ஐரோப்பிய-கரீபிய இசைக் குழுவான போனி எம், 1978-ல் வெளியிட்ட ‘ரஸ்புடின்’ பாடல் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். இந்தப் பாடலைப் பாடி ஆடியவர், பாபி ஃபெர்ரல். இந்தப் பாடல் இப்போது திடீரென இணையத்தில் வைரலாகியிருக்கிறது. திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஜானகி - நவீன் ரசாக் ஆகியோர் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அதைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். இந்த நடனம் மதரீதியாக விமர்சனம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் பலர் இந்தப் பாடலுக்கு நடனமாடி சமூக வலைத்தளங்களில் பதிவேற்று கிறார்கள். மதவாத விமர்சனத்துக்கு பதில் சொல்வதுபோல், எல்லாமே வைரல் ஆகின்றன.
போலி அறுவடை
உலகின் விலை உயர்ந்த காய்கறியை (ஒரு கிலோ ரூபாய் ஒரு லட்சம்) விளைவித்த பிஹார் இளைஞர் அம்ரீஷ் சிங் பற்றிய இரண்டு வாரங்களுக்கு முன் செய்யப்பட்ட ட்வீட் வைரல் ஆனது. இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரி ஒருவர் இதைப் பகிர்ந்திருந்தார். ஹாப் ஷுட்ஸ் (hop shoots) என்கிற ஜெர்மானிய தாவரத்தைத்தான் அவர் வளர்த்திருப்பதாகச் சொல்லப்பட்டது. வட இந்திய ஊடகங்கள் அந்தக் கிராமத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்று ஏமாற்றம் அடைந்தன. அந்த மாதிரி செடியைத் தான் கேள்விப்பட்டதே இல்லை எனச் சொல்லியிருக்கிறார் அந்த இளைஞர். ஓர் அதிகாரியின் ட்வீட் எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டது.
ஓயாத மோகம்
சென்னை நேப்பியர் பாலத்திலிருந்து செல்ஃபி எடுத்த இளைஞர் தவறி ஆற்றில் விழுந்துவிட்டார். தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் அவரைப் போராடி மீட்டனர். எத்தனை பேர் பலியானாலும், இந்த செல்ஃபி மோகம் எப்போதுதான் தீருமோ தெரியவில்லை.