முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியை நமக்குத் தெரியும். அதுபோல் ‘நவீன பாரிவேந்த’ரான இளைஞர் ஒருவர் ஆக்ஸிஜன் விநியோகிப்பதற்காகத் தான் புதிதாக வாங்கிய காரையே விற்றுள்ளார். மும்பையைச் சேர்ந்த ஷானவாஸ் ஷேக் என்பவர்தான் அந்த இளைஞர். கடந்த ஆண்டு கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட இவரது நண்பரின் கர்ப்பிணி சகோதரி, ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழந்தார். அந்த பாதிப்பில் ஆக்ஸிஜன் கிடைக்காத ஏழைகளுக்கு உதவ முடிவெடுத்தார் ஷானவாஸ். அதற்குப் போதிய நிதி இல்லாததால் தன் புதிய காரை விற்றுள்ளார். இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.
தனக்குத் தானே அஞ்சலி!
சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு இளைஞர்கள் சிலர் தயாராக இருக்கிறார்கள். சாகச செல்பி, அதிரடிப் பதிவுகள் மூலம் இதைச் சாத்தியப்படுத்த முயல்கிறார்கள். சில வேளைகளில் இது அபாயகரமானதாகவும் ஆகிவிடும். அதுபோல் சங்கரன்கோவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்குத் தானே அஞ்சலி போஸ்ட் வடிவமைத்து, அதைத் தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இது அவரது நண்பர்கள், உறவினர்கள் வட்டாரத்தையும் தாண்டிப் பரபரப்பானது.
நிஜ ‘ரித்திகா சிங்’குகள்
போலந்தில் கீல்ஸ் நகரில் நடைபெற்ற இளையோர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா எட்டுத் தங்கம், மூன்று வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. 48 கிலோ பிரிவில் கீதிகா, 51 கிலோ பிரிவில் பேபிரோஜிசனா சானு, 57 கிலோ பிரிவில் பூனம், 60 கிலோ பிரிவில் வின்கா, 69 கிலோ பிரிவில் அருந்ததி சவுத்ரி, 75 கிலோ பிரிவில் சனமாச்சா சானு, 81 கிலோ பிரிவில் ஆல்பியா பதான் ஆகிய சிங்கப் பெண்கள் தங்கம் வென்றனர். இந்திய வீரர்கள் சோங்தம் 49 கிலோ பிரிவிலும் அங்கித் நார்வால் 64 கிலோ பிரிவிலும் விஷால் குப்தா 91 கிலோ பிரிவிலும் வெண்கலம் வென்றனர். 56 கிலோ பிரிவில் சச்சின் தங்கம் வென்றார். இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் 20 பேர் பங்கேற்றனர்.