இரவு நேரம். மாலை பள்ளி விட்டுச் சென்ற மாணவர்கள் மீண்டும் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். அன்றைய நாளில் பள்ளியில் ஆசிரியர்கள் கற்பித்த பாடங்கள் குறித்து சிறிது நேரம் உரையாடல். பிறகு மாணவர்கள் ஒவ்வொருவராகத் தனித் தனியாக அமர்ந்து பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.
'என்ன ஸ்பெஷல் கிளாஸா? ஸ்கூல்லயே ட்யூஷனா?' என்று யோசித்தால், அதுதான் இல்லை!
அரசுப் பள்ளி என்றாலே மோசமாக இருக்கும் என்ற சிந்தனைதான் நம்மில் பலரிடமும் உள்ளது. ஆனால் அரசுப் பள்ளி குறித்து மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு உதவியாக சில மாணவர்களும் தன்னார்வப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பகல் நேரங்களில் அலுவலகம், கல்லூரி என்றிருக்கும் இந்த இளைஞர்கள் மாலை நேரங்களில் தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த 6 ஆண்டுகளாக இலவசமாகப் பாடம் நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வன்னிவேலம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியானது கடந்த 2009-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், புதூர், முத்துலிங்காபுரம், சின்னாரெட்டியபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். 26 மாணவர்கள், 19 மாணவிகள் உட்பட 45 பேர் தற்போது 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுக்குத் தயாராகிவருகின்றனர்.
"10-ம் வகுப்புல தங்களோட ஸ்கூல் ரிசல்ட் பர்சன்டேஜ் பாதிக்கப்பட்டுறக் கூடாதுன்னு சொல்லி, சில பிரைவேட் ஸ்கூல் மேனேஜ்மென்ட்காரங்க சுமாராப் படிக்கிற 9-ம் வகுப்பு பசங்களை ஏதாவது காரணங்களைச் சொல்லி டி.சி. கொடுத்து அனுப்பிச்சிடுறாங்க. இதனால என்ன செய்யிறதுன்னு புரியாத பசங்களுக்கு கவர்மென்ட் ஸ்கூல்ஸ்தான் அடைக்கலம் தருது. அதுல இந்த ஸ்கூலும் ஒன்னு.
படிப்பில சுமாரான பசங்களையும் பாஸ் பண்ண வைக்கணும்ங்கிற நோக்கத்தோட இந்த ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாம் நிறைய முயற்சிகள் எடுத்துட்டு வர்றாங்க. அவங்களுக்கு ஒரு ஆதரவா எங்களால முடிஞ்ச சின்ன உதவி இது!" என்கிறார் இங்கு தன்னார்வமாக மாணவர்களுக்குப் பள்ளி நேரம் போகப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் சென்றாயப்பெருமாள்.
இவரைப் போல வேறு சில இளைஞர்களும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர். தினந்தோறும் இரவு 7 முதல் 10 மணி வரையும், காலை 5 முதல் 7 மணி வரையும் மாணவர்களுக்கு அந்த இளைஞர்கள் பாடம் நடத்துகின்றனர். இதற்காக மாணவர்களோடு தங்கும் அந்த இளைஞர்கள் இரவு முழுவதும் பள்ளியிலேயே தங்கிவிடுகின்றனர்.
பகுதிநேரமாக எம்.எல் படித்துக் கொண்டு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று வரும் சென்றாரப்பெருமாள் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். அவருடன் அய்யணன், சமையன் ஆகிய 2 இளைஞர்கள் இந்த ஆண்டு தன்னார்வப் பணிகளில் புதிதாக இணைந்துள்ளனர்.
"நடைமுறை சிக்கல்கள் காரணமா, மாணவிகள்கிட்ட இந்த முயற்சியை கொண்டு போக முடியலை. நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் நம்மால முடிஞ்சதைச் செய்யணும்னு இந்தப் பசங்களுக்கு நாங்க சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்துறோம்.
அவங்களை பாஸ் பண்ண வைக்கிறதுல எங்களோட பங்கும் கொஞ்சம் இருக்குன்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாதிரி தனியா ஸ்கூல் டைமுக்கு அப்புறம் பாடம் நடத்துறதுல சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யுது. ஆனா அதையும் தாண்டி ரிசல்ட் வர்றப்ப நம்மகிட்ட படிச்ச பசங்க நல்ல மார்க்ஸ் ஸ்கோர் பண்றப்ப எல்லா பிரச்சனையும் மறந்துடும். எங்களோட இந்த முயற்சிக்கு அனுமதி கொடுத்த ஸ்கூலுக்கும், எங்களை நம்பி பசங்களை அனுப்புற பெத்தவங்களுக்கும் எங்களோட நன்றி!" என்று சொல்லிவிட்டு, தன்னிடம் கணக்குப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்த மாணவர்களின் சந்தேகங்களைப் பூர்த்தி செய்ய ஆரம்பிக்கிறார் சென்றாயப்பெருமாள்.