‘ஆவோ
ஜி... ஆவோ... சாரஸ் க்ரேன் தேக்கோ...'
‘ஜி... இதர் தேக்கோ... சர்பென்ட் ஈகிள்...'
காக்கிச் சட்டை யூனிஃபார்ம். இந்தி, ஆங்கிலம்... இன்னும் சிலர் பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் கூட உரையாடுகிறார்கள். பறவையியலாளர்கள் பலருக்கே தெரியாத அரிய பறவை இனங்களின் வழக்குப் பெயர்கள்,
அறிவியல் பெயர்களைக் கூட தெரிந்து வைத்திருக்கிறார்கள். பைனாக்குலர்கள் இல்லாமலேயே இந்தப் பகுதியில் இந்தப் பறவை இருக்கும் என்பதை அவ்வளவு துல்லியமாகச் சொல்கிறார்கள்.
ஆனால் இவர்கள் யாரும் பறவையியல் துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர்கள் இல்லை. பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தியவர்கள்.
இவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள்!
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள ‘கேவ்லாதேவ் பறவையியல் சரணாலயத்தில்' இவர்களைப் பார்க்கலாம். சுற்றுலாவாசிகளுக்குத்தான் இவர்கள் சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள். ஆனால் சூழலியல் ஆர்வலர்களுக்கு இவர்கள் ‘பேர்ஃபூட் நேச்சுரலிஸ்ட்ஸ்'! அதாவது, பாமர இயற்கைப் பாதுகாவலர்கள்.
"இங்க மொத்தம் 123 சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் இருக்காங்க. இவர்களில் சரிபாதிப் பேர் இளைஞர்கள்தான்!" என்று அறிமுகம் தருகிறார், ஜித்தேந்திரா. இவரும் ஒரு சைக்கிள் ரிக்ஷாகாரர்தான்.
பலருக்கும் ராஜஸ்தான் என்றால் பாலைவனமும் ஒட்டகமும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அங்கு 29 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கிறது கேவ்லாதேவ் பறவைகள் சரணாலயம். அழிந்து வரும் நிலையில் உள்ள வலசைப் பறவைகளான சரசக் கொக்குகள், உலகில் மத்திய இந்தியாவில் மட்டுமே காணப்படும் பச்சை சில்லை உள்ளிட்ட பல அரிய வகைப் பறவைகளை இங்கு காண முடியும்.
பலருக்கும் ராஜஸ்தான் என்றால் பாலைவனமும் ஒட்டகமும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அங்கு 29 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கிறது கேவ்லாதேவ் பறவைகள் சரணாலயம். அழிந்து வரும் நிலையில் உள்ள வலசைப் பறவைகளான சரசக் கொக்குகள், உலகில் மத்திய இந்தியாவில் மட்டுமே காணப்படும் பச்சை சில்லை உள்ளிட்ட பல அரிய வகைப் பறவைகளை இங்கு காண முடியும்.
ஒரு காலத்தில் சைபீரியக் கொக்குகளும் இங்கு வந்து சென்றிருக்கின்றன. இந்தக் காரணங்களால் 1985ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு இந்த சரணாலயத்தை ‘உலக பாரம்பரியச் சின்னமாக' அறிவித்தது. கடந்த மாதம் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை ‘உலக பாரம்பரியச் சின்ன வாரம்' நடைபெற்றது. அதையொட்டி, இந்தச் சரணாலயத்தில் பணியாற்றும் சைக்கிள் ரிக்ஷாக்காரர்களைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
"இந்தப் பார்க்குல சைக்கிள் ரிக்ஷா ஓட்டணும்னா, ஸ்டேட் கவர்மென்ட்டுக்கிட்ட லைசென்ஸ் வாங்கணும். லைசென்ஸ் மட்டும்தான் அது கொடுக்கும். சம்பளம் எல்லாம் தராது. உங்கள மாதிரி டூரிஸ்ட்டுங்க வந்தாத்தான் எங்களுக்குப் பொழப்பு. பார்க்கை ரவுண்ட் அடிக்க ஒரு மணி நேரத்துக்கு நூறு ரூபா. ரெண்டு பேருக்கு மேல ரிக்ஷாவுல ஒரே சமயத்துல ஏத்தமாட்டோம்" என்கிறார் ஜிதேந்திரா.
அந்த லைசென்ஸும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது. இவர்களுக்கு அரசு, ஒரு தேர்வு நடத்தும். அதில் தேர்ச்சி பெற வேண்டும். அந்தத் தேர்வுக்குத் தயாராக இவர்களுக்கு மூன்று மாதங்கள் இலவசப் பயிற்சி தரப்படுகிறது.
"பறவைகள பத்தின புக்ஸ், ஃபீல்ட் கைட்ஸ், சயின்டிஸ்ட்டுகளோட டிஸ்கசன், அப்புறம் இந்த பார்க்குல ரொம்ப வருஷமா ரிக்ஷா ஓட்டிக்கிட்டிருக்கிற சீனியர்கள்னு பல விதங்கள்ல எங்களுக்கான அறிவை நாங்க மேம்படுத்திக்கிறோம். அப்புறம், போகப் போக எக்ஸ்பீரியன்ஸ் ஆகிடும்ல. அப்ப, ஒரு பறவை இந்த பார்க்குல எங்க இருக்கும், அதனோட பேர் என்னங்கிறதுனு பல தகவல்களை நாங்க கரெக்ட்டா சொல்லிடுவோம்" என்கிறார் இன்னொரு ரிக்ஷாக்காரரான குர்மீத் சிங்.
காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த ரிக்ஷாக்கள் இயங்கும். இவர்களுக்கென்று தனியாக விடுமுறை நாட்கள் எல்லாம் கிடையாது. எப்போது தேவையோ அப்போது அவர்கள் விடுப்பு எடுத்துக்கொள்கிறார்கள்.
"வருஷம் முழுக்க ஓட்டினாலும், அக்டோபர் மாசம் முதல் மார்ச் மாசம் வரைதான் எங்களுக்கு ‘பிஸினஸ்' மாசம். அந்த டைம்லதான் பறவைகளும் இங்கு அதிகமா வரும். டூரிஸ்ட்டுகளும் அதிகமா வருவாங்க" என்றார் குர்மீத்.
புகை, இரைச்சல் என சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தால்தான் இன்று வரை இந்தச் சரணாலயத்தில் சைக்கிள் ரிக்ஷாக்கள் தாக்குப் பிடிக்கின்றன. ஆனால் அதை ஒழித்துக் கட்டும் விதமாக பேட்டரியில் இயங்கும் கார்களை மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தி வருகிறது ராஜஸ்தான் அரசு.
"பேட்டரி காரில் சென்றால், அணில்கள், சிறு பறவைகள் உள்ளிட்டவை கார் சக்கரங்களில் சிக்கி உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும், காரின் இரைச்சலும் பறவைகளை தொந்தரவு செய்யும். தவிர, சைக்கிள் ரிக்ஷாவில் பயணிப்பது போல, சுற்றுலாவாசிகள் ஒவ்வொரு இடமாக நின்று பறவைகளைப் பார்த்து ரசிக்க இயலாமல் போகும்" என்கிறார் பறவையியலாளர் ஒருவர்.
"அப்புறம் என்ன சார்... ஒரு ‘ரைட்' போலாமா" என்றவரிடம் தலையசைத்து ரிக்ஷாவில் பயணித்தபோது அந்த ரிக்ஷாவுக்கு இறகுகள் முளைத்துப் பறப்பதைப் போல உணர முடிந்தது.
படங்கள்: ந.வினோத் குமார்