இளமை புதுமை

பாப்கார்ன்: மீண்டும் நீல டிக்

ஜெய்

குறும்பதிவு சேவையான ட்விட்டரின் அடையாளங்களில் ஒன்றாக அதன் நீல டிக் வசதி முன்பு இருந்தது. பிரபலங்கள், புகழ்பெற்ற ஆளுமைகள் ஆகியோரின் ட்விட்டர் பக்கம் அவர்களின் அதிகாரபூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நீல டிக் வசதி அமைந்திருந்தது. இடையே இந்தச் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இந்த வசதியை ட்விட்டர் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப முறையையும் ட்விட்டர் அறிவித்துள்ளது. இதன் மூலம் பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் குறைந்தால் சரி.

விலகியிரு; வீட்டிலிரு

கரோனோ வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு இந்திய அளவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. முதல் அலை பாதிப்பு பெரும்பாலும் முதியவர்களைத்தாம் தாக்கியது. ஆனால், இந்த இரண்டாம் அலையில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் பாதிப்பின் சராசரி மற்ற பிரிவினரைக் காட்டிலும் 1 சதவீதக்கும் கூடுதலாக உள்ளது. உத்தராகண்ட்டில் பாதிக்கப்பட்டவர்களில் 64.6 சதவீதம் இளைஞர்கள்தாம் என அம்மாநில அரசின் அறிக்கை கூறுகிறது. இளைஞர்கள் வெளியில் அதிகம் சுற்றுவதால்தான் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதும் அதிகரிக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறியுள்ளது. மேலும், வைரஸை மற்றவர்களுக்குக் கடத்தும் கடத்தியாகவும் இளைஞர்கள் உள்ளார்களாம்!

ஓயாத சர்ச்சை

இரண்டு வாரங்களுக்கு முன் தொலைகாட்சித் தொகுப்பாளினி அர்ச்சனா யுடியூபில் ‘பாத்ரூம் டூர்’ என்கிற பெயரில் தன் வீட்டுக் குளியலறை குறித்த வீடியோ ஒன்றைப் பதிவேற்றினார். இது வைரலானது. ஆனாலும், பெரும் விவாதத்துக்கும் உள்ளானது. விமர்சித்தவர்களின் அலைவரிசைக்கு எதிராக அர்ச்சனா காப்பி ரைட்ஸ் ஸ்ட்ரைக் கொடுத்தார். இதனால் விமர்சித்த யூடியூபர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டது. இது பிரபலங்களின் யூடியூப் அலைவரிசைக்கும் தனிநபர் யூடியூப் அலைவரிசைக்கும் இடையேயான கலகத்தில் போய் முடிந்தது. தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் இந்தச் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

வாசிக்க ஒரு செயலி

தமிழகத்தில் முதன்முறையாகத் தொடர் கதைகளை வாசிப்பதற்காக ‘Bynge' என்ற பெயரில் செயலி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயலியில் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை இலவசமாக வாசிக்கலாம். தமிழத்தில் சிறந்த எழுத்தாளர்களின் புனைவு -
புனைவல்லாத படைப்புகளையும் சிறிய அத்தியாயங்களாக இந்தச் செயலியில் படிக்கலாம்.

SCROLL FOR NEXT