இளமை புதுமை

உறவுகள்: ஆமாவா... இல்லையா... கேட்டுவிடு!

செய்திப்பிரிவு

வணக்கம் அம்மா. நான் 22 வயதுப் பெண். கல்லூரி முடித்து ஒரு வருடம் ஆகிறது. நான் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது, ஒருவரைக் காதலித்தேன். அவரும் என்னைக் காதலித்தார்.

அவர் ‘எனது திருமணம் உன்னோடுதான்' என்று நாங்கள் இருவரும் சந்திக்கும்போதெல்லாம் சொல்வார். அதை நானும் முழு மனதாக நம்பினேன். இதனால் சில நேரங்களில் நாங்கள் கொஞ்சம் நெருங்கிப் பழகினோம். ஆனால், தவறாக எதுவும் நடக்கவில்லை.

அவருடன் பழகிய 6 மாதத்திலேயே அவரின் உண்மையான முகம் தெரியவந்தது. அவர் என்னிடம் பழகுவதுபோலப் பிற பெண்களிடமும் பழகியிருப்பதாகத் தெரியவந்தது. பின்பு ஒரு நாள் தொலைபேசி மூலமாக அவரைக் கடுமையாகத் திட்டிவிட்டேன். அதற்குப் பிறகு அவர் இப்போது வரை என்னிடம் எந்தத் தொடர்பிலும் இல்லை.

இந்நிலையில், சமீபத்தில் எனது திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. நான் எனது கடந்த காலத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனினும், அந்த விஷயத்தைப் பற்றி எனது வருங்காலக் கணவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால், எனது சகோதரியோ அப்படி செய்ய வேண்டாம் என்று தடுக்கிறாள். அவரிடம் சொல்ல முடியாவிட்டால், எனக்குக் குற்றவுணர்வு ஏற்படுமே என்று அஞ்சுகிறேன். மிகவும் குழப்பமாக உள்ளது. ப்ளீஸ் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டுங்கள்.

நான் பார்த்த நல்ல விஷயம், காதல் முறிந்துபோனவுடன் அழுதுகொண்டு நிற்காமல், பெரிதும் அலட்டிக்கொள்ளாதது! இது ‘ப்ராக்டிக்கலான' அணுகுமுறை. சில நேரங்களில் நெருங்கிப் பழகியிருந்தாலும், வரம்பு மீறவில்லை என்பது உங்கள் எச்சரிக்கை உணர்வைக் காட்டுகிறது.

ஆனால், உங்களது கேள்வி, ‘கணவரிடம் என் காதல் விஷயத்தைச் சொல்ல வேண்டாமா?' சிக்கலானது! சொன்னால் என்ன நடக்கலாம். சொல்லாவிட்டால் என்ன ஆகலாம் என்று புட்டுப்புட்டு வைத்துவிடுகிறேன். என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இன்றைய நாட்டு நடப்புப்படி (இளைய தலைமுறையின்) உங்கள் காதல் சப்பை ‘மேட்டர்'. ஏனெனில் ‘பெரிய விஷயம்' நடக்கவில்லை! மேலும் கடந்த காலக் காதல் சரித்திரம் இல்லாதவர்கள் வெகு குறைவு. சொல்லாவிட்டால் மனதில் குற்றவுணர்ச்சி வாட்டும். வேறு யார் மூலமாவது இந்தத் தகவல் அவரைப் போய்ச் சேர்ந்தால், ‘இது ஒண்ணும் பெரிய விஷயமாக எனக்குத் தோணலை. அதான் சொல்லலை!' என்று சொல்லித் தப்பிக்கலாம். சிக்கல் வருமா வராதா என்று இன்று நான் சொல்ல முடியாது!

தனது காதல் கதையை/களை அவர் சொன்னால் நீங்களும் உங்கள் கதையைப் பெரிதுபடுத்தாமல் சுருக்கமாகச் சொல்லலாம். ஆனால் மணமானபின் இதை வைத்து அவர் ‘டார்ச்சர்' கொடுக்கலாம் (அவருக்கு ஒரு கடந்த காலம் இல்லையென்றால்). காதலரிடம் தடயங்கள் எதையும் விட்டுவைக்கவில்லை என்று நம்புகிறேன். காதலிக்கையில் ஏற்படும் போதைக்கு அடிமையாகிப் பலரும் தன்னை இழக்கிறார்கள். போதை இறங்கிய பின் வருந்துவதால் நடந்ததை மாற்ற முடிவதில்லை. பாதிப்பு பெண்களுக்குத்தான். எச்சரிக்கை தேவை. இதை மீண்டும், மீண்டும் பலரிடமும் வலியுறுத்திவருகிறேன்.

வணக்கம் அம்மா. என் வயது 25. கல்லூரி ஒன்றில் நூலகராகப் பணியாற்றிவருகிறேன். நான் வீட்டுக்கு இரண்டாவது மகன். என் அண்ணனுக்குத் திருமணமாகிவிட்டது.

இந்தக் கடிதத்தை நான் ரொம்ப நாட்களாக இந்தப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துவந்தேன். ஆனால் ஏதோ ஒரு கூச்சம் என்னை தடுத்துக்கொண்டேயிருந்தது.

அம்மா, இது வரை நான் இரண்டு பெண்களைக் காதலித்திருக்கிறேன். வேலையில் சேர்ந்த பிறகுதான். அதில் ஒருவர், சாதி, மதம் போன்ற காரணங்களைக் காட்டி என்னை விட்டு விலகிவிட்டார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இன்னொரு பெண்ணை நான் விரும்ப ஆரம்பித்தேன்.

அவர் என்னிடம் நன்றாகப் பழகிவருகிறார். அவரிடத்தில் எனது விருப்பத்தை எப்படித் தெரிவிப்பது என எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. ஒரு பெண் எப்படிப்பட்ட ஆணை விரும்புவாள் என்று நான் ரொம்ப நாட்களாக யோசித்து யோசித்துக் குழம்பிப் போயிருக்கிறேன்.

நான் ஏதாவது கிறுக்குத்தனமாகச் செய்யப் போய் அது, எங்கள் இருவருக்கிடையில் பிரிவை ஏற்படுத்திவிடுமோ என்று அடிக்கடி நினைவு ஏற்படுகிறது. நான் மிகவும் தாழ்வு மனப்பான்மை உடையவனாக உணர்கிறேன். எனக்கு ஒரு ஆலோசனை தரவும்.

தயங்கித் தயங்கிக் கடைசியில் இந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டதற்கு ஒரு ‘ஓ' போட வேண்டும். அதுபோல் காதலையும் சொல்லிவிட வேண்டும். ‘இதயம்' படத்தின் நாயகன் உங்களைப் போல் ஒர் ‘இன்ட்ரோவர்ட்'. தன்னுள் அரும்பிய காதலைக் கடைசிவரை சொல்ல முடியாமல், நல்ல வாழ்க்கையைக் கோட்டைவிட்டார்!

காதலிப்பது தவறில்லை. எதிர்மறை பதிலை எதிர்நோக்க தைரியம் இல்லாததால் கேட்பதையே ஒத்திப்போடுவது தவறு. தாமதித்தால் வேறு யாராவது அங்கே இடம் பிடித்துவிடுவார்கள்! சொல்ல வந்த விஷயத்தை (ஒத்திகை பார்த்த பின்) கண்ணியமாகச் சொல்லுங்கள். சொல்லத் தயக்கமாக இருந்தால், கடிதமாக எழுதுங்கள். இல்லையென்றால் நெருங்கிய நண்பரைத் தூது அனுப்புங்கள்.

அந்தப் பெண் இப்போது காதலை நிராகரித்தாலும், நீங்கள் அவர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, காதலை ஒதுக்கி வைத்து, தொடர்ந்து நட்புடன் பழகினால் அவருடைய நட்பு காதலாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு பெண் எப்படிப்பட்ட ஆணை விரும்புவாள் என்பது விரயமான ஆராய்ச்சி!

இருவருக்கிடையே ஒரு ‘கெமிஸ்ட்ரி' நிகழ்ந்துவிட்டால் காதல் வரும். மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டு பிறகு ஏமாற்றம் அடைவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். ‘ஆமாம்' அல்லது ‘இல்லை' என்று இரண்டில் ஒன்றை விரைவில் தெரிந்துவிட வேண்டும். இல்லையென்றால் என்ன ஆகும் எனும் தவிப்பிலேயே நொந்துபோய்விடுவீர்கள். முதலில் அந்தக் கேள்வியைக் கேட்டு விடுங்கள்.

உங்களுக்குத் தன்ன‌ம்பிக்கை குறைவாக இருப்பதை நானும் புரிந்துகொண்டேன். சிறப்பான பயிற்சி நிறுவனம் ஒன்றில் ஆளுமை மேன்மைக்கான பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது ஒரு உளவியல் ஆலோசகரைச் சந்தியுங்கள். தன்ன‌ம்பிக்கை சரியானால், யாரிடமும், எதையும் பேசத் தயங்க மாட்டீர்கள். அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு என் வாழ்த்துகள்!

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

SCROLL FOR NEXT