பதிலும் கிடைக்கிறது. தேவையைத் துரத்தி ஓடும் இன்றைய அர்த்தமற்ற வாழ்க்கை முறையை எள்ளலுக்கு உள்ளாக்கியிருக்கும் காட்சி இது.
முற்றுப்பெறும் கனவு
மாலை வருகிறது, மாஸ்க் தன்னுடைய செயல்திறனை இழக்கிறது. வாழ்க்கையின் எதார்த்தத்துக்கு மீண்டும் இறுக்கத்துடன் செல்ல எத்தனிக்கையில், அவர்கள் மீது விழும் மழைத்துளிகள், அவர்கள் சற்று முன்னர் அனுபவித்த குழந்தை மனத்துக்கே உரித்தான மகிழ்ச்சியை நினைவூட்டுகின்றன. அதிகாலைக் கனவைக் கலைக்கும் அலாரத்தைப் போல, அந்த நினைவூட்டலை மேலாளரின் தொலைபேசி அழைப்பு முற்றுப்பெறச் செய்வதாகக் குறும்படம் நிறைவடைகிறது. கணவருக்கு மேலாளரின் அழைப்பு என்றால், மனைவிக்குக் கணவரின் இருப்பே அந்த நினைவூட்டலை நிறுத்திவிடும் என்பதையும் சொல்லியிருக்கலாம்.
புதிய பாதை
கரோனா பொது முடக்கத்தினால் வீடடங்கி வாழும் ஒரு தம்பதியின் ஒரு நாள் வாழ்வின் மூலமாக அன்றாட வாழ்வின் சலிப்புகளையும், நிறைவேறாத ஏக்கங்களையும் சில நிமிடங்களில் நம்முள் சதோஷ் நாராயணன் கடத்தியிருக்கும் விதம் அலாதியானது. அந்தச் சலிப்புகளும் ஏக்கங்களும் நமக்கும் பொதுவானது என்பது இந்தக் குறும்படத்தை நம்முடைய மனத்துக்கு மிகவும் நெருக்கமான ஓர் அனுபவமாக மாற்றிவிடுகிறது.
கன்னியாகுமரி அருகே, ஒரு குக்கிராமத்தில் இருந்துகொண்டு, மாநகரங்களில் எளிதில் கிடைக்கும் உயரிய தொழில்நுட்ப வசதியின்றி, தேர்ந்த நடிகர்களின் துணையில்லாமல், தன்னுடைய குடும்பத்தினரையே நடிகர்களாக்கி, தன்னுடைய கைபேசியிலே முழுப் படத்தையும் நேர்த்தியாக எடுத்து நம்மை சந்தோஷ் பெரிதும் வியப்பில் ஆழ்த்துகிறார்.
சந்தோஷின் இந்த முயற்சி, திறமைமிகுந்த இன்றைய தலைமுறையினருக்கு அவர் காட்டியிருக்கும் புதிய பாதையும்கூட.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
மாஸ்க் குறும்படம் பார்ப்பதற்கான இணைப்பு