காதலர்கள் தங்களுக்குள் வலியைப் பொறுத்துக்கொண்டு கைகளில் பச்சைக்குத்திக் கொண்டதெல்லாம் இன்று பழங்கதையாகிவிட்டது. இது டாட்டூ காலம். இளசுகளின் விருப்ப ஃபேஷன்களில் வலிக்க வலிக்க டாட்டூ குத்திக்கொள்வதும் ஒன்றாகிவிட்டது. உண்மையில், டாட்டூ மேல்நாட்டுப் பச்சைகுத்தும் முறை. நம்மூர் பச்சைக்குத்துதலின் மேம்பட்ட வடிவம்தான் டாட்டூ!
டாட்டூவின் அழகிய வடிவமும் கண்கவர் வண்ணமும் எளிதில் ஈர்ப்பதால் இளைஞர்கள் டாட்டூ மேல் காதல்கொள்கிறார்கள். நம் நாட்டில் ஒரு தசாப்தமாக ஃபேஷன் உலகில் டாட்டூ முக்கிய இடத்தைப் பிடித்து வந்திருக்கிறது. கொறிப்பதற்கு டாட்டூ பற்றி கொஞ்சம் துணுக்குகள்:
# உலகில் அதிகளவில் அமெரிக்கர்களே டாட்டூ குத்திக்கொள்கிறார்கள். அதிலும் அமெரிக்கப் பெண்களே அதிகம். மற்றவர்களைக் கவர்வதற்காக டாட்டூவை அதிகம் நாடுவதாகக் கூறப்படுகிறது.
# டாட்டூ குத்திக்கொள்பவர்களின் விருப்பமாக ஹார்ட்டினே இருக்கிறது. ஹார்ட்டின் இல்லாத டாட்டூக்களுக்கு வெளிநாடுகளில் மதிப்பில்லை.
# டாட்டூவின் கண்கவர் நிறத்துக்காகப் பல ரசாயனங்கள் கலக்கப்பட்டாலும், சில வேளைகளில் அதில் சிறுநீர் கூடக் கலக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
# உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டாலும் முதுகு, மார்பு, மணிக்கட்டு, மூட்டு ஆகிய உடற்பகுதிகளே டாட்டூ குத்துவோரின் விருப்பத் தேர்வாக உள்ளது.
# டாட்டூ குத்திக்கொள்வது இந்த நூற்றாண்டில் தொடங்கிய பழக்கமல்ல. சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஸ்காண்டிநேவியா போன்ற ஐரோப்பியப் பகுதிகளில் டாட்டூ குத்தும் கருவிகள் தொல்லியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
# கடந்த 3 நூற்றாண்டுகளாக ஆங்கிலேய, ரஷ்ய அரசக் குடும்பங்களில் டாட்டூ குத்திக்கொள்ளுதல் பிரபலமாக இருந்து வந்திருக்கிறது. அப்போது டாட்டூ குத்திக்கொள்ளவது மிகவும் செலவு பிடிக்கும் அலங்காரமாகவும் இருந்தது.
# அமெரிக்காவில் டாட்டூ குத்திக்கொள்வதற்காக ஆண்டுக்கு சராசரியாக 165 கோடி டாலர்கள் செலவழிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் அதிரவைக்கின்றன.