காதலில் இரண்டு வகை உண்டு. காதலித்தவரையே திருமணம் செய்துகொண்டு, காலம் முழுக்க காதல் ரசத்தோடு வாழ்வோர் ஒரு ரகம். காதலித்தவரைக் கைப்பிடிக்க முடியாமல், காதலுக்கு பிரேக்-அப் விடுபவர்கள் இன்னொரு ரகம். பிரேக்-அப் செய்துகொண்டவர்களில் கடந்த கால காதலை சட்டென மறப்போரும் உண்டு. பழைய நினைவுகள் ஏதோ ஒரு வகையில் மனதைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்போரும் உண்டு. அந்த வகையில் தன் பழைய காதல் நினைவை உடைத்தெறிவதற்காக ஓர் இளம் பெண் கடல் கடந்து 10 ஆயிரம் கி.மீ. பயணம் செய்திருக்கும் கதை தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் ‘லவ்-லாக்’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது, காதல் பூட்டு. மேலை நாடுகளில் இந்த ‘லவ்-லாக்’ மிக பிரபலம். காதலர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படக் கூடாது, யாரும் பிரிக்கக் கூடாது என்பதற்காக ‘லவ்-லாக்’ செய்வது வழக்கம். நம்மூரில்கூட காதல் பித்தர்கள் சுவர்கள், பாறைகளில் பெயர்களைக் கிறுக்கியும் செதுக்கியும் வைப்பார்கள் அல்லவா? அதுபோன்றதுதான் இந்த ‘லவ்-லாக்’.
மேலை நாடுகளில் உயரமான மலைப்பிரதேசங்கள், பாலங்கள், டவர்கள் போன்ற இடங்களில் ஒரு பூட்டை வாங்கி பூட்டிவிட்டு வந்துவிடுவார்கள். அந்தப் பூட்டில் காதலர்கள் தங்களுடைய பெயரை அடையாளத்துக்காகவும் பொறிப்பது உண்டு. இந்தப் பூட்டை பூட்டிய பிறகு சாவியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். இதன் மூலம் தங்கள் காதலை யாராலும் உடைக்க முடியாது என்பது நம்பிக்கை.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த கஸ்ஸி யேங் (Kassie Yeung) என்ற 23 வயது இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். இவர்களுடைய காதல் அண்மையில் பிரேக்-அப்பில் முடிந்தது. அந்தக் காதலருடன் இருந்த நினைவுகளையெல்லாம் அழித்த அந்தப் பெண்ணுக்கு, இரு ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஒரு டவரில் ‘லவ்-லாக்’ செய்தது பின்னர்தான் நினைவுக்கு வந்தது. எப்படியும் அந்த ‘லவ்-லாக்’கை உடைக்க வேண்டும் என்று முடிவு செய்தார் கஸ்ஸி யேங்.
இந்த கரோனா காலத்தில் சற்றும் யோசிக்காமல், கலிபோர்னியாவில் இருந்து தென்கொரியாவுக்கு ஃபிளைட் பிடித்தார் கஸ்ஸி யேங். சியோல் வந்தததும், பூட்டை உடைப்பதற்கான உபகரணங்களை வாங்கிக்கொண்டு, அந்த டவரை நோக்கிச் சென்றார். அந்த டவரில் பல வண்ணங்களில் ஏராளமான காதல் பூட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. அதைப் பார்த்து தலை சுற்றினாலும், அந்த இளம்பெண் மனம் தளரவில்லை. ஏராளமான பூட்டுகளுக்கு மத்தியில் தன்னுடைய ‘லவ்-லாக்’கை சரியாகக் கண்டுபிடித்தார். கையோடு கொண்டுவந்திருந்த உபகரணத்தைக் கொண்டு அதைத் துண்டித்து தூக்கியெறிந்தார். அந்த மகிழ்ச்சியில் அந்த கஸ்ஸி யேங் துள்ளிக் குதித்து ஊர் திரும்பினார்.
அமெரிக்காவிலிருந்து சியோல் வந்தது முதல் ‘லவ்-லாக்’கை உடைத்தது வரை எல்லாவற்றையும் வீடியோவாகப் பதிவு செய்திருந்தார் கஸ்ஸி யேங். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட, உலக அளவில் அது வைரல் ஆனது. உலகத்துக்கும் இந்த ‘பிரேக்-அப்’ கதை தெரியவந்தது!