பெற்றோருடன் கபிலன் 
இளமை புதுமை

ஊரே காட்சி மேடை!

மிது கார்த்தி

குளிரூட்டப்பட்ட அறையில் ஹைஃபை மக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கும் ஒளிப்படக் கண் காட்சிகள் நட்சத்திர ஹோட்டலிலோ, வசதி வாய்ப்புள்ள பெருநகரத்துக் கூடங்களிலோ நடைபெற்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், கிராமத்து தெருவில் எளிய மக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்ற ஒளிப்படக் கண்காட்சியைப் புதுமையாக நடத்திக் காட்டி அசத்தியிருக்கிறார் ஒரு கிராமத்து இளைஞர்.

கும்பகோணம் அருகே கடமங்குடி என்கிற கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் கபிலன் சௌந்தரராஜன். 29 வயது எம்.காம். பட்டதாரியான இவருக்கு, ஒளிப்படங்கள் எடுப்பதில் அலாதி விருப்பம். சென்னையில் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வரும் இவர், சென்னையிலும் சொந்த ஊரான கடமங்குடியிலும் ஏராளமான ஒளிப்படங்களை எடுத்திருக்கிறார். அந்த ஒளிப்படங்களை கடமங்குடியில் தெருவோர ஒளிப்படக் கண்காட்சியாக நடத்திக் காட்டியிருக்கிறார்.

இந்த யோசனை எப்படி வந்தது? “கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், குடும்ப வறுமையால் அதிகக் கல்வி கட்டணம் கட்டி என்னால் படிக்க முடியவில்லை. இருந்தாலும் அவ்வப்போது எனக்குள் ஒளிப்படம் எடுக்கும் ஆசை எட்டிப் பார்க்கும்.

சென்னையில் வேலைக்கு சேர்ந்த பிறகு, நண்பர் ஒருவர் தந்த கடன் உதவியால் கேமரா வாங்கினேன். அந்த கேமராவைக் கொண்டு என்னுடைய கிராமத்தில் ஒளிப்படங்களை எடுக்கத் தொடங் கினேன். அப்படி எடுக்கும்போது, என் கிராம மக்கள் ‘எங்களை ஃபோட்டோ எடுத்து என்ன பிரயோஜனம்?’ என்று கேட்டார்கள். அப்போதுதான் அவர்களுக்காகக் கண்காட்சி நடத்த வேண்டும் என்ற எண்ணம் உதித்தது” என்கிறார் கபிலன்.

பொதுவாக ஒரு கட்டடத்துக் குள்ளோ மண்டபத்திலோ ஏசி அறைகளிலோ ஒளிப்படக் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், ஒளிப்படங்களை பிரிண்ட் எடுக்கவே கஷ்டப்பட்ட கபிலனால், இது போன்ற ஒளிப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடுசெய்ய முடியுமா? “பெரிய அளவில் கண்காட்சி நடத்த வசதி இல்லாததால், என்னுடைய கிராமத்தில் நான்கு தெருக்கள் கூடும் இடத்தில் கண்காட்சியை நடத்த முடிவுசெய்தேன். கடந்த 2016 முதல் மூன்றாண்டுகள் தொடர்ந்து இந்தக் கண்காட்சியை நடத்தினேன். கஷ்டமான சூழல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக அதையும் நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு பொங்கலுக்கு சென்றபோது மீண்டும் கண்காட்சி நடத்தினேன்.” என்கிறார் கபிலன்.

“எந்த எளிய மக்களை ஒளிப்படம் எடுக்கிறோமோ, அவர்களுக்கு அந்த ஒளிப்படங்களைக் காட்டுவதுதானே பொருத்தமானதாக இருக்கும். அதனால்தான் என் கிராமத்தையும் என் கிராம மக்களையும் இந்தக் கண்காட்சி வழியாகக் காட்டினேன். என்னுடைய இந்த முயற்சியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தபோது அமெரிக்கா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தெல்லாம் என்னை பாராட்டினார்கள். என் கிராமத்தைப் படம் பிடித்தது போலவே, சென்னை காசிமேடு, எண்ணூரிலும் நிறைய ஒளிப்படங்களை எடுத்திருக்கிறேன். இந்த இரண்டு பகுதிகளிலும் தெருவோர ஒளிப்படக் கண்காட்சியை விரைவில் நடத்த முடிவுசெய்திருக்கிறேன்” என்று பெருமிதத்தோடு சொல்கிறார் கபிலன்.

கபிலனின் இந்த புதுமையான முயற்சியை நாமும் வாழ்த்துவோமே!

SCROLL FOR NEXT