கரோனா தொற்று இரண்டாம் அலை நாட்டையே பாடாய்ப்படுத்திவருகிறது. இந்த இக்கட்டான வேளையில் கரோனாவை வெல்ல முயலும் தனி மனிதர்கள், வித்தியாசமான சேவைகள், மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வீடியோக்கள், படங்கள், தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகிவருகின்றன.
கரோனா இரண்டாம் அலையில் வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறைதான் பொதுமக்களை கலங்கச் செய்திருக்கிறது. எனவே, அரசுகளைத் தாண்டி தங்களால் முடிந்த உதவிகளைத் தனிமனிதர்கள் சிலரும் செய்துவருகிறார்கள். அந்த வகையில் மும்பையில் ஆக்சிஜன் சேவையை வழங்குவதற்காகத் தன்னுடைய புது காரையே விற்ற ஷானவாஸ் ஷேக் பற்றிய தகவல்கள் நாடு முழுவதும் வைரலாயின.
மூன்று சக்கர ஆம்புலன்ஸ்
இதேபோல மத்தியப்பிரதேசத்தில் ஜாவேத் கான் என்கிற ஆட்டோ ஓட்டுநர் செய்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய ஆட்டோவில் ஒரு நோயாளி சுவாசிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டரையும் தேவையான கருவிகளையும் வாங்கிப் பொருத்தி, ஆட்டோவை மினி ஆம்புலன்ஸ் போலவே மாற்றிவிட்டார். ஆட்டோவில் கரோனா நோயாளிகளை இலவசமாக அழைத்தும் செல்கிறார்.
தன்னுடைய மனைவியின் நகைகளை அடமானம் வைத்து, இந்த உன்னத சேவையை அவர் செய்துவருகிறார். தன்னுடைய ஆட்டோவில் பொருத்திய ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் இதுவரை பத்துப் பேரின் உயிரை ஜாவேத் கான் காப்பாற்றியிருக்கிறார். இதற்காகவே வீட்டில் ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் உதவி தேவைப்படுவோருக்காக ஓடோடி வருகிறார்.
ஆக்சிஜன் வங்கி
பிஹாரில் கரோனா நோயாளிகளைக் காப்பாற்றும் ‘ஆக்சிஜன் மனிதன்’ எனப் பெயரெடுத்திருக்கிறார் பாட்னாவைச் சேர்ந்த கவுரவ் ராய். தான் பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்கிற நோக்கத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,100 பேரின் உயிரை இதுவரை காப்பாற்றியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் சென்றவர் இவர். கடந்த ஆண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை கிடைக்காமல் அல்லாடியவர். அவருடைய மனைவி அலைந்து திரிந்து ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வந்த பிறகே, அவரால் பிழைக்க முடிந்தது.
தான்பட்ட அந்த அவஸ்தை மற்றவர்களுக்கும் நேரக் கூடாது என்பதற்காகத் சொந்தப் பணத்தில் வீட்டிலேயே, ‘ஆக்சிஜன் வங்கி’ ஒன்றை கவுரவ் ராய் தொடங்கியுள்ளார். நாள்தோறும் பத்து கிலோ எடை கொண்ட 200 ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கையாளும் இவர், ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு இலவசமாகத் தன்னுடைய காரில் கொண்டுபோய் வழங்கிவருகிறார். இவரைப் பற்றிக் கேள்விபட்டு பிஹார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அழைப்புகள் வருகின்றன. ஆனால், எங்கிருந்து அழைத்தாலும் சிரமம் பார்க்காமல் ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகித்துவருகிறார் இந்த மனிதநேயர். இவருடைய சேவை உலக அளவில் ஹிட் ஆகியுள்ளது.
நேற்று நாய்களுக்கு, இன்று மனிதருக்கு
கரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை எரிக்கக்கூட நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை டெல்லியில் ஏற்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் சடலங்களால் சுடுகாடுகள் நிரம்பி வழிவதால், டெல்லி துவாரகாவில் நாய்களை அடக்கம் செய்வதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுடுகாட்டை, கரோனா நோயாளிகளை அடக்கம் செய்வதற்கான இடமாகத் தற்காலிகமாக மாற்றிவிட்டார்கள். சடலங்களை எரிக்க வசதியாகத் தகன மேடையையும் வரிசையாக அமைத்திருக்கிறார்கள். கரோனா கொடூரம் நாய்கள் நிம்மதியாகத் தூங்க அமைக்கப்பட்ட இடத்தையும் மனிதர்களுக்கானதாக மாற்றி விட்டது.
கரோனா திருமணம்
கரோனா வைரஸ் முதல் அலையில் ஏராளமானோர் திருமணங்களை ஒத்திவைத்தனர். ஆனால், இரண்டாம் அலையில் அப்படியெல்லாம் செய்ய பலருக்கும் மனம் வருவதில்லை. கரோனா தொற்று ஏற்பட்டால்கூட ரிஸ்க் எடுத்தாவது திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள். அந்த வகையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகனைக் குறித்த நேரத்தில் திருமணம் செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த அபிராமி.
ஆலப்புழையைச் சேர்ந்த சரத் என்பவருடன் அவருக்கு ஏப். 25 அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக மணமகன் சரத்தும் அவருடைய தாயும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். என்ன ஆனாலும், குறித்த தேதியில் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் மணமகள் வீட்டில் உறுதியாக இருந்தார்கள். இதையடுத்து ஆலப்புழை மாவட்ட ஆட்சியர், சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி
பெறப்பட்டது. கரோனா வார்டிலேயே திருமணம் நடத்துவது என்றும் முடிவானது. இந்தத் திருமணத்தில் பங்கேற்க மணமகளும் அவருடைய பெற்றோரும் முழு பாதுகாப்பு உடை அணிந்து கரோனா வார்டுக்கு வர, அங்கேயே சரத் - அபிராமி திருமணம் நடைபெற்றது.
இதேபோல் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலிலும் ஒரு சம்பவம் நடந்தேறியது. ஆனால், மண்டபத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமக்கள் மட்டுமல்லாமல், திருமணத்தில் பங்கேற்ற உறவினர்களும் முழு பாதுகாப்பு உடை அணிந்து திருமணத்தில் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு சேவை
கடந்த ஆண்டு கரோனா தொற்றுப்பரவல் தொடங்கியபோது, கேரள போலீஸார் கரோனாவைத் தடுக்க கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆடிய நடனம் இணையத்தில் வைரலானது. அதேபோல் இந்த இரண்டாம் அலையிலும் கேரள போலீஸார் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்றவற்றை வலியுறுத்தி நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இணையத்தில் ஹிட் அடித்த ‘என்ஜாய் எஞ்சாமி..’ என்கிற தமிழ்ப் பாடலுக்குத்தான் அவர்கள் நடனம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்கள். புது நடனமும் இணையத்தில் செம வைரல்.