இளமை புதுமை

புத்தரான டிரம்ப்!

ஜெய்

இணையத்தில் பல விநோதமான விஷயங்கள் வைரலாகும். இன்னதென்று சொல்ல முடியாதபடி எது வேண்டுமானாலும் ட்ரெண்டிங்கில் இருக்கும். அப்படி வைரலாகியிருக்கும் விஷயம்தான், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் போன்ற புத்தர் சிலை!

அமைதிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் புத்தருக்கும் எப்போது உணர்ச்சிகரமாகவும் குழப்ப மனநிலையிலும் இருக்கும் டிரம்புக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். உண்மையில் இது ஒரு நகைமுரண். நகைச்சுவையை அடிப்படையாக வைத்துத்தான் இந்தச் சிலையை வடிவமைத்திருக்கிறார்கள். டிரம்ப் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் சிலைகள் இணையத்தில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. ஆனால், புத்தரைப் போல் வெள்ளையாடை அணிந்து பத்மாசனத்தில் கண்களை மூடி, கைகளை தாமரைப் பூவைப் போல் விரித்து வைத்திருக்கும் நிலையில் டிரம்ப் அமர்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். இதுதான் அந்தச் சிற்பத்தின் தோற்றம்.

சீனத் தயாரிப்பு

சீனாவில் பிரபலமான ‘டாபாவ்’ (Taobao) இணைய விற்பனைத் தளத்தில் இந்தச் சிலை அறிமுகமாகியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தளத்தில் இரண்டு வகையான சிலைகள் விற்பனைக்கு உள்ளன. 16 செ.மீ. உயரமுள்ள சிலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 ஆயிரத்துக்கும், 46 செ.மீ. உயரமுள்ள சிலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 44 ஆயிரத்துக்கும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இந்தச் சிலைகளை விரும்பி வாங்கிச் சென்ற ஒருவர், “சும்மா ஒரு விளையாட்டுக்காக இதை வாங்குகிறேன். என் மேஜை மீது இதை வைத்து அலங்கரிப்பேன். டிரம்ப் ஒரு காலகட்டத்தின், அதிகத் தன்முனைப்பின் பிரதிநிதி. அந்தக் காலகட்டம் கடந்து போய்விட்டது. இந்தச் சிலை அதை எனக்கு ஞாபகப்படுத்தும்” என்கிறார்.

இதற்கு முன்பே அமெரிக்க இணைய விற்பனை தளமான எட்ஸி (Etsy), 'சீட்டோ ஆரெஞ்சு டிரம்ப்' என்ற பெயரில் சிரிக்கும் புத்தர் சிலையை (குபரேர் சிலை) கிறிஸ்துமஸ் பரிசுப் பொருளாக விற்பனைக்கு வைத்திருந்தது.

SCROLL FOR NEXT