இலங்கை கிரிக்கெட் அணி அப்போது ஒரு கத்துக்குட்டி. உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் எதிரணிக்குப் புள்ளிகளை வழங்குவதற்காகவே அந்த அணி சேர்க்கப்பட்டது போ லிருக்கும். 1980-களிலும் 1990-களின் தொடக்கத்திலும் அந்த அணியை அப்படித்தான் பகடி செய்வார்கள்.
1992-93-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய விதிமுறை அறிமுகமானது. முதல் 15 ஓவர்களில் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் அந்த விதி. அந்த விதியைப் பயன்படுத்தி அப்போது தொடக்க ஆட்டக்காரர்கள் வெளுத்துவாங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தான் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரராக அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் இலங்கை அணியின் பிம்பத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார் கேப்டன் அர்ஜூன ரணதுங்க. அணியில் புதுப்புது உத்திகளை நடைமுறைப் படுத்திக்கொண்டிருந்தார். 1994இல் பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்தது. ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தொடக்க ஆட்டக்காரர் ரோஷன் மகாநாமாவுக்குக் காயம். அவருக்குப் பதில் யாரைத் தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது? ரணதுங்கவுக்கு ஒரே குழப்பம்.
திடீர் முடிவு
சட்டென ஒரு முடிவெடுத்து ஜெயசூர்யாவை அழைத்தார். “நீதான் தொடக்க ஆட்டக்காரராக இறங்கப் போற” – ரணதுங்க பேசியதைக் கேட்டு ஜெயசூர்யாவுக்கு ஆச்சரியம். அவர் ஒரு சுழற் பந்துவீச்சாளர். ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்பவர். பேட்டிங் திறமை இருந்தாலும், அவர் ஆல்ரவுண்டர் கிடையாது. ஆனால், ரனதுங்காவின் சொல்லைக் கேட்டு ஜெயசூர்யா பதற்றமடையவில்லை. கேப்டனின் கட்டளையை ஏற்றுக்கொண்டார்.
“ஓபனிங் இறங்கியவுடன் எதைப் பத்தியும் கவலைப்படாதே. முதல் பந்திலிருந்தே அடிச்சு நொறுக்கு. முதல் பந்திலேயே அவுட் ஆனாலும் கவலைப்படாதே” - இதைத்தான் ஜெயசூர்யாவிடம் சில நிமிட ஆலோசனையாகச் சொன்னார் ரணதுங்கா. கேப்டனின் கட்டளையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அப்படியே நிறைவேற்றினார் ஜெயசூர்யா. முதல் 15 ஓவர்களுக்கான விதியைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளாசத் தொடங்கினார் ஜெயசூர்யா. முதல் மூன்று போட்டிகளிலும் அவருடைய கணக்கில் மூன்று அரைசதங்கள் சேர்ந்தன. இனி ஜெயசூர்யாதான் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் என முடிவெடுத்தார் ரணதுங்க.
இன்னொரு முயற்சி
இன்னொருபுறம் உலகக் கோப்பைத் தொடர் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த உலகக் கோப்பையில் கௌரமான வெற்றியைப் பெற என்று ரணதுங்க விரும்பினார். அதற்கு அணியில் மாற்றம் வேண்டுமென்று நினைத்தார். தொடக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யாவுக்கு இணையாக மகாநாமா, குருசிங்கே போன்றவர்கள் மாறிமாறி வந்தார்கள். 1995 இறுதியில், உலகக் கோப்பைத் தொடருக்கு பேட்டிங் ஆர்டரை மாற்றி அணியைத் தயார்செய்ய ரணதுங்க திட்டமிட்டார். இதற்கு பயிற்சியாளர் டேவ் வாட்மோரும் பக்கபலமாக இருந்தார்.
குருசிங்கேவையும் மகாநாமாவையும் மிடில் ஆர்டருக்கு மாற்றிவிட்டு, ஐந்தாம் இடத்தில் பேட் செய்துகொண்டிருந்த விக்கெட் கீப்பர் ரொமேஷ் கலுவிதரணவை ஜெயசூர்யாவுடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்கவைத்தார். இவருக்கும் ஜெயசூர்யாவுக்குச் சொன்ன அதே உபதேசம்தான். இருவரும் சேர்ந்து முதல் 15 ஓவர்களில் எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கத் தொடங்கினார்கள். இந்த உத்திக்குப் பலன் கிடைத்தது. வெற்றி திசைமாறியது. 1996 உலகக் கோப்பையிலும் இதே கூட்டணிதான் களமிறங்கியது. ஆனாலும், இவர்களை மட்டுமே இலங்கை அணி முழுமையாக நம்பியிருக்கவில்லை.
சாம்பியன் அணி
உலகக் கோப்பையின் அரை இறுதி, இறுதி ஆகிய இரண்டு போட்டிகளிலும் ஜெயசூர்யாவும் கலுவிதரணாவும் விரைவில் ஆட்டமிழந்தார்கள். ஆனாலும் இலங்கை அசரவில்லை. அடுத்தடுத்து வரும் போர்வீரர்களைப் போல் பின்னால் களம்கண்ட வீரர்கள் அணியைத் தாங்கிபிடித்தார்கள். “ஜெயசூர்யா, கலுவிதரணவின் முயற்சி ஒரு நாள் பலிக்காமல் போகும் என்பது எங்களுக்குத் தெரியும். அதற்கு நாங்கள் தயாராகவே இருந்தோம்” என்று அர்ஜுன ரணதுங்க சொன்னார். அது உண்மையானது.
எல்லாத் திட்டங்களையும் கச்சிதமாகச் செயல்படுத்தி இலங்கை அணி கிரிக்கெட் சிகரத்தின் உச்சிக்குச் சென்றது. ஆம், 1996 உலகக் கோப்பையை இலங்கை அணி முதன்முறையாக உச்சிமுகர்ந்தது. கத்துக்குட்டி அணி என்கிற கறையைத் துடைத்தெறிந்தது. அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளையும் ரன்களையும் குவித்த ஜெயசூர்யாதான் தொடர் நாயகன் விருது பெற்றார். ஜெயசூர்யாவைத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கும் கேப்டன் ரணதுங்கவின் முடிவிலிருந்து இலங்கை அணியின் பாய்ச்சல் தொடங்கியது. அது உலகக் கோப்பைத் தொடரைத் தாண்டியும் பல ஆண்டுகளுக்கு நீடித்தது.
அந்த உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை ஓரணியாகச் செயல்பட்டது. தெளிவான வியூகமும் கைவசம் இருந்தது. அந்த வியூகம் தவறினால் என்ன செய்வது என்ற மாற்றுத் திட்டமும் வைத்திருந்தார்கள். பக்குவமான தலைமை, பன்முகத் திறமை கொண்ட ஆட்டக்காரர்கள், அணியின் முழு ஒத்துழைப்பு எல்லாம் சேர்ந்து இலங்கையை சாம்பியன் அணியாக மாற்றின!
(1996 உலகக் கோப்பையை இலங்கை வென்று 25 ஆண்டுகள் நிறைவடைந்தன)
(நிமிடங்கள் நகரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in