இளமை புதுமை

‘காசேதான் கதிரேசா!

குள.சண்முகசுந்தரம்

பேராவூரணி கதிரேசன். நம்மை விட்டுக் காணாமல் போய்விட்ட பழைய காசுகளைத் துரத்திக் காதலிக்கும் கிராமத்து இளைஞன்.

அந்தக் குடிசை வீட்டுக்குள் இந்தக் காலத்தில் பயனற்றுப் போன‌ பழைய நாணயங்களை மூட்டை மூட்டையாய் சேகரித்து வைத்திருக்கிறார் கதிரேசன். இதில் எத்தனை காசுகள் இருக்கும் என்று கேட்டால், "பழைய இருபது பைசா காசுங்க மாத்திரமே 13 ஆயிரம் காசு இருக்குண்ணே.." துள்ளலாகப் பதில் வருகிறது கதிரேசனிடமிருந்து.

பி.ஏ., தமிழ் படித்துவிட்டு தமிழ்ப் புலவர் பணிக்காகக் காத்திருக்கும் கதிரேசன் தற்காலிகமாகப் பேராவூரணி ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிகிறார். அந்தக் காலத்து ஒன்று, இரண்டு மற்றும் மூன்று பைசா நாணயங்கள், அதற்கும் முந்தைய காலத்து ஓட்டைக் காலணாக்கள், 1862-ல் வெளிவந்த விக்டோரியா ராணி உருவம் பொறித்த நாணயங்கள், 1835-ல் வெளிவந்த கிழக் கிந்திய கம்பெனியின் நாணயங்கள், சோழர்கள் மற்றும் மொகலாயர்கள் காலத்து நாணயங்கள், இப்போது செல்லுமா செல்லாதா என்று தெரியாத பழைய இந்திய ரூபாய் நோட்டுக்கள் என ரகம் வாரியாகச் சேர்த்து வைத்திருக்கிறார் கதிரேசன். இவை அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இவர் ஓடித் தேடிச் சேர்த்தவை.

"சும்மா வெளையாட்டுப் போக்காத்தான் நாணயங்களைச் சேர்க்க ஆரம்பிச்சேன். தேடத் தேட விதவிதமான நாணயங்கள் கிடைக்க ஆரம்பிச்சதால ஒரு வெறியோட இறங்கிட்டேன்.

எங்க பகுதியில இருக்கிற கோயில்கள்ல, செல்லாத பழைய நாணயங்கள் நிறைய இருக்கிறதா கேள்விப்பட்டு அங்கெல்லாம் போய்ப் பேசி பழைய நாணயங்களைச் சேகரிச்சேன். செல்லாத காசுங்கிறதால நூறு, இருநூற வாங்கிக் கிட்டு அவங்களும் அந்த நாணயங்களை அள்ளிக் குடுத்துட்டாங்க. பழைய அஞ்சு பைசா நாணயம் மட்டுமே என்கிட்ட மூவாயிரம் காசு இருக்கு.

1906 மற்றும்1919-ல் வெள்ளிக் காசுகள் நம்ம நாட்டுல பொழக்கத்துல இருந்திருக்கு. 11 கிராம் எடை கொண்ட அந்த காசுகளும் இப்ப நமக்கிட்ட இருக்கு. ஊருக்குள்ள பழைய நாணயங்களை வைச்சிருந்தவங்க, நான் ஏதோ பிசினஸ் பண்றதா நெனச்சு அதையெல்லாம் எனக்கிட்ட குடுக்கத் தயங்குனாங்க. எங்க ஊரு பஞ்சாயத்துத் தலைவர் என்னையும் எனது நோக்கத்தையும் பாராட்டி ஒரு பாராட்டுப் பத்திரம் குடுத்தாரு. அதைக் கொண்டுபோய் காட்டுன பின்னாடித்தான் மக்கள் என்னைய நம்புனாங்க.

நான் வேலை பார்க்கிற பூம்புகார் ஜவுளிக்கடை முதலாளி ஒரு முஸ்லிம். அதனால, அந்தக் கடைக்கு வெளிநாட்டுப் போக்குவரத்துல இருக்கிற நிறையப் பேரு துணி எடுக்க வருவாங்க. அவங்க என்னோட காயின் கலெக்க்ஷனைத் தெரிஞ்சுக்கிட்டு வெளிநாட்டு நாணயங்களையும் நோட்டுக்களையும் எனக்குக் கொண்டு வந்து குடுத்தாங்க. அப்படித்தான் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா, சீனா, தாய்லாந்து, எகிப்து, இந்தோனேசியா நாணயங்களும் ரூபாய் நோட்டுக்களும் எனக்குக் கிடைச்சுது.

படிச்சுட்டு கொஞ்ச நாளு தஞ்சாவூருல மெடிக்கல் ஷாப்ல் வேலை பார்த்தேன். அங்க நான் தங்கி இருந்த அறையின் மேல் தளத்தில் மோகன்ங்கிறவர் சலூன் கடை வைச்சுருந்தாரு. நான் நாணயம் சேர்க்கிறத கேள்விப்பட்டு அவரும் தன்கிட்ட இருந்த வெளிநாட்டு நாணயங்களை எனக்குக் குடுத்தாரு. அவருகிட்ட அந்த அரிய நாணயங்கள் எல்லாம் இருக்கும்னு நான் கனவுலகூட நெனச்சுப் பார்க்கலை.

தஞ்சையில இருக்கிற சோழமண்டல நாணயவியல் சங்கத்துல என்னோட பெயரைப் பதிவு செஞ்சு வைச்சிருக்கேன். எந்த ஊருல நாணயக் கண்காட்சி நடந்தாலும் அங்கருந்து எனக்குத் தகவல் வந்துரும். அங்கெல்லாம் போயி எனது நாணயங்களைக் காட்சிப்படுத்திட்டு வருவேன். என்னோட முயற்சியைப் பாராட்டுறவங்க, தங்களிடம் உள்ள பழைய நாணயங்களையும் தந்து உற்சாகப்படுத்துவாங்க.

இதுவரை யாருமே சேர்க்காத அளவுக்குப் பழைய நாணயங்களைச் சேகரித்து கின்னஸ் சாதனை படைக்கணும்கிறதுதான் எனது ஆசை. இது பேராசையாக்கூட இருக்கலாம். ஆனா, நிச்சயம் இதைச் சாதிப்பேன்னு என்னோட உள்மனசு சொல்லிக்கிட்டே இருக்கு" தீர்க்கமாகச் சொன்னார் கதிரேசன். நாமும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்போமே!

SCROLL FOR NEXT