இளமை புதுமை

அதென்ன டூல்கிட்?

மிது கார்த்தி

‘டூல்கிட்’ என்கிற இந்தச் சொல் அண்மையில் படாதபாடுபட்டுவிட்டுவிட்டது. இணைய வாசிகள் பெரும்பாலானோர் இந்தச் சொல்லைப் பற்றி இணையத்தில் தேடித் தேடிப் படித்தார்கள். ஆமாம், ‘டூல்கிட்’ என்றால் என்ன?

யாருக்குப் பரிச்சயம்?

பொதுவாகக் கணினிப் பயன்பாட்டில் உள்ள ‘டூல்கிட்’ என்கிற சொல்லுக்கும் இப்போது சர்ச்சையாகிருக்கும் ‘டூல்கிட்’டுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அது வேறு; இது வேறு. ஒரு செயலை செய்து முடிப்பதற்காக ஏற்படுத்தப்படும் வழிகாட்டு நெறிமுறைகளின் ஒட்டுமொத்த தொகுப்பே ‘டூல்கிட்’. இந்த ‘டூல்கிட்’ என்பது காகித வடிவில் ஆவணமாகவும் இருக்கலாம் அல்லது டிஜிட்டல் கோப்பாகவும் இருக்கலாம்.

கார்ப்பரேட் அல்லது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு இந்தச் சொல் பரிச்சயமாகி இருக்கக்கூடும். செய்து முடிக்க வேண்டிய ஒரு செயலுக்கான தகவல்கள், தொடர்புகள், வழிமுறைகள் என எல்லாவற்றையும் ஓரிடத்தில் எளிமையாக அணுகுவதற்காக நிறுவனங்களில் ‘டூல்கிட்’டை உருவாக்கி வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில் மேலாளருக்கான ‘டூல்கிட்’ என்றால், அவர் பணியை செய்வதற்கான தகவல்கள், சுட்டிகள் அனைத்தையும் திரட்டி ஓரிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

போராட்ட வடிவம்

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், வீட்டில் சமைப்பதற்கு முன்பு, அதற்குத் தேவையான மூலப்பொருள்களைப் பட்டியலிடுகிறோம் இல்லையா, அதுவும்கூட ‘டூல்கிட்’தான். இப்படி பல இடங்களில் பரவலாகப் பயன்படுத்தக்கூடிய இந்த ‘டூல்கிட்’டை, போராட்டங்களில் மட்டுமே பயன்படுத்தும் ஒற்றைச் சொல்லாகப் புரிந்துகொள்ளக் கூடாது. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் ‘டூல்கிட்’ பயன்படுத்தப்பட்டுள்ளது, பயன்படுத்தப்பட்டுவருகிறது. சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில், போராட்டத்துக்கென பிரத்யேகமான ‘டூல்கிட்’ ஆவணத்தைப் போராட்டக்காரர்கள் தயாரித்துக்கொள்கின்றனர்.

போராட்டத்துக்கான ‘டூல்கிட்’களில், போராட்டத்தை நடத்துவதற்கான வழிமுறை, போராட்டம் பற்றிய தகவல்கள், அதைச் சமூக ஊடகங்களில் வைரலாக்கும் முறைகள் போன்ற அனைத்துக்கும் வழிகாட்டப்பட்டிருக்கும். அதாவது, போராட்டத்தில் ஈடுபடுவோர் எங்குக் கூடுவது, எத்தனை மணிக்குக் கூடுவது, சமூக ஊடகங்களில் எந்த ஹாஷ்டேக்கைப் பயன்படுத்துவது, காவல் துறை கைது செய்தால் அந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என அனைத்து வழிகாட்டுதல்களும் ‘டூல்கிட்’டில் இடம்பெற்றிருக்கும்.

இணையத் தாக்கம்

இந்தத் தகவல்கள் அடங்கிய ‘டூல்கிட்’டை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிரம் எனச் சமூக ஊடகங்களின் வழியாகப் பயன்படுத்துவதன் மூலம் போராட்டம் குறித்த தகவல்கள் பல தரப்பினருக்கும் சென்றுசேரும். பத்தாண்டுகளுக்கு முன்பு 2011-ஆம்ஆண்டிலேயே அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் போராட்டத்தில் ‘டூல்கிட்’ பயன்படுத்தப்பட்டுள்ளது. இணைய வளர்ச்சியும் சமூக ஊடகத் தாக்கத்தின் விளைவும் ‘டூல்கிட்’க்குப் புதிய அர்த்த்தத்தை உருவாக்கியுள்ளன!

SCROLL FOR NEXT