உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களில் இரண்டாமிடத்தில் இருக்கும் புத்தகம் ஐகிரோ ஓடாவின் ‘ஒன் பீஸ்' என்ற மங்கா காமிக்ஸ்தான். முதலிடத்தில் இருப்பது சீன அகராதி!
அதென்ன மங்கா? வேறொன்றுமில்லை. ‘காமிக்ஸ்' என்பதன் ஜப்பானிய வடிவம்தான் மங்கா. ஆண்கள் தொடர்பான மங்கா ‘ஷோனென் மங்கா' என்றும், பெண்கள் தொடர்பான மங்கா 'ஷோஜோ மங்கா' என்றும் பிரித்துச் சொல்லப்படுகின்றன.
1997 முதல் இன்றுவரையில் மொத்தம் 77 தொகுக்கப்பட்ட புத்தகங்களாக வெளிவந்துள்ள ‘ஷோனென் மங்கா'வான இதை வெளியிட்டது ஷூயிஷா. உலகின் பல நாடுகளில் வெளியாகும் இதன் விற்பனை எண்ணிக்கை 38 கோடிப் பிரதிகள்.
புதையலைத் தேடி
இந்த மங்காவின் கதை என்ன? பிரபல கப்பல் கொள்ளையர் தலைவன் ரோஜரை தூக்கிலிடும்போது, தனது கொள்ளைப் பொருட்களை எல்லாம் ஓரிடத்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனை யார் கைப்பற்றுகிறார்களோ, அவர்களே கடற்கொள்ளையர்களின் முடிசூடா மன்னராக கருதப்படுவார்கள் என்றும் அவன் சொல்கிறான். அதனைப் பலரும் தேட ஆரம்பிக்கின்றனர். அவர்களில் கம் கம் என்ற பழத்தைத் தின்றதால் விசேஷ சக்திகளைப் பெற்ற மங்கி லஃப்பி என்ற நமது கதை நாயகனும் ஒருவன்.
இப்படியாகப் புதையல் வேட்டை தொடங்கிய 22 வருடங்கள் கழித்துத்தான் நமது நாயகனின் அறிமுகம் கதையில் நடக்கிறது. சிறுவயதில் எதேச்சையாக கம் கம் பழத்தை (ரப்பர் பழம்) தின்றதால், உடல் அமைப்புகளில் விசேஷ மாற்றம் கொண்ட மங்கி லஃப்பி, ரப்பரைப் போல தன்னுடைய உடலை வளைக்கக்கூடிய, மாற்றக்கூடிய திறனைக் கொண்டவன். இவன் தன்னுடைய குழுவில் ஒவ்வொரு புதிய உறுப்பினரையும் சேர்த்து, ஒரு பெரிய அணியாகப் புதையலைத் தேடிச் செல்வதுதான் கதை.
இதில் ஒவ்வொரு புதிய உறுப்பினரையும் சேர்ப்பதும், பின்னர் பயணத்தில் புதிய இடங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் சாகசங்களையும் உள்ளடக்கியதே இந்தத் தொடரின் கதை அமைப்பு.
இது வெறும் கதையாக மட்டுமல்லாமல், போதை மருத்துக்கெதிரான குரலாகவும் இனப்படுகொலைகளைக் கண்டிக்கும் செயல்பாடாகவும், நமக்கிடையே நிலவும் வேறுபாடுகளை மற்றவர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்ற அரசியல் பார்வையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதாசிரியர் பல புராதானக் கதைகள், இதிகாசங்களிலிருந்து பல ‘இன்ஸ்பிரேஷன்'களைப் பெற்றிருப்பது நன்றாகத் தெரிகிறது.
புதிய மாற்றம்
இத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், ஜப்பானிய மங்கா காமிக்ஸ் உலகமே ஒரு மாற்றத்தில் இருந்தது. பாரம்பரிய வழக்கமான ஜப்பானிய மங்கா ஸ்டைலிலிருந்து (பெரிய, பெரிய கண்களைக் கொண்ட கதை மாந்தர்கள், முழுக்க, முழுக்க ஆக் ஷன் மூலம் கதை சொல்லும் பாணி (உதாரணம், டிராகன் பால்). மேற்கத்திய பாணி நவீன ஸ்டைலை கையாண்ட பல கதைகள் வெற்றி பெற ஆரம்பித்திருந்தன (மிகச் சிறிய கண்கள், நிறைய எழுத்துகளைக் கொண்ட காமிக்ஸ் தொடர்கள். உதாரணம், செய்லர் மூன்).
ஐகிரோ ஓடா பாரம்பரிய ஜப்பானிய முறையைக் கையாண்டு, தொடர்ச்சியாக அதே ஸ்டைலில் வரைந்துவந்தார். அதன் பின்னர் இத்தொடர் பெற்ற மகத்தான வெற்றி, இப்போது பலரையும் திரும்பவும் அதே ‘டிராகன் பால்’ காமிக்ஸ் ஸ்டைல் ஓவியங்களுக்கு மாற்றி இருக்கிறது.
தலைப்பு: ஒன் பீஸ் (மங்கா)
கதை: ஐகிரோ ஓடா
ஓவியம்: ஐகிரோ ஓடா
வெளியீடு: ஜப்பானிய மொழியில் ஷூயிஷா (1997), ஆங்கிலத்தில் விஸ் மீடியா (2015, ஜூன், மேம்படுத்தப்பட்ட பதிப்பு)
பக்கங்கள்: 600
அமைப்பு: தொடரின் முதல் மூன்று பாகங்களின் தொகுப்பு : கதைக் கரு: ஒன் பீஸ் என்ற புதையலைத் தேடிச் செல்லும் மன்க்கி லஃப்பி என்ற விசேஷ சக்தி கொண்ட நாயகனின் சாகசங்கள்
தீர்ப்பு : பரிந்துரைக்கப்படுகிறது, (5/6)