இந்தக் கரோனா காலத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உடல்தகுதியும் முக்கியம். அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்த் என்ற கடலில் முக்குளிப்பவர், அண்மையில் ஆழ்கடலுக்குள் டைவ் அடித்தும் கடற்பரப்பின் மீது நின்றும் உடற்பயிற்சி செய்து காட்டியிருக்கிறார். கடலுக்குள் அரவிந்த் செய்யும் உடற்பயிற்சிக் காட்சிகள் இணையத்தில் ஹிட்டாகி வருகின்றன.
எரிமலை பீட்சா
கவுதமாலாவில் பிப்ரவரியிலிருந்து பகாயா எரிமலை சீறி வருகிறது. எரிமலையைக் காண தினமும் கூட்டம் மொய்க்கிறது. இதைத் தனது தொழிலுக்குப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார் பீட்சா தயாரிப்பாளரான டேவிட் கார்சியா. எரிமலை வழிந்தோடி அனலாக இருக்கும் கற்களில் பீட்சாவைச் சுடச்சுட சமைத்து கொடுக்கிறார் இந்த இளைஞர். சுவையாகத் தயாராகும் இந்த பீட்சாவுக்கு ‘பகாயா பீட்சா’ என்று திருநாமமும் சூட்டிவிட்டார். பிழைக்கத் தெரிந்த மனிதர்தான்!
காஸ்ட்லி பை
பிரான்ஸைச் சேர்ந்த ஆடம்பர பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, விமான வடிவில் ஒரு ஹேண்ட்பேக்கை அறிமுகம் செய்து அசத்தியிருக்கிறது. இந்தப் பை அச்சு அசலாக விமானம் போலவே இருக்கிறது. இந்தப் பையின் விலை ரொம்ப அதிகமில்லை, ரூ. 28.50 லட்சம்தான்.