இளமை புதுமை

வயலின் தந்த‌ இசை ‘மயில்’!

வா.ரவிக்குமார்

உலக அளவில் தன்னுடைய மேம்பட்ட வயலின் இசையால் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஆளுமை எல்.சுப்பிரமணியம். அவர் தன்னுடைய மனைவி (கவிதா கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம்), பிள்ளைகள் (நாராயணன் சுப்பிரமணியம், அம்பி சுப்பிரமணியம், பிந்து சுப்பிரமணியம்), மருமகன் சஞ்சீ்வ் நாயக் (இவரும் வயலினிஸ்ட்தான்) , பேத்தி மஹதி ஆகியோருடன் இணைந்து, `தி இந்து’ நடத்திய நவம்பர் ஃபெஸ்ட்டில் இசையின் பன்முகத்தை வெளிப்படுத்தும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை மியூசிக் அகாடமியில் கொடுத்தார்.

இளமை ஊஞ்சலாடிய மேடை

பெரிய கலைஞர்கள்தான் மேடையில் முதலில் தோன்றுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர்களை ஆச்சரியமூட்டும் விதத்தில் திரை விலகியதும், அம்பி சுப்பிரமணியமும் பிந்து சுப்பிரமணியமும் மேடையில் தோன்றி, தங்களின் இசையால் வசப்படுத்த ஆரம்பித்தனர். அதிகப்படியான மழையால் தத்தளித்துக்கொண்டிருப்பதாலோ என்னவோ, `டேஸ் இன் தி சன்’ என்னும் ஆங்கிலப் பாடலைப் பாடினார் பிந்து சுப்பிரமணியம். பாடகர், பாடலாசிரியர், இசைக் கோப்பாளர் ஆகிய பல முகங்கள் பிந்து சுப்பிரமணியத்திடமிருந்து வெளிப்பட்டன. உச்ச ஸ்தாயியில் பாடும்போது வேட்டைப் புலியின் பாய்ச்சலும், வசியம் செய்யும் மென்மையும் பிந்துவின் குரலில் ஒருங்கே வெளிப்பட்டன. அடுத்து, அம்பியின் வில்லிலிருந்து `மேக் இட் கவுண்ட்’, ஜாஸ் இசையில் `யுவர் ஆர்ட் இஸ் அஸ் பிளாக் அஸ் நைட்’ போன்ற இசை வடிவங்கள் ரசிகர்களை மெய்மறக்க வைத்தன. எல்.சுப்பிரமணியம் எழுதிய ‘லவ் அண்ட் பீஸ்’ பாடலை நாராயணும் பிந்துவும் ரசனையோடு பாடினர்.

தோகை விரித்த இசை

80-களின் தொடக்கத்தில் எல்.சுப்பிரமணியம் உருவாக்கிய ‘ஸ்பானிஷ் வே’, உலகம் முழுவதும் இசை அலைகளைப் பரப்பியது. இதுதான் அன்றைக்கும் எல்.சுப்பிரமணியத்தின் வயலினிலிருந்து பிரவாகமாகக் கிளம்பியது. நிகழ்ச்சியில் அவருடைய இசைக்கு நிகராக நகைச்சுவையும் போட்டி போட்டது.

“அடுத்து நான் வாசிக்கப்போவது இண்டியன் எக்ஸ்பிரஸ். என்னடா `தி இந்து’ நடத்தும் விழாவில் இண்டியன் எக்ஸ்பிரஸ்ஸா என யாரும் நினைக்க வேண்டாம். எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தைப் போல் இந்த இசை அமைப்பு இருக்கும் என்பதால் இந்தப் பெயர் வைத்துள்ளேன். நியூஸ் பேப்பருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்ற அறிவிப்போடு இண்டியன் எக்ஸ்பிரஸை வாசித்தார்.

தடதடக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த அனுபவம் கிடைத்து. அடுத்து, எல்.எஸ். குடும்பத்தினர் அனைவரும் `மகரிஸ ரிநிஸ ரி’ எனும் ஸ்வரங்களை பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்க, காபி ராகத்தின் மூலை முடுக்கெல்லாம் சஞ்சரித்தது எல்.சுப்பிரமணியத்தின் வயலின். இந்த இசைக் கோப்புக்கு எல்.சுப்பிரமணியம் வைத்திருந்த பெயர் Peacock. பெயருக்கு ஏற்றாற்போல் இசை மயில் ஒன்று மேடையில் தோகை விரித்தது.

SCROLL FOR NEXT