‘ஹு இஸ் தி சேர்மன் ஆஃப் நாலெட்ஜ் கமிஷன் ஆஃப் இந்தியா?'
2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை இந்தியாவில் இந்தக் கேள்வி இடம்பெறாத 'க்விஸ்' நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லலாம். அத்தகைய புகழை 'தேசிய அறிவுசார் ஆணையத்துக்கு' ஏற்படுத்தித் தந்த பெருமையை உடையவர் சாம் பிட்ரோடா.
சாம் பிட்ரோடா என்று சொன்னால் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் 'மஞ்சள் நிறக் கூண்டுகளில் சிவப்பு நிறத்தில் எஸ்.டி.டி./பி.சி.ஓ. என்று எழுதியிருக்கும் டெலிபோன் பூத்கள்' என்று சொன்னால் நம்மில் பலருக்கும் மனதில் ஒரு 'ஃப்ளாஷ்பேக்' ஓடும். அந்த பூத்கள் இந்தியாவில் வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் சாம் பிட்ரோடா!
80களில் அன்றைய மத்திய அரசு நகரங்களை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருந்தபோது, கிராமங்களை இணைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாடெங்கும் குறைந்த கட்டணத்தில் தொலைபேசிச் சேவையைத் தொடங்கியவர் இவர்.
எலக்ட்ரானிக் டைரிகளுக்கான தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர், சுமார் 100க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றவர் எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் இவர்.
'எனக்கு, என் பணி எனது கடமை. அதுவே எனது ஆன்மிகமும்' என்று சொல்லும் இவரின் வாழ்க்கையிலிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு. அந்த அனுபவங்களை 'ட்ரீமிங் பிக்' என்ற தலைப்பில் அருமையான புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் புத்தகம் பென்குயின் பதிப்பதகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று பல இளைஞர்களுக்குத் திறமை இருக்கிறது. வளமான அறிவு இருக்கிறது. ஆனால் எது தனக்கான துறை என்று அறிவதில்தான் பலர் இடர்பாடுகளைச் சந்திக்கிறார்கள். இங்கு சாம் பிட்ரோடா சொல்வதை நினைவில் கொள்ள வேண்டும்.
"'டொமைன் எக்ஸ்பர்டீஸ்!' ஆம் உங்களுக்கான துறை எது என்று அறிந்து அதில் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் உங்களை நீங்கள் மேன்மேலும் வளர்த்திக் கொள்ள வேண்டும். அந்த 'டொமைன் எக்ஸ்பர்டீஸ்' இல்லையெனில், நீங்கள் செய்யும் வேலையின் மீது உங்களுக்குப் பிடிப்பு ஏற்படுவது கடினம். பிடிப்பு ஏற்பட்டால்தான் உங்களது வேலையை நீங்கள் சந்தோஷமாகச் செய்ய முடியும். நான் எனது வேலையையும், எனது சந்தோஷத்தையும் தனித்தனியாகப் பார்ப்பதில்லை. வேலையே சந்தோஷம்!" இது இவர் தரும் முதல் பாடம்.
இன்னொரு இடத்தில் இப்படிச் சொல்கிறார்: "நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய சவால் தொழில்நுட்பத்தை உருவாக்குவதல்ல. ஆனால் அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் மனிதர்களை நிர்வகிப்பதுதான். அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொண்டால்தான், அவர்களின் வேலையில் நாம் எதிர்பார்க்கும் விளைவும் திருப்திகரமாக இருக்கும். நாம் எல்லோரும் தவறு செய்யும் இயல்பு உடையவர்கள்தான். அதன் மூலமாகத்தான் நாம் சரியானவற்றைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் அதற்கு முதலில் அந்தத் தவறை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்".
இப்படிப் புத்தகம் முழுக்க தன் அனுபவங்களின் வழியே மேலாண்மைப் பாடங்களைச் சொல்லிச் செல்கிறார் சாம்.
நாட்டில் தொலைபேசிச் சேவையை அறிமுகப்படுத்தியது இவருக்கான அடையாளம் என்றால், இந்த நாட்டுக்கே ஒரு அடையாளத்தை 'தேசிய அறிவுசார் ஆணையத்தின்' மூலம் இவர் உருவாக்கித் தந்தது மகத்தான சாதனை என்றே சொல்லலாம். ஆம்! உலகிலேயே இந்தியாவில்தான் முதன்முதலில் 'தேசிய அறிவுசார் ஆணையம்' ஆரம்பிக்கப்பட்டது.
அறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, அறிவை மேம்படுத்தும் கருவிகளை அறிமுகப்படுத்துவது, அறிவை உருவாக்குவது, அறிவைப் பயன்படுத்துவது மற்றும் அறிவுசார் சேவைகளை வழங்குவது ஆகிய ஐந்து சிந்தனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது தேசிய அறிவுசார் ஆணையம்.
இந்த ஆணையம் கல்வித் துறையில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரிது. "இந்தியாவில் நாம் 19ம் நூற்றாண்டு மனநிலையோடும், 20ம் நூற்றாண்டின் நடைமுறைகளோடும், 21ம் நூற்றாண்டுத் தேவைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நல்ல விஷயங்களைச் செய்ய இளைஞர்களை உற்சாகப்படுத்தவும், மேம்படுத்தவும் 'மல்டி டாஸ்க்கிங்' திறன் தேவை" என்கிறார் இவர்.
அதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப் போவதில்லை!